Thursday 9 July 2020

அதிகாலை தான் நல்ல நேரமா?

அலோர்ஸ்டார் - கெடா மாநில அரசாங்கத்திற்கு யார் நல்ல நேரம் குறித்துக் கொடுத்தார்களோ தெரியவில்லை!


 ஆமாம், ஒரு பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் காலை ஒரு மணி அளவில்  அரசாங்க அதிகாரிகளால் உடைத்து நொறுக்கப்பட்டது என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.

நூறு ஆண்டு காலம் பழமையான ஓர் ஆலயம் - யாரும் கேட்பாரற்ற  நிலையில் - உடைக்கப்பட்டிருக்கிறது.

பாஸ் அரசாங்கம் மாநில ஆட்சியைக் கையிலெடுத்ததும் செய்த முதல் வேலை!  அவர்கள் முதல் வேலையே வழிபாட்டுத் தலங்களை உடைப்பது தான் என்று அவர்கள் காட்டி விட்டார்கள்!

மாநில அரசாங்கம் மட்டும் அல்ல மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி வழிபாட்டுத் தலங்களை உடைப்பதிலா முனைப்புக் காட்ட வேண்டும்?

மக்களின் தேவை எல்லாம் ஊழற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டும். அரசாங்கத்தில் பணி புரிவோர் தங்களது கடமைகளை ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். விலைவாசிகள் குறைய வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் தேவைகள் இவைகள் தாம். 

ஆனால் நடப்பது என்ன?  நாம் சாமி கும்பிடக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? 

நூறு ஆண்டுகள் ஓர் ஆலயம் அங்கு இருந்து வருகிறது. ஒரு வேளை அந்த இடம் கொஞ்சம் இடைஞ்சலாகக் கூட இருக்கலாம்.  இத்தனை ஆண்டுகள் அந்த இடஞ்சலை ஓர் இடைஞ்சலாக யாரும் பாரக்கவில்லையே!  இடைஞ்சலாக இருந்தால் அதற்கான மாற்று இடம் மட்டும் அல்ல அங்கு ஒரு ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்க வேண்டும் இப்போது குறை சொல்லுவோர்!

மாநில அரசாங்கத்தின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி குமரேசன் என்ன சொல்லுகிறார்? வழக்கம் போல மக்களைத் தான் குறை சொல்லுகிறார்.  கடைசியில் இதனை மதப் பிரச்சனையாக்க வேண்டாம், அரசியல் பிரச்சனையாக்க வேண்டாம் என்கிறார்! அதனால் வாக்கை மட்டும் எங்களுக்குப் போட்டு விடுங்கள்! எங்களுக்கு வேறு எதுவும் உங்களிடமிருந்து வேண்டாம் என்கிறார்!

இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  நாம் சொல்லுவது அவர்கள் காதுக்கு எட்டப் போவதில்லை. இந்தியர் சிறப்பு அதிகாரியோ, ம.இ.கா.வோ அரசாங்கம் சொல்லுவதைத்தான் கேட்பார்கள். நம்மைத் தான் இவர்கள் குறை சொல்லுவார்கள். அதைத்தான் சிறப்பதிகாரி குமரேசன் செய்திருக்கிறார்.

மாற்று இடம் கிடைக்கும் வரை,  அங்கு ஆலயம் கட்டி முடிக்கும் வரை, இந்த ஆலயம் உடைப்பட்டிருக்கக் கூடாது என்பது தான் மக்களின் விருப்பம்.

இந்த அதிகாலை உடைப்பில் முக்கியப் பங்கு குமரேசனுக்குத் தான் போய்ச் சேரும். ஆக நேரத்தையும் அவர் தான் குறித்து தந்திருக்க வேண்டும். 

என்னவோ கடிதம் போட்டிருக்கிறார்களாம் அது வரை பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment