இது தான் நிலவரம். ஏற்றுக் கொள்ளுங்கள். இதனை மற்றவர்களால் மாற்ற முடியாது. உங்களால் மட்டுமே மாற்ற முடியும்.
மற்றவர்களைக் குறை சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அதற்கு ஒரு முடிவே கிடையாது.
ஆனால் பிரச்சனை அதுவல்ல. உங்கள் பிரச்சனையைத் தீர்க்க உங்களால் மட்டுமே முடியும். அதனைத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று நோய் வந்தது. நாட்டைப் புரட்டிப் போட்டது. பலர் வேலை இழந்தனர். தொண்டூழிய நிறுவனங்கள் பலருக்கு உதவின. அதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். யாராவது உதவுவார்கள் என்று பிறர் கையை எல்லாக் காலங்களிலும் எதிர்பார்க்க முடியாது. துணிந்தவர்கள் புதிய புதிய முயற்சிகளில் இறங்கினர். பலரால் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற முடிந்தது.
இந்நேரத்தில் நமது தாய்மார்கள் போற்றப்பட வேண்டியவர்கள். குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமே! அவர்கள் தான் துணிந்து களத்தில் இறங்கினர்! சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டனர். எல்லாமே சுமுகமாக நடந்ததாக சொல்ல முடியாவிட்டாலும் அவர்களுக்கு நம்மாலும் முடியும் என்கிற துணிவைக் கொண்டு வந்தது!
பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி. அது இப்போது உண்மையாயிற்று. தலைவலி போய் இப்போது திருகுவலி வந்து விட்டது! கொரோனா பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் இப்போது புதிய திருகுவலி வந்துவிட்டது!
ஆமாம்! வெள்ளம்! வெள்ளப் பேரிடர்! யாரும் எதிர்பாராத வெள்ளத் திருகுவலி! ஒவ்வொரு வருடமும் வெள்ளம் ஏறும் இடங்களில் உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனை அல்ல. எப்போது வரும் என்று அவர்கள் காத்திருப்பார்கள்! வந்ததும் மூட்டை முடிச்சுகளைச் சுருட்டிக் கொண்டு வழக்கமான மண்டபகங்களுக்குச் சென்று விடுவார்கள்! அங்கு அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வுகள்.
ஆனால் இதுவரை வெள்ளம் வராத, எதிர்பார்க்காத, இடங்களில் வந்தது தான் இப்போது ஏற்பட்ட மகா பெரிய பிரச்சனை! அதுவும் வெள்ளம் வீட்டிற்குள் ஏறினால் என்ன ஆகும் என்று இதுவரை அறியாதவர்கள்! இது தான் முதல் தடவை வீட்டிற்குள் ஏறியது வெள்ளம்! உண்மையில் மிரண்டு போனார்கள்! வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களும் பாதிப்பு அடைந்தன! உண்ண உணவில்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. வீடு தண்ணீரில். படுக்க இடமில்லை. இது தான் அவர்களுக்கு முதல் அனுபவம்.
மலேசியர் பலருக்கு இதே நிலை தான். இந்த விபத்திலிருந்து மீண்டு வர வேண்டும். வீட்டில் உள்ள தளவாட சாமான்கள் மீண்டும் வாங்க வேண்டும். பழுதடைந்தவைகள் பழுது பார்க்க வேண்டும். நீரில் மூழ்கிய கார்களைச் சரி செய்ய வேண்டும். வீட்டுத் தவணை, கார் தவணைகளைக் கட்ட வேண்டும். நினைத்தாலே மலைப்பாய் இருக்கின்றது அல்லவா?
ஆனால் கலங்க வேண்டாம். இது தான் வாழ்க்கை. நிலைகுலைந்து போகாதீர்கள். திட்டமிடுங்கள். வங்கிகளிடம் பேசி தவணைகளைக் கட்டுவதைத் தள்ளிப் போடுங்கள். தளவாடப் பொருட்கள் வாங்குவதைத் தள்ளிப் போடுங்கள். அத்தியாவசியம் என்பதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். எப்படிக் கட்ட வேண்டும், எவ்வளவுக் கட்ட வேண்டும், எப்போது கட்ட வேண்டும் என்பதைப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மட்டும் அல்ல நம் நாட்டில் பலருக்கு இப்போது இந்த நிலைமை தான். வங்கிகளும் புரிந்து கொள்ளுவார்கள். நீங்கள் ஒருவராக முடிவெடுப்பதை விட குடுமபத்தினரோடு பேசி முடிவெடுங்கள்.
நம் நாட்டில் இது தான் இப்போதைய நிலவரம்! இதுவும் கடந்து போகும்! துணிவே துணை! இந்த எண்ணம் தான் உங்களை வாழ வைக்கும்!
No comments:
Post a Comment