Thursday 30 July 2020

நஜிப் குற்றவாளி!

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஒரு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!

அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு: பணம் கையாடல், பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது என்று சொல்லலாம் சுருக்கமாக! எல்லாம் பொது மக்களுக்குத் தெரிந்த கதையாகி விட்டது! புதிதாக சொல்ல ஒன்றுமில்லை!

ஆனால் ஒரு முன்னாள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.  உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு தண்டனை எந்த ஒரு முன்னாள் பிரதமருக்காவது கொடுக்கப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை!

1) மொத்தம் 72 ஆண்டுகள் சிறைத் தண்டனை. பின்னர் கூட்டிக் கழித்து 12        ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டது. 12 ஆண்டுகள் ஏக காலத்தில்                    அனுபவிக்க வேண்டும்.
2) வெள்ளி 21 கோடி அபராதம்.
3) பிரம்படி - வயது 67 என்பதால் பிரம்படியிலிருந்து விலக்கு.
4) ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியும், பதினைந்தாம் தேதியும்                       காவல் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும்.

இதைத் தவிர நீதிமன்றத்திற்கு வெளியே வேறு சில குற்றச்சாட்டுகளும் உண்டு. அவர் பதவியில் இருந்த காலத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி,  அவைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன!

அதில் குறிப்பாக மங்கோலிய அழகி அல்துன்யா கொலை வழக்கு. அதில் அவர் மனைவி ரோஸ்மாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

குறிப்பாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட, அவரைப் பற்றிய நீதிமன்ற வழக்கு,  அனைத்தும் இல்லாமலே போயிருக்கும்! அதற்குள் ஏதாவது வழிகளைக் கண்டு பிடித்திருப்பார்!

ஆனால் ஆட்சி மாற்றம் என்று ஒன்று வந்த காரணத்தால் அவர் தப்பிக்க வழியில்லாமல் போயிற்று!

பக்காத்தான் ஆட்சி என்பது 18 மாதங்களே இருந்திருந்தாலும் அவர்களது ஆட்சியின் முக்கியமான செயல்பாடு என்பது இந்த நீதிமன்ற வழக்கு தான்!

அவர்களால் அதனையாவது செய்ய முடிந்ததே அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். பாரிசான் ஆட்சியில் எத்தனையோ ஊழல்கள், கையாடல்கள் என்று பல உண்டு.

இப்போதைய அரசாங்கம் இனி அவர்களுக்குச் சாதகமாகாத்தான் செயல்படும் என்று நம்பலாம்!

ஒரு பிரதமரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நஜிப் ஒரு பெரிய உதாரணம். அவர் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிப்பாரா என்பது நமக்குத் தெரியாது. காரணம் சட்டத்தில் ஓட்டைகள் நிறைய உண்டு. அத்தோடு அரசாங்கத்தின் ஆதரவும் உண்டு. எதுவும் நடக்கலாம்.

ஆனால் இப்படி ஓர் அவமானத்தை சந்திக்க நேர்ந்ததே  அதுவே பெரிய தண்டனை! உலகளவில் அவரைப் பற்றி பேசப் படுகிறதே - அதுவும் அதிகாரத் து‌ஷ்பிரயோகத்திற்காக - அது போதும்!

நீதிமன்றம்,  செல்வாக்கு மிக்க ஒரு முன்னாள் பிரதமரை இப்படித் தண்டித்ததே, இதுவே ஒரு மானக்கேடு!

தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்! இது பிரதமர்களுக்கு பொருந்தும்!

No comments:

Post a Comment