Thursday 9 July 2020

தனித்துப் போட்டியிடுமா?


 வேதமூர்த்தியின் அரசியல் கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சி வருகின்ற 15-வது பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதாக ஆலோசனைக் கூறப்பட்டிருக்கிறது! 

ஒன்று இரண்டல்ல!  சுமார் 36 தொகுதிகளில் அதுவும் சுயேச்சையாக!  அந்த அளவுக்கு அவரது கட்சி பலம் வாய்ந்ததா என்பது நமக்குச் சந்தேகம் இருந்தாலும் அப்படி ஒரு ஆலோசனைக் கூறப்பட்டிருப்பது சரி தானா?

சரியில்லை என்பதே எனது கருத்து.  மன்னிக்கவும் அந்த அளவுக்கு வேதமூர்த்தி இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதாக நான் நினைக்கவில்லை.

இந்த முறை அவருக்குக் கொடுத்த வாய்ப்பைக் கூட அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதாகத்தான் நான் சொல்லுவேன்!

இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட "மித்ரா" அமைப்பின் மூலம் அவர் பெயர் இன்னும் கெட்டுப் போனதே தவிர அவருக்கு எந்த நல்ல பெயரையும் கொண்டு வரவில்லை என்பது தான் உண்மை!

அந்த அமைப்பின் மூலம் யாருக்குக் கடன் வசதிகள் கிடைக்க வேண்டுமோ அது யாருக்கும் கிடைக்கவில்லை என்பது தான் பொதுவாக மக்களின் குரல் அமைந்திருக்கிறது! பெரிய தொழிலில் உள்ளவர்கள் மொத்தமாக அள்ளிக் கொள்ளுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது!

அதற்கு முன்னர் என்ன நடந்ததோ அதே தான் இவரது தலைமையிலும் நடந்திருக்கிறது.  புதிதாக இவர் எதையும் சாதித்து  விடவில்லை! சிறு வியாபாரிகளுக்குச் சேர வேண்டிய எதுவும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை!

இந்த நிலையில், அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டும், அதனைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் அவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர "அவர்களைப் போலத்தான் இவரும்!" என்கிற கருத்தை இவரும் உருவாக்கி விட்டார்!

கொடுக்கப்பட்ட பொறுப்பை உதவியாளர்களிடம் தள்ளிவிட்டு இந்தியரிடையே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதெல்லாம் சரிபட்டு வராது என்பதை வேதமூர்த்திஅவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாரையும் போல இவரும் ஓர் அமைச்சர் போலவே நடந்து கொள்ளும் அளவுக்கு அவர் இந்தியர்களிடையே புகழ் பெறவில்லை என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியர்களுக்காக, இந்து கோவில்களுக்காக, அவர் நடத்திய போராட்டங்களை நாம் மறக்கவில்லை.  ஆனால் "மித்ரா" என்பது இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் கொடுத்த நல்லதொரு வாய்ப்பு. அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதாவது "கோயில்களுக்கு மட்டும் தான் நான் போராடுவேன் அவர்கள் முன்னேற்றத்திற்காக நான் போராட மாட்டேன்" என்பது போல அமைந்து விட்டது அவரது போக்கு!

அவருக்கு ஆலோசனை கூற எல்லாருக்கும் உரிமை உண்டு. அவர் ஓரு பொது மனிதர். நமக்கும் அவரைப் பற்றியான ஒரு விமர்சனம் உண்டு. அவருடைய பலம் அவருக்குத் தெரியும்!

மற்றபடி அவரே முடிவு செய்யட்டும்! யாருடனும் கூட்டணி சேர அவருக்கு வாய்ப்புக்கள் குறைவு. தனித்து என்றாலும் கூட்டணி என்றாலும் எத்தனை என்பதை அவர் தாம் முடிவு செய்ய வேண்டும்!

அமைச்சராக இருந்த போது அவரது பலம் நமக்குத் தெரிந்து விட்டது! அது போதும்!

No comments:

Post a Comment