வாழ்க்கையில் ஒவ்வொன்றும் படிப்படியாகத் தான் வர வேண்டும்!
பொருளாதார வெற்றி என்றால் அதுவும் ஒரு வெற்றியின் தொடர்ச்சியாகத் தான் இருக்க வேண்டும்.
எதுவும் ஒரே இரவில் வருகின்ற புகழோ, வெற்றியோ மனிதர்களைத் தடுமாறச் செய்துவிடும். காரணம் அந்தப் புகழுக்கோ, வெற்றிக்கோ அவர்கள் தயாராக இல்லை! அது அவர்களின் பட்டியலில் இல்லை! எதிர்பார்க்கவும் இல்லை! அவர்களின் சிந்தனையில் அது எட்டவுமில்லை!
ஒரு பணக்காரனுக்கு லாட்டரிச் சீட்டில் பணம் விழுந்தால் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவன், அதனை எப்படிப் பயன் படுத்திக் கொள்ளுவது என்பதைத் தெரிந்து வைத்திருப்பான்.
அதுவே அவன் ஓர் ஏழையாக இருந்தால்....? அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்காதவனாக இருந்தால்....?
ஒரு குடும்பத்தை நான் அறிவேன். அவர்களின் மகன் ஒருவன், நடுத்தர வயது, என்று எடுத்துக் கொள்ளலாம். விபத்து ஒன்றில் அகப்பட்டு நீண்ட நாள்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருந்தான். ஓரளவு குணமான நிலையில் அவனுடைய காப்புறுதி பணம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அது சில இலட்சங்கள் வந்தன. மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை! பெற்றோருக்கு ஒரு சல்லிக்காசு கொடுக்கவில்லை.ஒரு மெர்சிடிஸ் கார் வாங்கினான், ஒரு கடையைத் திறந்தான், பெண்கள் அவனைச் சுற்றினார்கள், நண்பர்களோடு குடித்து கும்மாளமிட்டான், தனியே வீடு பார்த்து குடும்பத்தை விட்டுப் பிரிந்தான் - எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல எல்லாமே ஒரு முடிவுக்கு வந்தன!
மகனின் கனவு மாளிகை சரிந்தன! மீண்டும் பெற்றோருடன்! கையில் காசில்லை! மீண்டும் பழைய நிலை! இப்போது வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை!
புகழோ, பணமோ எல்லாமே திடீர் திடீர் என்று வருகின்ற போது அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவதில்லை! போட்டி, பொறாமை எல்லாமே வரும்! கெடுதலைச் செய்ய நண்பர்கள் இருப்பார்கள்! காட்டிக் கொடுக்க துரோகிகள் இருப்பார்கள்!
அதைத் தான் கவிஞர் வைரமுத்து அழகாகச் சொன்னார். பணமோ, புகழோ எல்லாமே அளவாகத்தான் இருக்க வேண்டும். கழுத்து வரைப் போனால் அது நம்மை அடிமையாக்கி விடும்! அதுவே போதையாகிவிடும்! நம்மை நிதானம் இல்லாமல் செய்து விடும்!
அதிர்ஷ்டம் என்று ஒன்றுமில்லை! எல்லாமே உழைப்பின் மூலம் வருபவை தான். மற்றவர்களின் கண்களுக்கு"ஏதோ அதிர்ஷ்டம்!" என்று நமது உழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், பொறாமைக் கண்களோடு நம்மை நோகச் செய்வார்கள்!
ஆனால் ஒன்று. நமது திடீர் முன்னேற்றம் அல்லது திடீர் அதிர்ஷ்டம் என்று சொல்லுகிறார்களே அதனைக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனைச் சரியாகக் கையாளாவிட்டால் நமது உழைப்பு அனைத்தும் சரிந்துவிடும்! ஒன்றுமில்லாமல் போய்விடும்! அர்த்தமற்றதாகி விடும்!
அதனால் திடீர் முன்னேற்றமா? கொஞ்சம் ஆற அமர யோசியுங்கள். தெரிந்தவர்களை வைத்து சரியான பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நாம் நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தால் தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment