Friday 10 July 2020

இப்படி ஒரு நல்ல மனிதர்!

நல்ல மனிதர்களைப் பார்ப்பது என்பது மிகுவும் குறைவு தான்!

அதற்காக நல்ல மனிதர்களே இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது! நல்லவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது என்பது உண்மையிலும் உண்மை.  நம்பலாம்!

நேற்றிரவு ஒரு காணொளியை காண நேர்ந்தது.  என்னால் அதனைச் சேமிக்க முடியவில்லை.  அதனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை என்னால் குறிப்பிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்!

இஸ்லாமிய நண்பர் ஒருவர் ஒர் இஸ்லாமியைப் பெண்ணைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் செய்த தவறு என்ன?  அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் வாய் நீளம்! கொஞ்சம் பொறாமை குணம்! அது தான் பிரச்சனை!

சுகு பவித்ரா தம்பதியரைப் பற்றி நாம் அறிவோம். காணொளி சமையல் மூலம் பிரபலம் அடைந்தவர்கள். மேலே குறிப்பிட்ட அந்தப் பெண்மணி தொடர்ந்து அந்தத் தம்பதியரை முகநூலில் தாக்குதலை மேற் கொண்டிருந்தார்! தொடர் தாக்குதல், இழிவானப் பேச்சுக்கள்!

இதனைப் பார்த்த அந்தப் பெரியவர் "ஓர் இஸ்லாமியப் பெண்ணா இப்படி நடந்து கொள்ளுவது?" என்கிற கோபம் அவருக்கு.

அந்த சுகு பவித்ரா தம்பதியர் அப்படி ஒரு இடத்திற்கு வர உழைத்திருக்கிறார்கள். வசதி வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும் இருப்பதைக் கொண்டு கிடைத்த வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

தங்களின் சுய முயற்சியால் உயர்ந்த அந்தத் தம்பதியரை அந்தப் பெண்மணி கேவலமாகப் பேசுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!  அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டிய கோபம்! அது அவருக்கும் இருக்கிறது. 

இந்தப் பொறாமை குணத்தைத் தான் அவர் கண்டித்திருந்தார். இன்னொருவரின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட யாருக்கும் உரிமையில்லை! பொறாமைப்படாதே! முடிந்தால் நீயும் உன் உழைப்பைப் போட்டு முன்னுக்கு வா! அதைத்தான் இஸ்லாம் சொல்லுகிறது என்பது தான் அவரது பேச்சின் சுருக்கம்.

இந்தப் பேச்சின்  போது இன்னொரு விஷயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்மணி ஓர் இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்! இதில் தான் சிக்கல்! அவர் சொன்ன தகவல்களின் படி இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழுவியர்களால் தான் அதிகமான பிரச்சனைகள் வருகின்றன என்பது தான்! 

இப்போது நம் கண்முன்னே நிற்பவர்கள்:  ஸம்ரி வினோத் - இவரால் என்ன நல்லது நடந்திருக்கிறது? அவர் இஸ்லாமியர் ஆனது அவரது விருப்பம். நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர் இந்து மதத்தினரைத் தாக்கித் தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்கிற அவசியமில்லை.  அதைத்தான் அவர் செய்கிறார்!

இன்னொருவர்: முகமது ரிதுவான் அப்துல்லா, இந்திராகாந்தியின் முன்னாள் கணவர். மேலே சொன்னது தான். மதமாற்றம் அவரது சொந்தப் பிரச்சனை. ஆனால் தாயிடமிருந்து ஒரு குழந்தையைப் பிரிப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அவருக்குச் சொல்லித்தர ஆளில்லை! இதை வைத்தே அவர் பிழைப்பு நடத்தி வருகிறார்!

மேலே குறிப்பிட்ட அந்த நண்பர் புதிதாக மதம் மாறியவர்களால் தான் பிரச்சனைகள் எழுகின்றன என்கிறார்.  அதுவும் தினசரி தாம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் இவர்களிடமிருந்து தான் வருகின்றன என்பது தான் அவர் எதிர்நோக்கும் பிரச்சனை!

எப்படியிருந்தாலும் நண்பரே! உங்களின் மனம் திறந்த பேச்சுக்காக தலை வணங்குகிறேன்!

No comments:

Post a Comment