Wednesday 8 December 2021

யாருக்கு விழிப்புணர்வு?


       டாக்டர் அன்புமணி ராமதாஸ்                                      மருத்தவர் ராமதாஸ் 

சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஜேய் பீம். இந்தப் படத்தின் நோக்கம் பழங்குடி மக்களான இருளர்களின் வாழ்க்கையை வெளி உலகிற்குக் கொண்டு வரவேண்டும் என்பது மட்டும் தான்.   

 இப்போது இந்தப் படம் ஓரளவு தனது நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதாக நம்பலாம். காரணம் இந்தப் படம் முதல்வரின் கவனத்திற்குப் போய்  அவரும் அவர்களின் குறைபாடுகளைக் கலையவேண்டும் என்பதாக உத்தரவிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த உத்தரவுகளுக்கிடையே  ஓர் எதிர்பாராத நிகழ்வும் நடந்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இது இருளர்கள் பற்றிய ஒரு படம். ஆனால் இந்த படம் வன்னியர் சமூகத்திற்கும் ஒரு திருப்புமுனையாக  அமைந்திருக்கிறது! அவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறுகிறார்கள் அந்த சமுகத்தினர்!

அந்த படத்தில் வருகின்ற ஒரு காட்சி. யாருடைய கண்களுக்கும் அகப்படாது ஒரு காட்சி. சொன்னால் தவிர மற்றபடி யாரும் சட்டைசெய்யாத ஒரு காட்சி.  அந்த காட்சி மேலே உள்ள வன்னியர் தலைவர்களுக்கு எப்படியோ அவர்களுடைய கண்களுக்கு அகப்பட்டுவிட்டது!  அது என்ன காட்சி?  வில்லனின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் அக்கினிக்குண்டம் இருந்ததை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள்!

பொதுவாக அக்கினிக்குண்டம் என்பது வன்னியரிடையே மறந்து போன ஒன்று. அதன் முக்கியத்துவம் என்பது இன்றைய தலைமுறை அறியாதது.   அந்தப் படத்தின் கதைப்படி அது 1995 நடைபெறுகின்ற ஒரு சம்பவம். அந்த காலக்கட்டத்தில் அதற்கு நிறைய முக்கியத்துவம் இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில்  அக்கினிக்குண்டம் மறந்து போன ஒன்றாகிவிட்டது!

இப்போது அப்பாவும் மகனும் அக்கினிக்குண்டத்தை தூசி தட்டி அது எங்கள் உயிர் என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர். நாமும் அதை வரவேற்கிறோம். இது நாள் வரை மறந்து போன ஒன்றை வன்னியர் சமூகத்தின் அடையாளம் என்று வன்னியர்களுக்குக் கொண்டு சென்ற தலைவர்களை நாமும் வாழ்த்துகிறோம்!

ஒரு திரைப்படம் ஏதோ  ஒரு நோக்கத்தில் தயாரிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக இருளர்களின் வாழ்க்கை தான் முக்கியம் என்று கருதி ஜேய் பீம் படம் தயாரிக்கப்பட்டது.  ஆனால் அந்தப் படத்தில் இப்படி ஒரு கிளைக்கதை ஒன்று ஒட்டிக்கொண்டு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நல்லது தான். மறந்து போன ஒன்றை ஞாபகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இந்த படம். ஒரு படத்தில் எத்தனையோ படிப்பினைகளை நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் ஒரு சரித்திரமே இந்த படத்தின் மூலம் வெளியே  வந்திருக்கிறது என்பது பெருமைகுரியதே!

இதனைக் கண்டுபிடித்த வன்னியர் தலைவர்களுக்கு நமது வாழ்த்துகள்! ஒரு சமூகமே இப்போது விழிப்படைந்திருக்கிறது!  இது தான் சாதனை!


No comments:

Post a Comment