Thursday 19 August 2021

இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது!

இப்போது நாட்டில் பல தளர்வுகளைப் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

அது நமக்கு மகிழ்ச்சி அளித்தாலும் ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். கோவிட்-19 நாட்டில் இன்னும் வலுவாகவே இருக்கிறது! குறைந்தபாடில்லை.

இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் தளர்வுகள் பொருளாதாரக் காரணங்களுக்காகத் தான் என்பதை மனதிலே நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும்; விறபனை மையங்கள் திறக்கப்பட வேண்டும்; சிறுசிறு தொழில்கள் திறக்கப்பட வேண்டும். எல்லாமே திறக்கப்பட வேண்டும்.

நாமும் வேலைக்குப் போக வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். பிள்ளைகள் பள்ளி போக வேண்டும். வெளியே உணவகங்களுக்குப் போக வேண்டும். வகைவகையாக சாப்பிட வேண்டும். நாலு இடங்களைச் சுற்றி பார்க்க வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் பிள்ளைகள் வீட்டில் அடைந்து கிடப்பார்கள்? அவர்களை விடுங்கள். பெரியவர்கள் மட்டும் எத்தனை நாளுக்கு இப்படி அடைந்து கிடப்பார்கள்? வேலைக்குப் போனால் தான் பெரியவர்களுக்கு நிம்மதி! அதுவரையில் அவர்களுக்கு அவதி!

நமக்கு நிறைய ஆசைகள் உண்டு. தவறு என்று யாரும் சொல்லப் போவதில்லை. நாம் எப்போதும் செய்தது தான்.  இப்போதும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆனாலும் நமது ஆசைகளைக் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள். நாடு இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. கோவிட்-19 குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர கொஞ்சமாவது குறையும் என்பதற்கான அறிகுறி இல்லை.

அப்படியென்றால் ஏன் இந்த தளர்வு என்று கேட்கலாம். இதற்கு மேல் மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது ஒரு பக்கம்.  அவர்கள் கொதித்து எழலாம்!

ஆனால் அதைவிட குறைந்தபட்சம் ஐம்பது விழுக்காடு மலேசியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது  என்பதும் இன்னொரு காரணம். அத்தோடு திறக்கப்படுகின்ற தொழிற்சாலைகளோ அல்லது எதுவாக இருந்தாளும்  சரி அங்குப்  பணிபுரிபவர்கள்  கட்டாயம் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் ஆணை.

திறக்கப்படும் அனைத்துப்  பணிமனைகளும்  வழக்கம் போல நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனோ தானோ என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. காரணம் நாம் இன்னும் கோவிட்-19-ன் கட்டுப்பாட்டில் தான்  இருக்கிறோம்!

கட்டுப்பாடுகளைப் புறக்கணித்தால் சேதாரம் நமக்குத் தான்! காரணம் கோவிட்-19 தராதரம் பார்ப்பதில்லை!

No comments:

Post a Comment