Friday, 31 December 2021
இது நமக்குப் பாடம்!
சென்ற ஆண்டை வாழ்த்துவோம்!
ஒவ்வொரு ஆண்டும் நாம் பல சிறப்புக்களை எதிர்பார்ப்பதுண்டு. அதே போலத்தான் 2021 - ம் ஆண்டும்.
நமது நாட்டை புரட்டி போட்ட ஆண்டு என்றால் அது 2021 - ம் ஆண்டு தான். நமது நாடு மட்டும் அல்ல. உலக நாடுகள் அனைத்தும் பல சிரமங்களைச் சந்தித்தன.
கோரோனாவை ஒழித்துக் கட்டுவதில் எல்லா நாடுகளும் தீவிரம் காட்டின; காட்டுகின்றன. ஆனால் கோரோனா தான் மக்களை ஒழித்துக்கட்டுவதில் தீவிரம் காட்டுகின்றது!
இது ஏன் சிறப்பான ஆண்டு என்று பார்த்தால் இந்த ஆண்டு மக்களுக்கு அதுவும் குறிப்பாக எப்போதும் ஆர்ப்பாட்ட வாழ்க்கையில் அமிழ்ந்திருக்கும் நமது தமிழ் மக்களுக்குச் சரியான பாடமாக அமைந்துவிட்டது.
வேலை இல்லை என்பதே நமக்குப் பெரிய அடி.யாக விழுந்தது! வேலை இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை நமது மக்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்; உணர்ந்திருக்க வேண்டும்.
இந்த வேலை இல்லை என்கிற நிலை வந்த போது ஒரு சிலர் பல முயற்சிகளை எடுத்து புதிய பாதையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
நமது பெண்கள் பலர் வியாபாரத் துறையில் தங்களது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி. எவ்வளவோ முயற்சிகள் நாம் எடுத்தாலும் அசைந்து கொடுக்காத நம் மக்கள் இப்போது "வேறு வழியிலை!" என்கிற நிலை வரும் போது வியாபாரத்தில் இறங்கிவிட்டார்கள்!
இந்த ஒரு முயற்சியே போதும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். நம் மக்களுக்கு வியாபாரமே கைகொடுக்கும் என்பதைப் போகப் போக புரிந்து கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டு தமிழர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டு தான்.
Thursday, 30 December 2021
ஏன் இந்த தடுமாற்றம்?
ஒற்றுமைத்துறை அமைச்சர், டத்தோ ஹலிமா, மித்ரா (இந்தியர் உருமாற்றம்) மைப்புப்பற்றிப் பேசும் போதெல்லாம் ஏனோ பதற்றமடைகிறார்! தடுமாறுகிறார்! அது ஏன் என்று நமக்கும் புரியவில்லை!
அவர் அமைச்சில் இருக்கும் மித்ரா நிதி என்பது அவர் மட்டுமே அறிந்தது. அவர் மட்டுமே அதற்கான விளக்கம் கொடுக்கப்பட வேண்டியவர். அதைத்தான் மக்கள் கேட்கின்றனர். அதற்கான பதிலை அவர் சொல்லிவிட்டு போக வேண்டியது தானே! ஓர் அமைச்சருடைய பணி அது. ஆனால் ஏனோ தயங்குகிறார்!
அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கின்றப் போது அந்த நிதியில் ஏதோ மோசடிகள் நடந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர் ஏற்படுத்துகிறார்!
நாடாளுமன்றத்தில் நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும், எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்படும் என்று ஏற்கனவே அவர் தான் அறிவித்திருந்தார். ஆமாம்! வருகின்ற ஜனவரி மாதம் 15-ம் தேதி அந்நிதிக்கான விளக்கம் அளிக்கப்படும் என்று அவரே உறுதியளித்தார். ஆனால் இப்போது அவரே அதற்கு "நோ!" சொல்லி விட்டார். 15-ம் தேதி நல்ல நாள் இல்லை போல!
இப்போது மித்ரா என்கிற தலைப்பு போய் இந்திய சமூக செயல் திட்டம் என்கிற தலைப்பில் விளக்கம் தரப்படும் என்பதாகக் கூறுகிறார்! நிதி இல்லாமல் நீங்கள் எப்படி ஓர் அடி கூட எடுத்த வைக்க முடியாதோ அதே போல தான் இந்திய சமூகமும்! மித்ராவை ஏன் நீங்களே முடக்குகீறீர்கள் என்பது நமக்குப் புரியவில்லை.
ஒரு பொறுப்பான அமைச்சராக இருக்கும் டத்தோ ஹலிமா இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது அரசாங்கத்தின் மீதான வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
இன்று நடந்து கொண்டிருக்கும் அரசாங்கம் ஒரு தற்காலிக அரசாங்கம் தான். ஒரு சிறிய கூட்டணியுடன் சேர்ந்து என்னமோ ஓடிக் கொண்டிருக்கிறது! நமக்கு அதில் காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் தற்காலிகமான அரசாங்கத்தில் அல்லது நிரந்தரமற்ற அரசாங்கத்தில் கூட தில்லுமுள்ளுகள் நடக்கின்றனவோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது!
அதைவிட இந்த தற்காலிக அரசாங்கத்தில் "கிடைத்ததை சுருட்டுவோம்!" என்கிற மனப்போக்கு அனைவருக்கு வந்து விட்டதோ என்று தான் எண்ண வேண்டியுள்ளது!
ஆக, நேர்மையோ, உண்மையோ எதுவும் தேவையில்லை என்பது தான் இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகளின் நிலை! அதுவும் இந்தியர்கள் என்றால் எதையும் செய்யலாம் என்கிற மனப்பக்குவத்தில் அமைச்சர்கள் இருக்கிறார்கள்! அதில் ஒருவராக எடுத்துக்காட்டாக டத்தோ ஹலிமாவைச் சொல்லலாம்!
அமைச்சரின் போக்கில் தடுமாற்றம் தெரிகிறது! அதனைச் சரிசெய்து கொள்வது என்றால் நேர்மை தேவை! அது தான் எல்லாக் காலங்களிலும் நன்மை பயக்கும்!
அது சரியானதே!
தமிழ்ப்பள்ளிகள் சட்டபூர்வமானதே!
Wednesday, 29 December 2021
இது எதிர்பார்த்தது தான்!
இஸ்லாமிய இளைஞர்கள் கோவிலை சுத்தப்படுத்துவதும், இந்து, கிறிஸ்துவ இளைஞர்கள் பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதும் சாதாரணமாக நடைபெறும் காரியங்கள் அல்ல. அப்படி செய்யவும் மாட்டார்கள். இது பற்றி நாம் அறிந்தது தான்.
அவசர ஆபத்து நேரங்களில் யாரும் "நீ என்ன மதம்!" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. கஷ்டத்தில் இருக்கும் போது உதவுவது என்பது மனிதாபிமானம் மட்டும் தான்.
அப்படித்தான் நமது சமயங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. ஆபத்துக்கு உதவாதவன் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன என்பது தான் நமக்கு வேதம் சொல்லும் பாடம்.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது! யாரும் எதிர்பாராத ஒரு சில விஷயங்கள் நடந்துவிட்டன!
பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளம் புகுந்து நாசம் பண்ணிவிட்டது! நமது இளைஞர்கள் அதனைச் சுத்தப் படுத்திக் கொடுத்தார்கள். அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அது இயற்கையான, இரக்கமுள்ள நமது குணம். அதற்கு இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து ஏதேனும் எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்த்தேன்! ஆனால் ஒன்றும் வரவில்லை! வேறு பக்கமிருந்து அது வந்தது!
பள்ளிவாசலை இந்திய இளைஞர்கள் சுத்தப் படுத்தியதைப் பார்த்து ஓர் இந்து கோவிலுள் வெள்ளம் புகுந்ததை அறிந்து இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் அந்த இந்துக் கோவிலைச் சுத்தம் பண்ணிக் கொடுத்தனர். ஒன்றுமில்லை! இதெல்லாம் மனிதாபிமான உதவிதான். பெரிதாக ஒன்றுமில்லை!
இப்போது வருகின்ற எதிர்ப்பு என்பது ஓர் இந்து கோவிலை இஸ்லாமிய இளைஞர்கள் சுத்தம் பண்ணியது தவறு என்பதாக அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்! பள்ளிவாசலை சுத்தம் பண்ணியது தவறு என்று அவர்கள் சொல்லவில்லை. இந்து கோவிலை சுத்தம் பண்ணியது தவறு என்று தான் சொல்லுகின்றனர்.இந்து கோவிலை சுத்தம் பண்ணியது தவறு என்றால் பள்ளிவாசலை சுத்தம் பண்ணியதும் தவறு தானே! இது என்ன ஒரு பக்க நியாயம்!
ஒரு விஷயம் நமக்கு இப்போது புரிகிறது. வெள்ளம் ஆரம்பித்த போது உடனடி உதவி அல்லது நிவாரணம் எதுவும் அரசாங்கப் பக்கமிருந்து வரவில்லை என்பதாக குற்றச்சாட்டு உண்டு. பொது மக்களே ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உதவிக் கொண்டார்கள். இந்த இடைக்காலத்தில் அரசாங்கம் இந்த அறிஞர்களிடமிருந்து ஆலோசனைக் கேட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது! அதனால் தான் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை! ஒருவர் முடியும்! என்பார். இன்னொருவர் முடியாது! என்பார்.
ஆனால் ஒன்று: நாம் இதனை எதிர்பார்த்தது தான்! பொதுவாகவே அறிஞர்கள் இழுத்தடிப்பார்களே தவிர ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள்! களத்தில் இருப்பவர்களுக்குத் தானே வலி தெரியும்! கருத்து சொல்லுபவர்களுக்கு ஒரு வலியும் இல்லை!
இது தான் நிலவரம்!
இது தான் நிலவரம். ஏற்றுக் கொள்ளுங்கள். இதனை மற்றவர்களால் மாற்ற முடியாது. உங்களால் மட்டுமே மாற்ற முடியும்.
மற்றவர்களைக் குறை சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அதற்கு ஒரு முடிவே கிடையாது.
ஆனால் பிரச்சனை அதுவல்ல. உங்கள் பிரச்சனையைத் தீர்க்க உங்களால் மட்டுமே முடியும். அதனைத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று நோய் வந்தது. நாட்டைப் புரட்டிப் போட்டது. பலர் வேலை இழந்தனர். தொண்டூழிய நிறுவனங்கள் பலருக்கு உதவின. அதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். யாராவது உதவுவார்கள் என்று பிறர் கையை எல்லாக் காலங்களிலும் எதிர்பார்க்க முடியாது. துணிந்தவர்கள் புதிய புதிய முயற்சிகளில் இறங்கினர். பலரால் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற முடிந்தது.
இந்நேரத்தில் நமது தாய்மார்கள் போற்றப்பட வேண்டியவர்கள். குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமே! அவர்கள் தான் துணிந்து களத்தில் இறங்கினர்! சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டனர். எல்லாமே சுமுகமாக நடந்ததாக சொல்ல முடியாவிட்டாலும் அவர்களுக்கு நம்மாலும் முடியும் என்கிற துணிவைக் கொண்டு வந்தது!
பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி. அது இப்போது உண்மையாயிற்று. தலைவலி போய் இப்போது திருகுவலி வந்து விட்டது! கொரோனா பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் இப்போது புதிய திருகுவலி வந்துவிட்டது!
ஆமாம்! வெள்ளம்! வெள்ளப் பேரிடர்! யாரும் எதிர்பாராத வெள்ளத் திருகுவலி! ஒவ்வொரு வருடமும் வெள்ளம் ஏறும் இடங்களில் உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனை அல்ல. எப்போது வரும் என்று அவர்கள் காத்திருப்பார்கள்! வந்ததும் மூட்டை முடிச்சுகளைச் சுருட்டிக் கொண்டு வழக்கமான மண்டபகங்களுக்குச் சென்று விடுவார்கள்! அங்கு அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வுகள்.
ஆனால் இதுவரை வெள்ளம் வராத, எதிர்பார்க்காத, இடங்களில் வந்தது தான் இப்போது ஏற்பட்ட மகா பெரிய பிரச்சனை! அதுவும் வெள்ளம் வீட்டிற்குள் ஏறினால் என்ன ஆகும் என்று இதுவரை அறியாதவர்கள்! இது தான் முதல் தடவை வீட்டிற்குள் ஏறியது வெள்ளம்! உண்மையில் மிரண்டு போனார்கள்! வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களும் பாதிப்பு அடைந்தன! உண்ண உணவில்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. வீடு தண்ணீரில். படுக்க இடமில்லை. இது தான் அவர்களுக்கு முதல் அனுபவம்.
மலேசியர் பலருக்கு இதே நிலை தான். இந்த விபத்திலிருந்து மீண்டு வர வேண்டும். வீட்டில் உள்ள தளவாட சாமான்கள் மீண்டும் வாங்க வேண்டும். பழுதடைந்தவைகள் பழுது பார்க்க வேண்டும். நீரில் மூழ்கிய கார்களைச் சரி செய்ய வேண்டும். வீட்டுத் தவணை, கார் தவணைகளைக் கட்ட வேண்டும். நினைத்தாலே மலைப்பாய் இருக்கின்றது அல்லவா?
ஆனால் கலங்க வேண்டாம். இது தான் வாழ்க்கை. நிலைகுலைந்து போகாதீர்கள். திட்டமிடுங்கள். வங்கிகளிடம் பேசி தவணைகளைக் கட்டுவதைத் தள்ளிப் போடுங்கள். தளவாடப் பொருட்கள் வாங்குவதைத் தள்ளிப் போடுங்கள். அத்தியாவசியம் என்பதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். எப்படிக் கட்ட வேண்டும், எவ்வளவுக் கட்ட வேண்டும், எப்போது கட்ட வேண்டும் என்பதைப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மட்டும் அல்ல நம் நாட்டில் பலருக்கு இப்போது இந்த நிலைமை தான். வங்கிகளும் புரிந்து கொள்ளுவார்கள். நீங்கள் ஒருவராக முடிவெடுப்பதை விட குடுமபத்தினரோடு பேசி முடிவெடுங்கள்.
நம் நாட்டில் இது தான் இப்போதைய நிலவரம்! இதுவும் கடந்து போகும்! துணிவே துணை! இந்த எண்ணம் தான் உங்களை வாழ வைக்கும்!
Tuesday, 28 December 2021
வேண்டுமென்றே புறக்கணித்தாரா பிரதமர்?
மீண்டும் குசும்பு செய்யும் ஸாகிர் நாயக்!
இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாயக் மீண்டும் தனது குசும்புத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!
அவர் சமய போதகராக நடந்து கொள்ளவில்லை. வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்! அவர் எங்கெங்கு இருந்தாரோ அங்கெல்லாம் சமயப் பிரச்சனைகள் தீவிரமாக இருந்தன.
ஏற்கனவே அவரைப்பற்றி நிறையவே புகார்கள் எழுந்தன. ஆனால் அரசாங்கம் அந்தப் புகார்களைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டதாக அறிகிறோம். எப்படியோ அவருக்கு அரசாங்கத்தில் நல்லதொரு பெயர் இருக்கிறது என்பதாகவே தெரிகிறது.
இப்போது அவர் சொல்ல வருவது என்ன? கிறிஸ்துமஸ் பெருநாளில் கிறிஸ்துவர்கள் வீட்டுக்குப் போகக் கூடாது, அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லக் கூடாது, அவர்களிடமிருந்து பரிசுகள் பெறக் கூடாது - இவைகள் அனைத்தும் இஸ்லாமுக்கு எதிரானவை என்பதாக அவர் கூறுகிறார்!
நம் நாட்டில் எத்தனையோ இஸ்லாமிய அறிஞர்கள் இருந்திருக்கின்றனர் இன்னும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாரும் இப்படியாகச் சொன்னதில்லை. இவர் அவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்!
ஸாகிர் நாயக் இப்போது சொல்ல வருவது என்ன? பிற சமயத்தினர் இஸ்லாமியர்களின் பெருநாட்களில் அவர்களின் இல்லத்திற்குச் செல்லக் கூடாது. இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள் சொல்லக் கூடாது. அவர்களிடமிருந்து பரிசுகள் பெறக் கூடாது. இதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.
இந்த போதனை நமக்குப் புதிது. நாம் கேள்விப்படாத ஒன்று. மலேசியாவில் நாம் அப்படி இருந்ததில்லை. எப்படியோ நாம் பழைய இஸ்லாமிய முறைப்படி பழகிவிட்டோம். ஸாகிர் சொல்லுவது புதிய போதனையாகக் கூட இருக்கலாம்!
ஸாகிர் சொல்லுவதற்கு மரியாதை உண்டு என்றால் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இனி மலேசியர்கள் அவரவர் பெருநாட்களை அவரவர் கொண்டாடட்டும். அல்லது இப்படியும் செய்யலாம். இஸ்லாமியர்களின் பெருநாட்களில் மற்ற சமயத்தினர் கலந்து கொள்ள வேண்டாம். அது தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. நமக்குள் எந்த பிரச்சனையும் வேண்டாம். யாரையும் நாம் நரகத்திற்கு அனுப்புவது நமது வேலையல்ல. எல்லா சமயத்தினரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.
ஸாகிர் நாயக் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். அவர் அதனைத் தொடர்ந்து கொண்டே போவது யாருக்கும் நல்லதல்ல. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவருக்கும் அது சந்தோஷத்தைக் கொடுக்கும்.
நமக்குள் ஏன் பிரச்சனை? வேண்டாம் என்றால் வேண்டாம்! அவ்வளவு தான்!
எங்கே போய் ஒளிந்தீர்கள்?
நாடே வெள்ளப் பேரிடரினால் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில் பாஸ் கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்று பினாங்கு மாநில துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி கேள்வி எழுப்பியிருப்பது சரியானது தான்.
Monday, 27 December 2021
இதுவும் கடந்து போகும்!
இது தான் பாதை! இது தான் பயணம்! நமக்குத் தெரியுமா என்ன?
கொரோனா என்று சொல்லி ஒரு நோய் வந்தது. பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. நமக்கு மட்டுமா வந்தது? உலகத்திற்கே வந்தது!உலகத்தையே புரட்டிப் போட்டது போல நமது நாட்டையும் புரட்டிப் போட்டது!
யாரால் என்ன செய்ய முடிந்தது? ஒன்றும் செய்ய முடியவில்லை! ஏதோ "ஊசி போடுங்கடா சாமி! கொஞ்சமாகவாவது சமாளிக்கலாம்!" என்று சொல்லப் போக அதனையும் செஞ்சோம்! இப்போது கொஞ்சமாகவாவது சமாளிக்கிறோம்!
ஆனால் இந்த சமாளிப்பெல்லாம் எம்மாத்திரம்? உயிர் வாழ வேண்டுமே! பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்கள். வேலை இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். கோரோனாவைத் தடுக்க ஊசி போட்டாயிற்று. அப்படியும் புண்ணியமில்லை. வயிற்றுப்பசிக்கு ஏதேனும் ஊசி இருந்தால் .........! நல்லாத்தான் இருக்கும்! ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்! அவர்கள் முதலாளிகளால் தான் வாழ்கிறார்கள்!
ஏதோ கொஞ்சம் தேறி வருகிற நிலையில் மீண்டும் வந்தது ஆபத்து. இந்த முறை வெள்ளம்! வெள்ளம்! வெள்ளம்! நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. நமக்கே தெரியும் எங்கே வெள்ளம் வருமென்று. ஆனால் எதிர்பாராதது நடந்தது."நான் எங்கும் வருவேன்! யார் என்னைத் தடுப்பது?" என்று பீறீட்டுக் கொண்டு வந்தது! யாரால் என்ன செய்ய முடிந்தது? ஒன்றும் செய்ய முடியவில்லை!
எங்கெல்லாம் வராது என்று நினைத்தோமோ அங்கெல்லாம் வெள்ளம் கொடிகட்டிப்பறந்தது! சாலைகள், வீடுகள், கார்கள் அனைத்தும் வெள்ளத்தால் பெருத்த சேதம் அடைந்தன! அரசாங்கம் தனது கடமைகளைச் செய்யவில்லை என்றால் இப்படித்தான் நடக்கும். வெள்ளம் வந்த போது அரசாங்கம் என்ன செய்வது என்று கையைப் பிசைந்ததே தவிர மக்கள் தான் - நமது இளைஞர்கள் தான் - ஓடி ஓடி உதவினார்கள்!
உதவுகின்ற பழக்கம் நமக்கு இயற்கையாகவே வருகிறது. ஆபத்து அவசரத்தில் நமது இளைஞன் தான் முன் நிற்கிறான்! அது அவனது இயல்பு. மன்னிக்க! பொதுவாகவே இளைஞர்கள் துடிப்போடு தான் செயல்படுகிறார்கள். அதனை இந்த வெள்ள நேரத்தில் நாம் பார்த்தோம்.
ஆனால் இந்த முறை நாம் எதிர்பார்த்ததை விட மிக மோசமான வெள்ளம். நாம் எங்கோ எதிர்பார்த்தோம். அது கடைசியில் நமது வீட்டு வாசற்படியிலேயே நின்று கொண்டு கதவைத் தட்டுகிறது!
என்ன செய்வது? இது தான் வாழ்க்கை! வீடு தண்ணீரில் நிற்கிறது. வங்கியில் வீட்டுக்கடனைக் கட்ட வேண்டுமே! கண்களில் கண்ணீர முட்டுகிறது. கார் தண்ணீரில் மூழ்கிவிட்டது! அதனை சரி செய்ய வேண்டும். வங்கிக்கும் மாதத் தவணை இன்னும் முடியவில்லை! அட! தண்ணீரிலேயே "போயிருந்தால்" கூட ஒரு பிரச்சனையும் இல்லாமல் போயிருக்கும்!
நில்லுங்கள்! தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள்! இந்த பிரச்சனை என்பது உங்களுக்கு மட்டும் அல்ல. பலரும் எதிர்நோக்குகிற பிரச்சனை தான். எத்தனையோ பிரச்சனைகளை இதற்கு முன்னர் நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். என்ன ஆயிற்று? அதனை எல்லாம் சமாளித்து தானே வந்திருக்கிறோம்!
இப்போது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? வந்ததை வரவில் வைப்போம்! செய்வதை செலவில் வைப்போம்!
எல்லா வலிகளும் ஒரு நாள் மறந்து போகும்! கடந்த காலங்களில் என்ன நடந்ததுவோ அதே போல இந்த காலத்திலும் இதுவும் கடந்து போகும்!
Sunday, 26 December 2021
ஏன் தமிழ் மாதங்கள் இல்லை?
தமிழ் மாதங்கள இல்லை!
Saturday, 25 December 2021
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
கிறிஸ்துமஸ் கொண்டாடும் மலேசிய கிறிஸ்தவ பெருமக்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
இந்த முறை பல இடறல்களுக்கிடையே பெருநாள் கொண்டாடப்படுகிறது என்பதை ஞாபத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
மலேசியாவில் மட்டும் அல்ல உலகெங்கிலும் ஒரே நிலை தான் கூட்டிக் கழித்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஒரு பக்கம் கொரொனா தொடர்பான செய்திகள் இன்னொரு பக்கம் பெருவெள்ளம். சில நாடுகளில் நில நடுக்கம், சில நாடுகளில் பொங்கி எழும்பும் பூகம்பம்! தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது.
நமது நாட்டில் கொரொனாவோடு வெள்ளமும் சேர்ந்து கொண்டது. வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு, அது ஏற்படுத்திய சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. பெருத்த சேதம். இது நாள்வரை ஏற்படாத அளவுக்கு இந்த முறை பெருத்த சேதம்.
பெருநாள் கொண்டாடும் நமது சொந்தங்களில் கூட பலர் ஆபத்துக்களைச் சந்தித்திருக்கலாம். அல்லது உறவுகள் கூட தொற்று, வெள்ளம் என்று பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
இந்த நேரத்தில் நமது ஆட்டம், பாட்டம் என்பதைக் கொஞ்சம் தியாகம் செய்யுங்கள். சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ஏன்? நமக்கே பலரது உதவி நாளையே தேவைப்படலாம். யார் எந்த சூழலில் எப்படி வாழவோம் என்கிற உறுதி இல்லை.
இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் அடக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அக்கம் பக்கத்தைப் பாருங்கள். உதவிகள் செய்யத் தயாராக இருங்கள்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
Friday, 24 December 2021
இவரல்லவோ அமைச்சர்!
Madagaskar's Police Minister, Mr.Serge Gelle
Thursday, 23 December 2021
அரசாங்கம் உதவவில்லை!
Wednesday, 22 December 2021
பட்டத்தோடு பறந்தார்!
வெள்ளம் ஏற்படுத்துகின்ற பாதிப்புகள்!
இந்த முறை வெள்ளம் நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியும் போது மனதுக்குக் கஷ்டம் தான். எப்போது இந்த மழை ஓயும் என்று பிரர்த்தனை செய்வதை விட வேறு வழி தெரியவில்லை. ஆமாம், கடைசியில் இறைவனிடம் தானே தஞ்சம் அடைய வேண்டியுள்ளது!
ஒவ்வொரு ஆண்டும் எங்கு மழை பெய்யும், எங்கு வெள்ளம் ஏறும் என்பதெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த ஆண்டு அதெல்லாம் பொய்த்துப் போனது! ஆத்துலேயும் தண்ணீர், வீட்டுப்படியிலேயும் தண்ணீர், மாடிவீட்டிலும் தண்ணீர், மண் குடிசையிலும் தண்ணீர். தண்ணீர், தண்ணீர்! ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை!
இது போன்ற பெருமழை 1971 - ம் ஆண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர் 50 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அந்த பெருமழை. ஆமாம், 1971-ம் ஆண்டு பெய்த மழை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சிரம்பான் நகரில் இரண்டு முக்கிய பாலங்கள் இடிந்து விழுந்த ஞாபகம் இருக்கிறது! அத்தோடு சிறிய சிறிய மரப்பாலங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன! அது போன்ற சேதத்தை அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. இந்த முறை வழக்கம் போல லிங்கியில் தான் பலத்த சேதம்.
இந்த ஆண்டு பெய்கின்ற தொடர் மழையில் பகாங் மாநிலம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பொருட் சேதங்கள், மனித சேதங்கள் என்று தொடர்கிறது. வழக்கமாக ஒரு மாதம் பெய்கின்ற மழை ஒரே நாளில் பெய்ததாக தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது. அது தான் இந்த அளவு சேதத்திற்குக் காரணம்.
சாலைகளும் விதிவிலக்கல்ல. பல சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. வெள்ளப் பேரிடர் காலங்களில் இதெல்லாம் நடப்பவை தான். கூட்டரசு சாலைகளில் சுமார் 98 சாலைகள் பாதிப்பு அடைந்திருக்கின்றன. அதே சமயம் மாநிலங்கள் அளவில் சுமார் 126 சாலைகள் பாதிப்பு அடைந்திருப்பதாக "வணக்கம் மலேசியா" இணையத்தளம் கூறுகிறது. அது மட்டும் அல்ல இன்று காலையில் (22/12/21) ஷா அலாம் பகுதியில் பெய்த அடைமழையில் சில நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வளவு பாதிப்புக்கிடையே விலைவாசிகள் ஏறாமல் இருக்க முடியுமா? இனி அதற்கும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.
நல்லதே நடக்க பிரார்த்திப்போம்!
Tuesday, 21 December 2021
இது நமது கலாச்சாரம் அல்ல!
Super Markets and Convenience Stores Looted
இது நமது மலேசியர்களின் கலாச்சாரம் அல்ல! மிகவும் வெட்கக் கேடான விஷயத்தை நாம் செய்திருக்கிறோம்.
வெள்ளப் பாதிப்பு என்பது அனைவருக்கும் உண்டு.ஏழைகளுக்கும் உண்டு பணக்காரர்களுக்கும் உண்டு. ஆனால் பணக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. வெள்ளப் பாதிப்பு வரும் போதெல்லாம் பணக்காரர்கள் பல வழிகளில் ஏழைகளுக்கு உதவி வருகின்றனர். அதுவும் வெளியே தெரிவதில்லை.
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மழையில், தாமான் ஒன்றில், பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேரங்காடிகள் மைடீன் மார்ட், கே.கே. மார்ட், 7 இலவன், பசார் ராயா ஜிமார்ட் போன்ற அங்காடிகள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம். இன்னொரு பக்கம் "இதாண்டா சான்ஸ்!" என்று கொள்ளையடிக்கும் ஒரு கும்பல்!
ஆபத்துக் காலங்களில், நொந்து போயிருக்கும் நேரத்தில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இது போன்ற சம்பவங்கள் மனத்தில் காயங்களை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை!
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அங்காடிகள் தாம் நமக்குப் பல வழிகளில் வெள்ள அபாயங்கள் ஏற்படும் போதெல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறார்கள். உணவுப் பொருள்களைக் கொடுத்து நமது பசியைத் தீர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற் காரியங்கள் எதுவும் வெளியே தெரிவதில்லை.
எல்லாவற்றையும் விட இது போன்ற ஆபத்தான நேரங்களில் கடைகளில் புகுந்து கொள்ளையடிப்பது, சூறையாடுவது என்பது மலேசியர்களிடையே இல்லாத ஒரு பழக்கம் என்பது தான் கடந்த கால நமது வரலாறு. ஆனால் இப்படி ஒரு பழக்கம் எங்கிருந்து முளைத்து வந்தது என்பது தெரியவில்லை! எதற்கெடுத்தாலும் வெளிநாட்டவரை குற்றம் சொல்லி நாம் பழகிவிட்டோம். இப்போதும் கூட சொல்லலாம். ஆனால் சி.சி.டி.வி. கேமராக்கள் பொய் சொல்லாது என்பதை நாம் அறிவோம்!
எப்படியோ இது மிகவும் இழிவான ஒரு செயல். நமது மலேசிய கலாச்சாரத்திற்கு எதிரானது. இதனை நாம் வளர விடக்கூடாது. நாம் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்கள் உலகரங்கில் நம்மைப் பார்த்து ஏளனமாக பார்க்கும்படியான ஒரு சூழலை நாமே ஏற்படுத்திக் கொண்டோம்!
இந்த வெள்ளம் நிறையவே சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களுக்கும் சரி, சிறு வியாபாரிகளுக்கும் சரி கடைகளை வைத்து வியாபாரம் செய்கிறவர்களுக்கும் சரி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும்,
எது நடந்தாலும் நனமைக்கே! இதுவும் கடந்து போகும்! இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்!
Monday, 20 December 2021
இது தற்காலிகம் தான்!
பக்தர்களுக்கு இந்த விடுமுறை மகிழ்ச்சி அளிக்கலாம். காரணம் அன்று பெரும்பாலானோர் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். மேலும் அது இந்து மக்களின் முக்கியத் திருவிழா.
இப்போது நமக்குச் சொல்லப்பட்டதானது இந்த தைப்பூச விடுமுறை என்பது நிரந்தரம் அல்ல என்பது தான். கெடா மாநில ஆட்சிக்குழுவில் எடுத்த முடிவுக்கிணங்க அடுத்த ஆண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து விடுமுறைக் கிடைக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிக்குழு, விடுமுறை தேவையா அல்லது தேவை இல்லையா, என்பதை விவாதித்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில ஆட்சிக் குழு தைப்பூச விடுமுறை பற்றி விவாதிப்பதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறது! இது இந்துக்களின் திருவிழா என்பதால் உடனடியாக எந்த முடிவையும் எடுக்கக் கூடிய அதிகாரத்தில் மாநில அரசாங்கம் இல்லை! வருந்துகிறோம்.
ஆனாலும் இதற்கு முந்தைய அரசாங்கத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி மாநில அரசாங்கம் விடுமுறை கொடுத்து வந்திருக்கிறது. இப்போது உள்ள குற்றச்சாட்டு எல்லாம் மாநில மந்திரி பெசார் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தைப்பூச விடுமுறையை அவர் விரும்பவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. அவர் வந்த பின்னர் தைப்பூச விடுமுறையை ரத்து செய்தார். இரண்டு இந்து கோவில்களை உடைத்தார். இதெல்லாம் பாஸ் கட்சியின் சாதனையாக பாஸ் கட்சியினர் கருதுகின்றனர்! மற்ற சமயத்தினரின் கோவில்களை உடைப்பது அவர்களின் திருவிழா விடுமுறையை ரத்து செய்வது போன்றவை தான் பாஸ் கட்சியின் மாபெரும் வெற்றி விழா!
மற்ற மாநிலங்களில், தைப்பூச விடுமுறை அளிக்கும் மாநிலங்களில், இது போன்ற சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றைய தினம் விடுமுறை, அவ்வளவு தான்! கெடா மாநிலத்தில் மட்டும் அது ஏன் வேறு விதமாக இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.
எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே பேசும் மாநில மந்திரி பெசார் ஏன் இதனை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்? மற்ற எல்லாவற்றிலும் நியாயம் பேசும் அவர் இந்தப் பிரச்சனையையும் மாநில ஆட்சிக்குழுவில் பேசி ஏன் ஓரு நிரந்தர தீர்வைக் காண முடியாது? அந்த அளவுக்கு அவரால் செய்ய முடியாததா?
மாநில மந்திரி பெசார் இதற்கு ஒரு முடிவைக் காண வேண்டும். அப்படி ஒன்றும் தீர்வே காண முடியாத பிரச்சனை அல்ல இது. ஆட்சிக்குழு முடிவு செய்வதை ஏன் தள்ளிக் கொண்டே போக வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் பேசி, கூடி தான் முடிவு எடுக்க வேண்டும் என்றால் அப்புறம் ஏன் மாநிலத்திற்கு ஒரு மந்திரி பெசார்?
தற்காலிகம் வேண்டாம்! நிரந்தரம் தான் வேண்டும்!
Sunday, 19 December 2021
மகிழ்ச்சியா? சிரிப்பா? கூடாது!
வட கொரிய மக்கள் 10-ம் ஆண்டு நிறைவு நாளில் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்
சில சமயங்களில் நடக்கும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் கூட ஆழ்த்தலாம்.
ஆனால் உலகில் நடக்கும் பல விஷயங்கள் நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்த நிகழ்வுகள் நமக்கு வேடிக்கை; அவர்களுக்கு அது வாடிக்கையாகக் கூட இருக்கலாம்.
அது அவர்களது பாரம்பரியமாகக் கூட இருக்கலாம். நாம் கேலி செய்தால் அது அவர்களின் மனத்தைப் பாதிக்கும்.
வட கொரிய அரசாங்கம் அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் இறந்த 10 ஆண்டு நிறைவு நாளில் இன்றைய அதிபரும், அவரது மகனுமான கிம் ஜோங் உன், கொரிய மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்!
ஆமாம், எச்சரிக்கை என்பதாகத்தான் செய்திகள் கூறுகின்றன! என்ன தான் எச்சரிக்கை? இறந்த தனது தந்தையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் கொரிய மக்கள் பதினோரு நாள்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. அதே சமயத்தில் மது அருந்தவும் கூடாது. நாடு சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த வேளையில் - அதாவது பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் - கொரிய மக்கள் பதினொரு நாள்களும் அந்த சோகத்தில் பங்கு பெற வேண்டும் என்பதாகக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது!
மக்கள் தங்களது பிறந்த நாள்களைக் கொண்டாடக் கூடாது. அது குற்றம். யாரேனும் இறந்து போனால் சீக்கிரமாக காரியங்களை முடித்து அடக்கம் செய்ய வேண்டும். சத்தம் போட்டு அழுவது குற்றம். காவல் துறையினருக்கு இது மிகவும் சவாலான காலம். ஏற்கனவே அப்பன், மகன் சர்வாதிகார ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் இல்லை. இப்போது சட்டம் போட்டு சிரிக்கக் கூடாது, மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்றால் அதனையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!
சரி, ஏற்றுக்கொள்ளா விட்டால் அல்லது தெரியாத்தனமாக சிரித்துவிட்டால் என்ன ஆகும்? வீட்டிலுள்ள குழந்தைகளால் இந்த சட்டத்தை எப்படி பின்பற்ற முடியும்? என்ன தான் "உம்மனா மூஞ்சி" ஊராக இருந்தாலும் குழந்தைகள் சிரிப்பு, ஆட்டம் பாட்டம் என்பது தான் அவர்களது உலகம். இவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
ஆனால் அது தான் சட்டம். சர்வாதிகார நாடுகள் என்றால் சட்டம் என்றால் சட்டம் தான். சட்டத்தை மீறினால் காவல் துறை கைது செய்யும். அப்புறம் அவர்கள் என்ன ஆவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. காரணம் ஏற்கனவே சிரித்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன என்பது பரம ரகசியம்.
நமக்கு என்னவோ துக்ளக் ஆட்சி என்று நினைத்தாலும் நடப்பது என்னவோ கேலிக்கூத்தான ஆட்சி என்று தான் சொல்ல வேண்டி வருகிறது!
நன்றி! முத்துக்கிருஷ்ணன் சார்!
அதற்கு விடை இன்று தான் கிடைத்தது. இன்று தமிழ் மலர், ஞாயிறு மலரில் (19.12.2021) மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் அதற்கான விடை கிடைத்தது.
அன்று பல தோட்டங்களைப் பற்றி பேசும் போது பலருக்குத் தோட்டங்களின் பெயர்கள் தெரியவில்லை. ஒன்று அவர்களுக்கு அத்தோட்டங்களின் பெயர்களை உச்சரிக்கத் தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம் அல்லது மிக எளிமையாக சொல்லுவதற்கு இரண்டாம் கட்டை, நான்காம் கட்டை, பத்தாங் கட்டை என்று சொல்லுவது எளிதாக இருக்கலாம்!
நான் மூன்றாங் கட்டை, ஆறாங் கட்டை தோட்டங்களில் வசித்தவன். இன்னும் இதே வரிசையில் ஏழாம் கட்டை, எட்டாங் கட்டை, பத்தாங் கட்டை தோட்டங்களும் உண்டு. இன்றும் அத்தோட்டங்கள் அப்படித்தான் அழைக்கப்படுகின்றது. அத்தோட்டங்களின் பெயர்களைச் சொன்னால் அது அந்நியமாகப்படுகிறது! குறைந்தபட்சம் இங்குள்ளவர்களுக்கு இன்னும் கட்டை தான்!
இந்த கட்டை என்கிற வார்த்தையின் பொருள் விளங்குகிறது. அதாவது ஆறாவது மைல், ஏழாவது மைல் என்பது தான் பொருள். ஆனால் ஏன் அந்த கட்டை என்பது தான் விளங்கவில்லை! அந்தக் கட்டை எங்கிருந்து வந்தது?
நான் இளமைக்காலம் முதல் தூர அளவைக் குறிப்பதற்கு கற்களால் ஆன மைல்கற்களைத்தான் பார்த்து வருகிறேன். ஆனால் கட்டைகளால் ஆன கட்டைத் தூண்களை நான் பார்த்ததில்லை! அதாவது தூரத்தைக் குறிக்க!
ஆனால் அது அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரமற்றதாகவோ நமது மக்கள் அதனைக் கட்டை என்கிற சொற்களையே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்! அது இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்பது தான் ஆச்சரியம்! குறைந்தபட்சம் நமது பேச்சு வழக்கில்!
கட்டைத் தூண்கள் என்பதும் அந்த கட்டைத் தூண்கள் தேக்கு மரத்தால் ஆனது என்பதும் எனக்குப் புதிய செய்தி. தேக்கு மரம் என்னும் போது பர்மா தான் அதற்குப் பேர் போன நாடு. ஆக, பர்மாவின் தேக்கு மரத்தைக் கொண்டு அக்கால மலேயாவில் மைல்களைக் குறிக்க கட்டைத் தூண்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது வியப்பான செய்தி தான். அது எந்தக் காலக்கட்டம் என்பது நமக்குத் தெரியவில்லை. நானும் அப்படி ஒரு கட்டைத் தூண்களைப் பார்த்ததில்லை! ஆசிரியர் குறிப்பிடுவது போல அது 1800-ம் ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பே இருக்கலாம்!
இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டும். பிரிக்ஃபீல்ட்ஸ் (Brickfields) என்னும் சொல்லுக்கு செங்கல் திடல் அல்லது செங்கல் களம் என்பதும் நான் அறியாத செய்தி தான். இந்த கட்டுரையின் மூலம் அதனையும் நான் தெரிந்து கொண்டேன்.
நன்றி நண்பரே!
குறிப்பு: மேலே உள்ள படத்திற்கும் நமது கட்டைத் தூண்களுக்கும் சம்பந்தமில்லை.
Saturday, 18 December 2021
நலமோடு திரும்ப வேண்டும்!
Dr.Mahathir Mohamad
நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை!
அவரைப் பற்றி முழுமையாகவே நாம் அறிந்திருக்கிறோம். இரண்டு முறை மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்தவர்.
இப்போது அவருக்கு வயது 96. வழக்கமான இருதய சிகிச்சை சோதனைக்காக ஐ.ஜே.என். (IJN) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது போன்ற சோதனைகள் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். இருதய சிகிச்சைப் பெற்றவர்கள் தொடர்ந்து தொடர் சோதனைகளை மேற்கொள்வது இயல்பு தான்.
பார்வையாளர்கள், நெருங்கிய உறவுகளைத்தவிர, வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதியில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. எல்லாமே கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்கும். காரணம் அவரின் வயது அப்படி. மிக எளிதில் தொற்று பரவக்கூடிய அபாயம் உண்டு. அதனால் தான் இவ்வளவு கெடுபிடிகள்!
மகாதிர் மீதான பல்வேறு விமர்சனங்கள் நமக்கு உண்டு. நாட்டை மிக உயரிய நிலைக்குக் கொண்டு சென்றவர் அவர். அதே சமயத்தில் நாட்டை தொப்பென்று போட்டு தொந்தி சரிய வைத்தவரும் அவர்!
அவர் திட்டங்கள் எதுவும் முழுமையான வெற்றி பெற்றதாக ஒன்றுமில்லை. பூமிபுத்ராக்கள் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர். அதற்காக பல கோடிகள் கொட்டப்பட்டன! ஆனால் கோடிகள் குப்பைக்குப் போனது தான் மிச்சம்! அதில் ஒரு சிலர் கிளர்ந்து எழுந்தனர்! ஆனாலும் எத்தனை நாளுக்கு என்கிற கேள்விகள் தான் தொடர்கின்றன! ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர்! இலஞ்சம், ஊழல் என்பதில் அவர்களை அடித்துக் கொள்ள ஈடு இணையில்லை! வர்த்தகம், தொழில் மயம் என்பதெல்லாம் இலஞ்சம், ஊழல் என்பதாக மாறிப் போயிற்று! உச்சியிலிருந்து அடிபாதம் வரை நீக்கமற நிறைந்துவிட்டது!
இந்தியர்கள் விஷயத்தில் அவர் நினைத்தது நிறைவேறிற்று! அவருக்கு உகந்த இந்திய தலைகளை வைத்து அதனை நிறைவேற்றிக் கொண்டார்! இதுவரையில் இந்தியர்களால் தலைதூக்க முடியாமல் இருப்பது அவருக்கு அதிலே ஒரு சந்தோஷம்!
ஆனாலும் அவர் மேல் நமக்கு எந்த வெஞ்சினமும் வேண்டாம். நாமும் அவரின் சில செயல்களால் பலனடைந்தவர்கள் தான். ஆனால் கடைசியாக அவர் செய்த செயலை - பக்காத்தான் அரசாங்கத்தைக் கவிழ்த்ததை - நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஆனாலும் எல்லாம் நன்மைக்கே! என்று நினைத்து நமது காரியங்களை நாம் செய்வோம்! என்ன தான் ஆயிரம் ஆயிரம் திட்டங்கள் போட்டாலும் நம்மை நசுக்கி விட முடியாது என்பதை மறக்க வேண்டாம்!
டாக்டர் மகாதிர் நலமே வரவேண்டும். அவருக்காக பிரார்த்தனை செய்வோம்!
Friday, 17 December 2021
பிரதமர் துறைக்கே ஏன்?
ம.இ.கா. தலைவர் - பிரதமர்
ம.இ.கா. வின் 75-ம் தேசியப் பொதுப் பேரவையில் தலைமை உரையாற்றிய ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பிரதமருக்கு ஓரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்தியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மித்ரா அமைப்பு மீண்டும் பிரதர் துறைக்கே மாற்றப்பட வேண்டும் ஏன்னும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
இந்த கோரிக்கையை விடுப்பதன் மூலம் அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. அந்த அமைப்பு பிரதமர் துறையின் கீழ் இருந்தாலும் சரி அல்லது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இருந்தாலும் சரி அதில் என்ன வித்தியாசம் என்பது நமக்குப் புரியவில்லை.
மித்ரா அமைப்போ அல்லது அதற்கு முன்னர் செடிக் அமைப்போ பெரும்பாலும் பிரதமர் துறையின் கீழ் தான் இருந்து வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. இதற்கிடையே பதினெட்டு மாத பக்காத்தான் ஆட்சியில் பிரதமர் துறையில் ஓர் அமைச்சரின் கீழ் செயல்பட்டு வந்திருக்கிறது.
ஆக மொத்தமாகப் பார்க்கும் போது இந்த மித்ரா அமைப்பு முழுமையாக ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஒரு சிறிய இடைவெளியில் தான் அது கைமாறியிருக்கிறது! அதுவும் ஒரு பதினெட்டு மாதங்கள்!
பிரதமர் துறையோ அல்லது ஒற்றுமைத்துறையோ மித்ராவின் உள்ளும் புறமும் அறிந்திருப்பவர்கள் ம.இ.கா.வினர்! இப்போது தான் நாங்கள் ஒன்றுமே அறியாதவர்கள் என்பது போல தலைவர் பேசுகின்றார்! இப்போது அவரே ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது மித்ராவின் பயன்படுத்தாத நிதியை சுமார் 40 கோடி ரிங்கிட்டை மீண்டும் கருவுலத்திற்கே திரும்ப அனுப்பிவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்!
இந்திய சமூகம் பொருளாதார சிக்கல்களினால் எவ்வளவோ பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது கல்வியாக இருக்கலாம். சிறு, குறு,பெரு வியாபாரிகளாக இருக்கலாம். திருப்பி அனுப்பிவிட்டதன் மூலம் ம.இ.கா.வினர் என்ன தான் சாதித்தார்கள்? இதன்மூலம் அவர்கள் மக்களுக்கு என்னதான் சொல்ல வருகிறார்கள்? அல்லது இந்தியர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்?
மித்ராவை பிரதமர் துறைக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பது நமக்குத் தெரியவில்லை. செடிக்கின் ஆரம்ப காலக்கட்டத்திலும் புகார்கள் எழவே செய்தன! அப்போதும் ம.இ.கா. வின் பெயர் தான் அடிபட்டது. அப்போதும் அவர்கள் தான் நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன!
எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம். ம.இ.கா. வினர், ம.இ.கா. தலைவர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்கிற நினைப்பு இருக்கும்வரை செடிக் அல்லது மித்ரா தோல்வியில் தான் போய் முடியும்! இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிகள் உதவப் போவதில்லை. அரசாங்கம் உதவினாலும் அதற்கு ம.இ.கா.வே தடை போடும்! முட்டுக்கட்டையாக இருக்கும்!
ஆக நமக்கு நாமே எஜமானன்! அவ்வளவு தான்!
Thursday, 16 December 2021
மழை விட்டாலும்.......!
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை! இது தான் சிம்புவின் கதை!
மாநகரம் சிம்புவுக்கு ஒரு வெற்றிப் படம். அந்த வெற்றி சும்மாவரவில்லை. அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் பல பணத் தடங்கல்களைத் தாண்டித் தான் இந்தப் படத்தை வெளியிட்டார்.
அதுமட்டுமல்ல. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் சிம்புவின் தாயார் உஷா கண்ணீர் விட்டார். தந்தை ராஜேந்தர் கண்ணீர் விட்டார். கடைசியில் சிம்புவும் கண்ணீர் விட்டார். அதனை நாம் விரும்பவில்லை. தனது பெற்றோரைக் கண்ணீர் விடவைப்பது எவ்வளவு பெரிய சோகம் என்பதை சிம்பு உணர்ந்திருக்க வேண்டும்.
எப்படியோ அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இனி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சுபம் கூறும் வேளையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறது நிலைமை! ஆம்! தந்தை ராஜேந்தர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார்! மீண்டும் சவடால்! மீண்டும் வழக்கு! மீண்டும் மகனை வைத்துக் கொண்டு பகடைக்காய் ஆட்டம் ஆடுகிறாரோ ராஜேந்தர்?
தந்தை ராஜேந்தரை விடுவோம். நடிகர் சிம்பு இனி தனது பிரச்சனைகளைத் தானே கையாள வேண்டும். இனியும் தொடர்ந்து ஏதோ விவாதத்திற்கு உரிய மனிதராகவே சினிமாவில் வலம் வருவாரானால் அது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அவர் நல்ல நடிகராக இருக்கலாம். அவரைச் சுற்றி ஒரு மாபெரும் இரசிகர் கூட்டம் கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் உலகில் எதுவும் நிரந்தரமல்ல. ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கையோடு மாபெரும் தோல்விப் படம் கூட வரலாம்! எதுவும் சாத்தியம்!
நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். சிம்புவைச் சுற்றி இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். யாரிடம் என்ன பிரச்சனை என்பதை அறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும். இனி பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு போவது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அது தனக்குப் பொருளாதார ரீதியில் நட்டம் ஆனாலும் பரவாயில்லை. அதற்கு ஒரு முடிவு காண வேண்டும். இனியும் எவ்வளவோ சம்பாதிக்க முடியும். மறப்போம்! மன்னிப்போம்! அவ்வளவு தான்!
எல்லாக் காலங்களிலும் பிரச்சனைகளோடு தொடர்ந்து வாழ முடியாது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் யாருமே சிம்பு என்றால் ஓடி ஒளிவார்களே தவிர வாரி அணைக்கப்போவதில்ல! இந்த உண்மையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்குத் தெரிந்த சொலவடை அவரும் அறிவார். "காற்றுளள போதே தூற்றிக்கொள்"
நமக்குள்ள வருத்தம் எல்லாம் திறமையில்லாதவன் கூட ஏதோ ஓர் அதிர்ஷ்டத்தில் சினிமாவில் ஜெயித்து விடுகிறான். திறமை இருந்தும் இப்படி நீதிமன்றம், வழக்கு, சவடால்தனம் என்று போய்க் கொண்டிருப்பதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை!
மழை விட்டும் தூவானம் விடவில்லை!
Wednesday, 15 December 2021
குண்டும் குழியுமான மலேசியர்!
Tuesday, 14 December 2021
பேருந்து ஓட்டுநருக்கு 51 சாலை அபராதங்கள்!
நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியை நொறுக்கிவிட்டுப் போகும் பேருந்து!
இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நமது நாட்டில் மட்டும் தான் நடக்கும் என்று அடித்துச் சொல்லலாம்!
பேரூந்து ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? பேருந்தை அலட்சியமாகக் கொண்டு செலுத்தியது, அவர் மீதான ஐந்து கைது ஆணைகள் அத்தோடு ஐம்பத்தோரு சாலை அபராதங்கள்! சம்பந்தப்பட்டவர் போதைப்பொருள் ஆசாமி என்று தெரிய வருவதோடு ஜொகூர் போலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்!
இதில் ஆச்சரியபட வேண்டியது என்னவென்றால் இந்த 44 வயது ஆசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனமொன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருவது தான்! போலிசாரால் இவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை! போதைப்பொருளையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்!
நம் நாட்டில் இவைகள் எல்லாம் எப்படி சர்வசாதாரணமாக நடக்கின்றன? எத்தனை பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஓட்டுநர்களாகவும் இருக்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் ஏதும் உண்டா? உண்மையைச் சொன்னால் பேருந்து நிறுவனங்கள் தான் இதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்! பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகள் இப்படி மிக மிக அலட்சியமாக தகுதியற்ற ஓட்டுநர்களை வைத்துக் கொண்டு தொழில் செய்கின்றனவே என்பதை நினைக்கும் போது மனம் பதைப்பதைக்கிறது. மக்களின் உயிர் இவர்களுக்கு அவ்வளவு அலட்சியமா என்று கேட்கத் தோன்றுகிறது.
பேருந்துகள் என்பவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு உரியவை. அதனால் ஓட்டுநர்கள் நிச்சயமாக காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள். ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் உரிமங்களைப் புதிப்பிக்கும் போது அவர்களின் பின்னணியும் ஆராயப்பட வேண்டும். இந்த கணினி யுக காலத்தில் இவைகள் எல்லாம் பெரிய பிரச்சனைகள் அல்ல. எல்லாத் தகவல்களும் விரல் நுனியில் உள்ளன.
காவல்துறையினரிடம் இது போன்ற தகவல்களைச் சேகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. வழிகள் உள்ளன ஆனால் அவை பயன்படுத்தப் படுகின்றனவா என்பது தான் கேள்விக்குறி! அப்படி ஒரு நிலை இல்லாததால் தான் இது போன்ற ஒருவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார்! அவர் ஒரு குற்றவாளி! ஐந்து கைதாணைகள்! ஐம்பத்தோரு சாலைக்குற்றங்கள்! போதைப்பொருள் பயன்படுத்துபவர்! போலிசாரால் தேடுபவர்!
ஆனாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! இப்போது கூட போலிசார் இவரைக் கண்டுபிடிக்கவில்லை! ஏதோ ஒரு நல்ல மனிதர் கொடுத்த தகவல் தான் அவரை கண்டுபிடிக்க வைத்தது!
போலிசார் இனியாவது இவரைப் போன்றவர்களை வெளியே சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்!
சிறப்பு அமைச்சரவைக் குழு!
Prime Minister
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரைவைக் குழு அமைக்கபடும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி அறிவித்திருப்பதானது ஏதோ சடங்குக்காக அறிவிக்கப்பட்ட ஒரு வார்த்தை என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது!
இப்படிச் சொல்லுவதால் எங்களை நீங்கள் கோபித்துக் கொள்ள முடியாது. காரணம் ம.இ.கா. மாநாடுகளில் பிரதமர்கள் இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லி தான் இந்தியர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள்! பிரதமர்கள் ஏமாற்றினார்களா அல்லது ம.இ.கா.வினர் ஏமாற்றினார்களா என்பதும் தெரியவில்லை!
இப்படிச் சொல்லுவதிலும் ஒரு நியாயம் உண்டு. இறுதி முடிவுகள் என்ன வென்று பார்த்தால் ம.இ.கா. தலைவர்கள் தான் ஏற்றம் கண்டிருக்கின்றனர்! இந்திய சமுதாயத்தினர் கீழ் நோக்கி தர தர வென்று இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்! எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை!
மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்பதில் நமக்கு ஏதும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதன் பொறுப்புக்களை ம.இ.கா.வின் கையில் ஒப்படைக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். இத்தனை ஆண்டுகள் ம.இ.கா. என்ன செய்தது என்பது இந்த மாநாட்டில் பிரதமர் கண்முன்பாகவே ம.இ.கா. தலைவர் அறிவித்துவிட்டார்! ஆமாம்! நாற்பது கோடி வெள்ளி திரும்பவும் கரூவூலத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பதை அவரே சொல்லியிருக்கிறார்!
ம.இ.கா. அப்படி செய்வதற்கான காரணம் என்ன? கீழ்மட்ட இந்தியர்கள் அனைவரும் பணத்தோடும், பவிசோடும் தான் வாழ்கிறார்கள் அதனால் எந்தப் பண உதவியும் அவர்களுக்குத் தேவையில்லை என்பது தானே பொருள்! கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பிவிட்டோம் என்பதற்கு அது தானே அர்த்தம்!
இந்தியர்களில் ஏழைகளே இல்லை என்று சொல்லுகின்ற ஒரு கட்சிக்கு மீண்டும் "இந்தியர்களை உயர்த்த!" மித்ராவை அவர்களின் பார்வையின் கீழ் கொண்டுவருவதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ம.இ.கா.நிச்சயமாக தோற்றுவிட்டது! தோற்றுப் போனவர்கள் கைகளில் மித்ரா வேண்டாம்! இந்த முறை எதிர்கட்சிகளின் பங்கு அதிகமாகவே இருக்க வேண்டும். எதிர்கட்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதுமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்.
ம.இ.கா. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, ஒருங்கிணைந்து செயல்படுவோம், என்பதெல்லாம் சரியான அணுகுமுறை அல்ல! நிதியை திரும்பவும் கரூவூலத்திற்கு அனுப்பிவிட்டோம் என்று சொல்லுபவர்கள் தோல்வியாளர்கள் தானே! தோல்வியாளர்கள் அழைப்பு விடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
பிரதமர் இந்த மித்ரா அமைப்புக்கு நல்லதொரு வழிகாட்ட வேண்டும்! அதனைத் தான் நாங்கள் விரும்புகிறோம்!
Monday, 13 December 2021
என்ன? நாற்பது கோடி ரிங்கிட்டா!
MIC President: Tan Sri S.A.Vikneswaran