இலஞ்சம் வாங்குவது என்பது குற்றம், குற்றமே தான்!
யார் வாங்க வேண்டும் யார் வாங்கக் கூடாது என்கிற பேதம் எதுவும் கிடையாது! இலஞ்சம் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டிய விஷக்கிருமி. அதில் ஒன்றும் சந்தேகமில்லை.
நமது நாட்டின் காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர், தனது சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
இந்த அதிகாரிகளின் செயல்களினால் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் மிகஎளிதாக நாட்டிற்குள் புகுந்து விடுவதாக அவர் கூறியிருக்கிறார். இப்படி இலஞ்சம் வாங்கிக் கொண்டுச் செயல்படும் அதிகாரிகளைத் துரோகிகள் என்பதாக அவர் வர்ணித்திருக்கிறார்.
காவல்துறையின் தலைவர் கூறுவதில் நியாயமிருக்கிறது என்பதில் சந்தேகிக்க ஒன்றுமில்லை. காரணம் சட்டவிரோதக் குடியறிகளைக் கட்டுப்படுத்துவது அப்படி ஒன்றும் எளிதானச் செயல்களாகத் தெரியவில்லை! அவர்கள் நாடெங்கிலும் மலேசியர்களோடு ஒன்றரக் கலந்து விட்டார்கள்! இப்போது நாம் என்ன செய்ய? காலங்கடந்து புலம்புகிறோமோ?
நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. எல்லைகளில் பணிபுரியும் காவல்துறையினரோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டாலும் இலஞ்சம் ஒழிந்தபாடில்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்! அது வழக்கம் போல, பொழுதொரு வண்ணம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
எல்லையில் பணிபுரிவோருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது தலைக்கு ஒரு தொகை என்று வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! இலஞ்சம் நின்றபாடில்லை!
காவல்துறைத் தலைவர் இந்த எல்லை அதிகாரிகளை மட்டும் துரோகிகள் என்று கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லையில் இல்லாத காவல்துறையினரின் இலஞ்சத்தை அவர்கள் தியாகிகள் என்று சொல்ல வருகிறாரா?
எல்லாமே இலஞ்சம் தான். இங்கு ஒழிக்க முடியாவிட்டால் அங்கும் ஒழிக்க முடியாது! அது தான் உண்மை! இன்றைய நிலவரப்படி மேலிருந்து கீழ் வரை இலஞ்சம் தண்ணீராகப் பாய்ந்து கொண்டிருக்கிறது!
இலஞ்சத்தை யார் ஒழிப்பது? கொடுப்பவர் கொடுக்கவில்லை என்றால் இலஞ்சம் தானாகவே ஒழிந்துவிடும்! ஆனால் காரியம் நடக்காது! அதனால் காரியம் நடக்கும்படி பார்த்துக் கொண்டால் இலஞ்சத்திற்கு வேலை இல்லை!
அதனால் இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் இலஞ்சத்தை ஒழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். ஒழிக! ஒழிக! என்று அதிகாரமே இல்லா தவனும் கத்துகிறான் அதிகாரம் உள்ளவனும் கத்துகிறான்!
அப்படி என்றால் இந்தத் துரோகிகளைத் துரத்துவது எப்படி? இது முற்றிலுமாக அரசாங்கத்தின் பொறுப்பு. பொறுப்புள்ளவர்கள் பதவியில் இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். பொறுப்பற்ற ஊழல்வாதிகள் பதவியில் இருந்தால் துரோகிகளைத் தான் நாம் வளர்த்துக் கொண்டிருப்போம்!
இலஞ்சம் வாங்கும் அனைவருமே துரோகிகள் தாம்!
No comments:
Post a Comment