Monday 16 August 2021

இதுவும் சரிதானோ!

 கோவிட்-19 உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. நமது நாட்டையும் அது ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறது! எல்லாமே உண்மை தான்.

இந்தத் துயரமான  நேரத்திலும் ஒரு சில நகைச்சுவை நிகழ்ச்சிகள்  நடந்து கொண்டும் மக்களுக்குச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டும்  இருக்கத்தான் செய்கின்றன!

கோவிட்-19 தொற்றுக்காக "ஊசி போடுங்க! ஊசி போடுங்க!" என்று உலகம் பூராவும் கத்தோ கத்தென்று கத்திக் கொண்டிருக்கின்றனர் டாக்டர்கள்.

இந்த நிலையில்  ஸ்ரீலங்கா  நாட்டின் சுகாதார அமைச்சர், பவித்ரா  வன்னியாராட்சி,   மாந்திரீக  முறையிலான  மருத்துவத்தை  தான் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்!  ICU வில் இருந்த போதும் கூட அவர்  மாந்திரீகர் மந்தரித்துக்  கொடுத்த தண்ணிரைக் குடித்திருக்கிறார்!

அவர் குடித்தது சரியாக இருக்கலாம். அது அவரது நம்பிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற கோவிட்-19 நோயாளிகளையும் அந்த மாந்திரீக மருத்துவத்தைப் பயன்படுத்த வற்புறுத்தியிருக்கிறார்! அது தான் அவருக்கு எதிராகத்  திரும்பிவிட்டது! எப்படியோ அவரின் பதவி பறிக்கப்பட்டு இப்போது வேறு ஒரு துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்!

நம்மிடையே பல நம்பிக்கைகள் இருக்கும். அது நம்மைப் பொறுத்தது. ஆனால் அந்த நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.  அதுவும் சுகாதார அமைச்சர் என்பது மிகவும் பொறுப்பான பதவி. மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதவி. இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் போது இப்படியும் ஒரு சுகாதார அமைச்சரா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

நமது நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி போடுவதை ஒரு சிலர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு சமயம் ஒரு காரணமாக இருக்கின்றது. அது அவர்களது நம்பிக்கை.   ஆனால் மற்றவர்களும் தடுப்பூசி போடக் கூடாது என்று பேச அவர்களுக்கு உரிமையில்லை! அதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம்.

ஆனாலும் மேற் கூறியது போன்று மாந்திரீகத்தை தொற்று நோயின் உள்ளே கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படியே செய்வதானாலும் முதலில் டாக்டர் சொல்லுவதைக் கேளுங்கள். தடுப்பூசியைப் போடுங்கள். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள். அதற்கான பொறுப்பையும் நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்! டாக்டரைக் குறைச் சொல்லாதீர்கள்.

என்னவோ இதுவும் சரிதானோ என்று கேட்கத் தோன்றுகிறது! நமக்குத் தெரியாத இன்னும் வினோதமான பல சம்பவங்கள் உலகெங்கும்  நடக்கலாம்! 

நம்மைக் கேட்டால் இது சரியில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

No comments:

Post a Comment