Wednesday 29 July 2020

இது ஓரு பொறுப்பற்றத்தனம்!

முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது அவருடைய ஆதரவாளர்கள் எனப்படுவோர் ஆயிரக் கணக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர்!

ஒரு வேளை அவர்கள் அவருடைய அதி தீவிர ஆதரவாளர்களாக இருக்கலாம்! அல்லது கூட்டத்தைக் காட்டி நீதிமன்றத்தைப் பயமுறுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கலாம்!

இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன! அதிசயம் ஒன்றுமில்லை! 

ஆனால் இம்முறை அவர்கள் சார்பான அரசாங்கம் அதனால் வாயைத் திறக்க முடியவில்லை! அதனால் நீதிபதியை டாக்டர் மகாதிரின் உறவு முறை என்று சொன்னதோடு சரி!

ஆனால் அது பற்றி நாம் பேசப் போவதில்லை.

நாட்டில் இப்போது தலையாயப் பிரச்சனை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா தொற்று நோயினால் ஏகப்பட்ட பாதிப்புக்கள். கடந்த நான்கு மாதங்களாக நான்காயிரம் தொழில்கள் மூடப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது.  இது சாதாரணப் பிரச்சனையல்ல. பலர் வேலை இழந்திருக்கின்றனர். குடும்பங்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

அதனால் அரசாங்கமும் முடிந்த அளவு பிரச்சனைகளைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதனால் தான் நாம் இன்னும் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து வருகின்றோம். அது தான் பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய வேலை. அதைத்தான் நாம் செய்கிறோம்.

ஆனால் மேலே சொன்ன நஜிப்பின் ஆதரவாளர்களுக்கு இது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதா?  அவர்களுக்குக் குடும்பங்கள் இல்லையா! ஆச்சரியமாக இருக்கிறது!

நஜிப் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தி விட்டது! இப்போது அவரின் ஆதரவாளர்கள் கூட பொறுப்பற்றவர்கள்  என்பதை மெய்ப்பித்து விட்டனர்!

ஆதரவாளர்கள் எக்கேடு கெட்டாலும்  அது பற்றி நமக்குக் கவலை இல்லை! அவர்களுக்கே அது பற்றி கவலை இல்லாத போது நாம் கவலைப்படுவதால்  ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஆனால் நாம் கவலைப்படுகிறோம்.  சுகாதார இயக்குனர் அது பற்றி கவலைப்பட்டிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் அந்தக் கூட்டத்தின் பலன் தெரியவரும்.  எத்தனை பேர் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவரும். ஒருவருமே பாதிக்கப்படவில்லை என்றால் இறைவனுக்கு நன்றி!

இது பற்றி நஜிப் கூட தனது ஆதரவாளர்களுக்குச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை! அது ஒரு பொறுப்பற்றத்தனம் என்பதில் ஐயமில்லை.  அவருக்கே அந்தப் பொறுப்பு வரவில்லை என்றால் ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு எப்படி வரும்?

வருத்தமாகத்தான் இருக்கிறது. நாட்டில் மீண்டும் கொரோனா பரவினால் மக்கள் பலவித கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் கொள்ளையடித்தே பழகிவிட்ட  அரசியல்வாதிகளுக்கு?

எது எப்படி இருப்பினும் இறைவன் இந்நாட்டை ஆசிர்வதிப்பாராக!


No comments:

Post a Comment