Saturday 11 July 2020

மகிழ்ச்சி தரும் வெற்றிகள்!


சமீப காலங்களில் நடந்த இரண்டு விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன!

அதில் ஒன்று,  விஜய் தொலைக்காட்சியில் நடந்த சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதியினர்.
 இவர்கள் வெற்றியை என்னால் சதாரண வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் பாடியதெல்லாம் கிராமியப் பாடல்கள் மட்டுமே. எந்த சங்கீதப் பின்னணியும் இல்லாதவர்கள்.  எந்தப் பக்கபலமோ, பண பலமோ இல்லாதவர்கள். தங்களுக்கு என்ன இசை தெரியுமோ அதை மட்டுமே அவர்கள் பாடினார்கள். 

அதிலும் குறிப்பாக செந்தில் இளம் வயதிலிருந்தே கிராமிய இசையைப் பாடியே, அந்தத் துறையில் மட்டுமே, தனது திறமையை வளர்த்துக் கொண்டவர். அவர் பாடிய பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை.

இத் தம்பதியினர் பாடிய பாடல்களைக் காணொளியில் கண்டு களித்தவர்கள் இரண்டு கோடிகளுக்கு வந்துவிட்டது!

இவர்கள் ஓர் அதிசயம் என்று தான் சொல்லுவேன். தான் சார்ந்த துறையிலேயே நிலைத்து நின்று, அந்தத் துறையிலேயே வெற்றி பெற வேண்டும் என்கிற இலட்சியத்தோடு உழைத்து, அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்களின் உழைப்பையும், நம்பிக்கையையும் வேறு யாரிடத்திலும் நான் பார்த்ததில்லை!


அதே போல சுகு பவித்ரா தம்பதியினரையும் கணடு நான் வியக்கிறேன்.  தோட்டப்புறத்தில் வேலை செய்யும் மிகச் சாதாரண தோட்டப் பாட்டாளிகள்.  பண பலமோ, பொருளாதார பலமோ, ஆள் பலமோ எதுவும் இல்லை/

ஆனால் பவித்ராவிடம் ஒரு தேடல் இருந்தது. கணவர் மட்டுமே வேலை செய்து வரும் நிலையில்,  குடும்பத்தை நடத்த முடியாத சூழலில், குழந்தைகளைப் பார்க்க ஆளில்லாத நேரத்தில்,  வீட்டிலிருந்து கொண்டே ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தேடல், நெருடல் தொடர்ந்து அவரிடம் இருந்து வந்திருக்கிறது. 

தொழிற்சாலையில் வேலை செய்ய இயலாத நிலையில் வீட்டிலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தேடல் தான் அவரை உயர்த்தியிருக்கிறது! நம்மிடம் தேடல் இருந்தால் நமக்கு உதவிட நாலு பேரை இறைவன் அனுப்பி வைப்பார். அப்படித்தான் அவருடைய நண்பரான ஓர் இந்தோனேசியப் பெண் அவருக்கு உதவ முன் வந்திருக்கிறார். அவர் மூலம் தான் பவித்ராவின் புதிய முயற்சி வெற்றிகரமாக அரங்கேறியிருக்கிறது!

இந்த இரண்டு இளம் தலைமுறையினரின் வெற்றி நமக்கு, இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் மேல், அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

வெற்றி பெற பணம் வேண்டும், பதவி வேண்டும், ஆள் பலம் வேண்டும் என்கிற அனைத்தையும் தகர்த்தெறிந்திருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்!

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள்.  உண்மை தான். நமக்கு மனம் இல்லை என்றால் எதுவும் நடக்காது! மனம் இருந்தால் தான் நாம் நினைத்தவை நடக்கும்!

இவர்களை நினைத்து நாமும் பெருமைப்படுவோம்! நம்மில் ஒருவர் வெற்றி அடைந்தால் பெருந்தன்மையாக பாராட்டுவோம்!

வாழ்த்துவோம்!


No comments:

Post a Comment