Monday 23 August 2021

பொய் சொல்லாதே!

இன்று நான் படித்ததில்  பிடித்த ஒன்றைச் சொல்லுகிறேன். இதைச்  சொன்னவர் மருந்தகத்தில் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் ஒரு மலாய்ப் பெண்மணி.

"விற்கப்படும் பொருள் நல்லதென்றால், அது தரமானப்  பொருள் என்றால் நல்ல பொருள் என்று  சொல்லுங்கள். வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். தரமற்றப் பொருளைப்  பொய்ச் சொல்லி விற்றால் அந்த வாடிக்கையாளர் மீண்டும் வரமாட்டார்! அந்த ஒரு விற்பனையோடு முடித்துக் கொள்வார்!"

இது எல்லா விற்பனையாளர்களுக்கும் - எந்தப் பொருளாக இருந்தாலும் - பொருந்தும்.

விற்பனைத்துறையில் ஏமாற்று வேலைகள் அதிகம். நான் இப்போது ஒரு மருந்தகத்தையே எடுத்துக் கொள்கிறேன்.  ஒரு பல்துலக்கும் பிரஷ் வாங்கினேன். நான் எப்போதும்  நடுத்தரமான (medium) பிரஷ் பயன்படுத்துபவன். அந்த மேல் அட்டைமூடியில்  அதையே போட்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்கு வந்த பின்னர் அதனை பிரித்துப் பார்க்கும் போது அது (hard) பிரஷ்! நல்ல வேளை அந்த நிறுவனம் அங்கிருந்து காலியாக விட்டது!

எனக்குத் தெரிந்த இளைஞன் ஒருவன் பிரமாதமாகப் பேசுவான். அவன் பேசுவதில் 95% விழுக்காடு பொய்யாகத்தான் இருக்கும்!  அவனால் எந்த வேலையிலும் ஒட்ட முடியாது! கடைசியில் நில விற்பனையில் இறங்கினான். 'திறமையாகவே' செய்தான். ஒரு சில மாதங்களில் ஒரு  மெர்சிடிஸ் கார் அத்தோடு இன்னும் இரண்டு கார்கள்! நானும் பாவம்! ஏமாற்றாமல் நல்லபடியாக இருந்தால் சரி என்று நினைத்தேன். ஆனால் அவனின் அந்த வாழ்க்கை ஓர் ஆண்டு கூட நீடிக்கவில்லை! அவனுடைய கார்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன! கடைசியில் "தொப்" அனைத்தும் முடிந்தது! அதன் பின்னர் பஸ் கிலாங் ஓட்டுநர்! அடப் பாவி! ஏதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு அந்த மெர்சிடிஸ் காரோடு அதன் பின்னர் பொய் சொல்லாமல் வாழ்ந்திருக்கலாம்! பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பார்கள்! அது தான் நடந்தது!

இப்படி பொய் சொல்லுபவர்களிடன் நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன். எங்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு அதன் பின்னர் மறைந்தே போனவர்கள் பல பேர்! ஒரு சிலருக்குத்தான் அந்த நியாய உணர்வு இருக்கிறது. ஒரு சிலர் நம்மை ஏமாற்றுவதற்கென்றே வருபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு குடிகார மனிதர் பெரிய பொய்யை என்னிடம் சொன்னார். தான் வேலை செய்யும் இடத்தில் திருடர்கள்  வந்து தன்னைத்  தாக்கி விட்டு எல்லாப்பொருள்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள் ஏன்று ஒரு ஒரு பொய்யை என்னிடம் சொன்னார். அவன் குடிகாரன் என்பது எனக்குத் தெரியும். அவன் பொய் சொல்லுகிறான் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? நம் இனத்துக்காரன். பணம் கொடுத்தால் அவன் குடிக்கத்தான் போவான் என்பது  எனக்குத் தெரியும். "சரி வீடு போய் சேரு!" என்று சொல்லி பணம் கொடுத்தேன். அதன் பின் அவனைக் காணவில்லை!

விற்பனைத்துறையில் இருப்பவர்களுக்குப் பொய் என்பது மூலதனம் அல்ல. அப்படித்தான் சிலர் நினைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த உணவக நண்பர் ஒருவர் "ஏமாற்றாமல் தொழில் செய்ய முடியாது!"  என்று அடித்துப் பேசினார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை.  ஒரு வேளை அவர் ஏமாற்றலாம். அதனால் தான் நாம் ஒரு சில உணவகங்களுக்குச் செல்லத் தயங்குகிறோம். ஆமாம் ஒரு சிலர் பழைய கறிகளையே வைத்து ஒரு நாள் இரண்டு நாள் என்று கடத்துவார்கள்!

கடைசியாக, பொய்  சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சரியாகத்தான் சொன்னார்கள்!

No comments:

Post a Comment