Monday 16 August 2021

மாமன்னரின் முடிவுதான் இனி!

 கடைசியில், எதிர்பார்த்தபடி மாமன்னர் கையில் தான் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வந்தடைந்திருக்கிறது!

ஏற்கனவே அது நழுவிவிட்ட நிலையில் இந்த முறை ஒரு சரியான தீர்வை நோக்கி நகரும் என நம்பலாம்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை காபந்து அரசாங்கத்தின் பிரதமராக தொடர்ந்து முகைதீன் யாசின் தொடர்வார்.

பொதுவாக அன்வார் இப்ராகிம், பிரதமர் ஆவதற்கான   ஆதரவு இருக்கிறது என்றால் அதனை முறியடிக்க பலர் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள்! அவர்களில் டாக்டர் மகாதிரும் ஒருவர்! அதனை அன்வார் எப்படி எதிர்நோக்குவார் என்பதைப்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துவதெற்கென்றே ஒரு சிலரின் பெயரை முன்மொழியலாம். ஆனால் என்ன தான் ஆட்டம் போட்டாலும்  மாமன்னர் முன்னிலையில் பேசாமல் கட்டுசெட்டாகவே இருப்பார்கள் என நம்பலாம்.

பிரதமர் ஆவதற்கான தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைக்கத்தான் வேண்டும். மாமன்னரும் அதனை அப்படியே  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவரும் ஒவ்வொருவரையும் அல்லது குழுவாகவோ நேரடியாகவே அவர்களிடம் பேசுவார். சென்றமுறையும் அது தான் நடந்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவார் என நம்பலாம்.

மேலும் இந்த முறை அவரது போக்கு கொஞ்சம் அழுத்தமாகவே இருக்கும். காரணம் ஜொகூர் சுல்தான், சில தினங்களுக்கு முன், தனது சட்டசபைப் பற்றியான  பிரச்சனையை எப்படிக் கையில் எடுத்தாரோ அதே போன்ற கடுமையான போக்கை இந்த முறை மாமன்னர் கடைப்பிடிப்பார். நம்பலாம்.

கடந்த ஒன்றரை வருடங்களாக பிரதமர் முகைதீன் யாசின் நாட்டை வழி நடத்தவில்லை. ஏதோ மீன் சந்தையை நடத்துவது போல நடத்தி வந்தார்! நாடு சீரழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். நாடு எந்த ஒரு காலத்திலும் இப்படி ஒரு நிலையைச் சந்தித்ததில்லை.

இந்த முறை மாமன்னர் கடுமையாக நடந்து கொள்ளத்தான் வேண்டும். இனி கட்சித் தாவுதல்,அது இது என்கிற சலசலப்பு  வந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்னர்  இப்போதே கடுமையான் எச்சரிக்கை விடவேண்டும். இனி அடுத்த தேர்தல் வரை எந்த சலசலப்புமின்றி நாட்டை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இனி தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். அதுவே மாமன்னர் முன் நாம் வைக்கும் வேண்டுகோள்.

இனி மாமன்னரின் முடிவு தான்! நல்லது நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment