Saturday 7 August 2021

இனி மாமன்னரின் பொறுப்பு!

 இனி வேறு வழியில்லை என்கிற நிலை வந்துவிட்ட பிறகு டாக்டர் மகாதீர் இப்போது தான் வாய் திறந்திருக்கிறார்!

ஆம்,  இனி நாட்டின் எதிர்காலம் மாமன்னரின் கையில் தான் என்கிற நிலைமைக்கு அவர் வந்துவிட்டார்.

மாமன்னர் கையில் என்பது அவர் கருத்து மட்டும் அல்ல. பொதுவாக அது தான் மலேசியர்களின் கருத்து. மலேசிய மக்களும் இவர்களின் அரசியல் சண்டைகளைப் பார்த்து "போதும்! போதும்!" என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள்!

இவர்களின் அரசியல் சண்டையினால் நாட்டுக்கு என்ன நஷ்டம்? கொஞ்சம் அல்ல, நிறையவே நஷ்டம்!  இன்று நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 என்பதே இவர்களின் கைங்கரியம் தான். தங்களின் பதவிக்காக அதனை வளர்த்து விட்டவர்கள் இவர்கள். மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இல்லாத ஒன்றை இழுத்துக் கொண்டு வந்தவர்கள் இவர்கள்!

இன்று நாட்டில் எத்தனை பிரச்சனைகள்? அதனை இவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்களே,  இவர்கள் தானே காரணம்? மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. பலவிதக் கட்டுப்பாடுகள். மக்கள் தங்களுடைய வேலைகளை இழந்து இன்று பட்டினி கிடக்கிறார்களே அதற்கு இவர்கள் தானே காரணம்.

மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல். குழந்தைகள் ஆடி அடி விளையாட முடியாத சூழல்.  பெற்றவர்கள் வேலைக்குப் போக முடியாத சூழல். சம்பளம் இல்லை. கையில் காசு இல்லை. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் வரும் மனவியாதி.    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் B40 நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

நாம் இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்கப் போவதில்லை. அதெல்லாம் பயனில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம்.

நமக்குத் தேவையெல்லாம் நல்லதொரு ஆட்சி/ அது மாமன்னரால் மட்டுமே முடியும் என்பதே மக்களின் கருத்து. அரசியல் சட்டம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படத் தயாராயில்லை. சட்டம்  எதையோ சொல்லட்டும். மாமன்னரைக் கூடவா சட்டம் எதிர்க்கும்? அவர் தானே நாட்டின் முதல் குடிமகன். அவர் ஏன் ஆட்சியைக் கையில் எடுக்கக் கூடாது என்பது தான் நமது கேள்வி.

அடுத்த பொதுத் தேர்தல் வரும்வரை நாடு மாமன்னரின் பொறுப்பில்  இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment