Tuesday 14 July 2020

இந்தியர்கள் என்ன இருட்டா?

ஆளுங்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாக் காலங்களிலும் நாடாளுமன்றத்தில் இந்தியர்களைக் கேவலப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது!

அது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை!   நாடாளுமன்றம் கூடிய முதல் நாளே அந்தத் தாக்குதல் அரங்கேயிருக்கிறது.

இத்தனைக்கும் எத்தனை நாளைக்கு இந்த அரசாங்கம் தாக்குப் பிடிக்கும் என்பதே இன்னும் யாரும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை! எந்த நேரத்திலும் கவிழலாம் என்று மக்கள் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! 

இந்த நேரத்தில்,  அம்னோ,  பாலிங்,  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசீஸ் அப்துல் ரகீம்,   பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டுவை தரக்குறைவாகப் பேசி இருப்பது அவர் மனதில் உள்ளது என்ன என்பது ஓரளவு நமக்குப் புரிகிறது. "இருட்டாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியவில்லை" என்கிற பொருளில் அவர் பேசியிருப்பது இந்தியர்களை இழிவுபடுத்துவது தான் அவரின் நோக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

முதல் நாள் நாடாளுமன்ற கூட்டத்தில் இப்படி அவர் பேச வேண்டிய அவசியம் என்ன? இவர் அம்னோவைச் சேர்ந்தவர் என்கிற முறையில் இன்றைய அரசாங்கம் தொடர்வதை அவர் விரும்பவில்லை. அம்னோவைப் பொறுத்தவரை இப்போதைய அவர்களது "மந்திரம்" எல்லாம் எப்போது தேர்தல்? என்பது மட்டும் தான்!

அவரது நோக்கம் எல்லாம் பிரதமர் முகைதீன் யாசின், அவரது தரப்பினர், பொதுத் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பது தான் அம்னோவின் நோக்கம்.  முடிந்தவரை நடப்பில் உள்ள அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது தான் அம்னோவின் நோக்கமாக உள்ளது!

அதனை அவர் வெற்றிகரமாகச் செய்து விட்டார், இந்த "இருட்டு" என்பதன் மூலம்!

எப்படியோ அம்னோ தரப்பினர் தொடர்ந்து இந்தியர்களைக் கேவலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சென்ற பொதுத் தேர்தலில் நாம் எப்படி நமது எதிர்ப்பைக் காட்டினோமோ அதனையே தான் இப்போதும் செய்ய வேண்டும்.  திமிர் பிடித்தவர்களுக்கு திமிர் தான்  பதிலாக இருக்க வேண்டும்!

நம்மை மதிக்காதவனை நாம் ஏன் மதிக்க வேண்டும்?

No comments:

Post a Comment