கோரோனா தொற்று நோயினால் "நேரம் நல்ல நேரம்!" என்று பாடுகின்ற சூழலில் நாம் யாரும் இல்லை!
பலர் வேலை இழந்திருக்கின்றனர். குடும்பங்கள் நிலை குலைந்திருக்கின்றன. இப்படித்தான் தினசரி திணறல்கள் மக்களிடையே.
ஆனால் என்ன செய்வது? ஏற்றம் இறக்கம் தான் வாழ்க்கை. யாரும் தப்பிக்க வழியில்லை! நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். எதிர்த்துத் தான் போராட வேண்டும்!
வேலை இழந்த ஒரு பெண்மணி தனது மோட்டார் சைக்கிளில் ஒரு சிறு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பத்தாய் காய் வியாபாரம். வேறு என்ன அவர் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பத்தாய் காய் தான் வேளியே தெரிந்தது. வீடு வீடாக சென்று கொண்டிருந்தார்.
என் வீடு வந்த போது என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். "வேலை இல்லை! தொழிற்சாலை மூடிவிட்டார்கள்!" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தேன். நம் ஆள்கள் யாரும் சிறு சிறு வியாபாரங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டியது நமது கடமை என்று. ஆமாம் வேலை இழந்த அவர்களுக்கு வேறு வகையில் நாம் என்ன செய்து விட முடியும்?
முதலில் அந்தப் பெண்மணியைப் பாராட்ட வேண்டும். நமது பெண்கள் இப்படித் துணிவாக வெளியே வந்து தங்களுக்குத் தெரிந்ததை செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே, அதற்கே பெரிய தைரியம் வேண்டும்.
வேலை கிடைக்கும் போது வேலை கிடைக்கட்டும். அது வரை குடும்பத்தைப் பட்டினி போட முடியுமா? துணிந்து செயல் பட வேண்டும். அதைத்தான் நமது பெண்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
ஆமாம் இந்த நிலையில் நமது கடமை என்ன? அவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களும் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற நாலு காசு சம்பாதிக்கட்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதால் நாம் எந்த வகையிலும் குறைந்து விடப் போவதில்லை.
இன்றைய அவர்களது நிலை, நாளைக்கு நமக்கும் வரலாம்! எதுவும் நிரந்தரமில்லை!
அதனால் அனைத்தையும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம்.
இப்படிச் சிறு சிறு வியாபாரம் செய்கிறவர்களுக்கு நமது ஆதரவு கரம் நீட்டுவோம்!
No comments:
Post a Comment