Friday 17 July 2020

முயற்சிகளை முடக்கி விடாதீர்கள்!


வாழ்க்கையில் நமக்குத் தெரிந்ததெல்லாம் கடைப்பிடிக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

அது தான் முயற்சி. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, எதனைச் சாதிக்க வேண்டும் என்று ஒரே கொள்கையோடு இருக்கிறீர்களோ அந்த முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.

ஒரு வேளை,  குறிப்பிட்ட வேலை தேடலாம். கல்வியில் முனைவர் பட்டத்தைப் பெற முயன்று கொண்டிருக்கலாம்.  இசைத் துறையில் உலகப் புகழ் பெற நோக்கம் கொண்டிருக்கலாம். பெரிய எழுத்தாளனாக ஆர்வம் கொண்டிருக்கலாம். 

இப்படிப் பலப் பல ஆசைகள். தவறு ஏதுமில்லை. ஆனால் அவைகள் வெறும் ஆசைகளாக மட்டும் போய்விடக் கூடாது.  நமது ஆசைகளை முடக்கி விடக் கூடாது என்பது தான் முக்கியம்.

முயற்சிகளில் மட்டும் முடக்கம் வேண்டாம். 

முயற்சிகளுக்கு வயது கட்டுப்பாடில்லை. இந்தியா, கேரள மாநிலத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். 90 வயதுக்கு மேல் உள்ள ஒரு பாட்டி ஒரு சாதனைப் புரிந்திருக்கிறார்.  அது நமக்கு 'ஜுஜுபி' என்று தள்ளிவிடலாம். ஆனால் பாட்டிக்கு அது ஒரு வாழ்நாள் இலட்சியம். அவர்,  90 வயதுக்கு மேல், அரசாங்கப் பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்! ஏன் இந்த வயதில்?  ஏழைகள் என்பதால் இளம் வயதில் பள்ளிக்கூடம் போய் அவரால் படிக்க முடியவில்லை. சாகும் காலத்தில் தான் படித்த ஒரு பெண்ணாக சாக வேண்டும் என்கிற ஒரு வெறி அவரிடமிருந்தது! பேரன், பேத்தி என்று வந்த பிறகு கூட அவரால் அந்த ஆசையை அடக்க முடியவில்லை.  படித்துத் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முயற்சியை மட்டும் அவர் கைவிடவில்லை. அதன் பலன் தான் அவர் படித்த ஒர் பெண்மணியாக தனது வயதான காலத்தில் அந்த ஆசையை அவர் நிறைவு செய்தார்.

அதைத்தான் முயற்சி என்கிறோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் முயற்சிகளை முடக்கி விடாதீர்கள்.

நமது தமிழ்ப்பள்ளிகள் இப்போது நிறைய மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறி வருகின்றனர். எல்லாமே 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள்.  அதன் காரணம் என்ன? விஞ்ஞானத்தின் மேல் உள்ள ஆர்வம். விஞ்ஞானிகளாக மாற வேண்டும் என்கிற ஆர்வம். பல கண்டுப்பிடிப்புக்களை அவர்கள் கண்டுப்பிடித்து உலகளவில் அவர்கள் தங்கப்பதக்கங்களைப் பெறுகின்றனர்.

எல்லாமே முயற்சிகள் தாம்.   அவர்கள் மாணவர்கள் என்பதால் அந்த முயற்சிகளுக்குத் தூண்டுகோளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆனால் உலகளவில் பரிசுகள் பெற வேண்டும் என்கிற முனைப்பு அந்த முயற்சி அந்த மாணவர்களுக்கு உண்டு.  அதனால் தான் அவர்கள் இளம் விஞ்ஞானிகளாகப் போற்றபடுகின்றனர்!

அதனால் சொல்லுகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் முயற்சிகளை வெற்றி பெறும் வரை கைவிடாதீர்கள்! 

முயற்சிகள் முடக்குவதற்கு அல்ல! முயன்று வெற்றி பெறுவதற்கே!

No comments:

Post a Comment