Monday 13 July 2020

டாக்டர் மகாதிருக்கு இப்படி ஒரு நிலையா!



முன்னாள் பிரதமர், டாக்டர் மகாதிர், இப்போது எதிர்க்கட்சி வரிசையில்,  அதுவும் எந்த எதிர்க்கட்சியையும் சேராத,  சுயேச்சையாக தனது ஐந்து ஆதரவாளர்களுடன் தனியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்!

சில  சமயங்களில் சில விஷயங்கள் நடப்பதைப் பார்க்கும் போது இதைப் பற்றி என்ன சொல்லுவது, நல்லதா கெட்டதா, ஊழ்வினையா என்று எதனையும் தீர்மானிக்க முடியவில்லை!

மலேசியாவின் நீண்டகாலப் பிரதமர், 22 ஆண்டு காலம்  பதவி வகித்தவர். அதன் பின்னர் பதவியிலிருந்து விலகினார். பின்னர்  முந்தைய அரசாங்கத்தைப் பொதுத் தேர்தலில் தோற்கடித்து தனது 93-வது வயதில் மீண்டும் பிரதமர் ஆனவர். 

அவர் இன்னும் பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்லது அதற்கு ஈடாக வேறு ஏதேனும் பதவியில் இருக்க வேண்டியவர். மிகக் கௌரவமாக இருக்க வேண்டிய ஒரு மனிதர். 

ஆனாலும் இன்று அவர் நிலைமை யாரும் எதிர்பாராத ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.  அவருடைய வயதில் அவர் சொந்தமாக முடிவெடுத்துச் செயல் பட்டிருந்தால் அவர் பாராட்டப்பட்டிருப்பார். ஆனால் சுயநலவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் செயல்பட்டதால் அனைத்தும் சரிந்துவிட்டன. 

கடந்தகால ஊழல் ஆட்சியைக் கவிழ்த்தது என்பது, வாராத வந்த மாமணி என்பது போல நம் கைக்கு வந்தது! ஆனால் அவரே ஆட்சியை அமைத்து,  பின்னர் அவரே அந்த ஆட்சியைக் கவிழ்த்தது, அவர் இந்தப் புதிய ஊழலற்ற ஆட்சியை விரும்பவில்லை என்பதைத்தான் அவரது செயல் சுட்டுகிறது என்பது தான் நமது குற்றச்சாட்டு.

எப்படி இருப்பினும் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஊழல் புரிந்தோர் இப்போது புனிதர் ஆகிவிட்டனர்! அவர்களுக்குச் சொர்க்கம் இப்போதே கண்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது!  தேர்தல் எப்போது என்று இப்போதே கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்! 


நம்முடைய ஆதங்கம் எல்லாம் இந்த வயதான டாக்டர் மகாதிர் தனது கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்தாரா அல்லது கெடுதல் செய்தாரா என்று தான் கேட்கத் தோன்றுகிறது!

அவரது இன்றைய நிலைமையைப் பார்க்கும் போது நமக்கு வருத்தம் தான்!

No comments:

Post a Comment