Tuesday 24 August 2021

கோயில்கள் தாக்குதலா?

 பொதுவாக கோயில்கள் மீதான தாக்குதல் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவதெல்லாம் மூன்று நாடுகள் தான்: பாக்கிஸ்தான், வங்காளதேசம், மலேசியா.

மற்ற நாடுகளில் இது போன்ற உடைப்பு சம்பவங்கள் அல்லது எரிப்பு சம்பவங்கள் அல்லது தாக்குதல் சம்பவங்கள் உண்டா என்று  எனக்குத் தெரியவில்லை.

மத வழிபாட்டுத் தலங்கள் உடைபடுவதை  நான் விரும்பாதவன். உடைப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதனைச் செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் இருக்கும் இடத்தில் ஒரு கோயிலை உடைக்க வேண்டும் என்றார்கள். காரணம் அது புதிய பாதை போடுவதற்கு  இடையுறாக இருக்கிறது என்றார்கள்.  பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அந்தக் கோயிலை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.  பாதையை மாற்றிக் கொண்டார்கள். 

எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழி உண்டு. ஆனால் ஒரு சிலர் உடைத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கோயிலை உடைத்து விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள்  நமது நாட்டில் அதிகம்.  "முதலில் உடைப்போம் அப்புறம் பேசுவோம்" இது தான் நமது நாட்டில் உள்ள நடைமுறை! சிறுபான்மையினருக்கு இது ஒரு பின்னடைவு தான். எந்த ஒரு ஜனநாயக வழிகளும் ஏற்கப்படுவதில்லை!   

 பெரும்பாலான  கோயில் உடைப்பு சம்பவங்களில் ஜனநாயக ரீதியில் உட்கார்ந்து பேச யாரும் தயாராக இல்லை. "நான் வச்சதுதான் சட்டம்!" என்கிற நோக்கத்தோடு வருபவர்களை நம்மால் சபிக்கத்தான் முடியும்.

ஆனால் பாக்கிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் உள்ள நிலைமை வேறு. அங்கு அரசாங்கம் எதனையும் கையிலெடுப்பதில்லை. அந்த வேலையை மக்களே பார்த்துக் கொள்கிறார்கள்! மக்கள் என்பதைவிட ஒரு சிறு குண்டர் கும்பல்கள் செய்கிற விஷமத்தனங்கள் தான் அவை. ஏதோ ஒரு காரணம் அவர்களுக்குத் தேவை. ஏதோ பிடிக்காத ஒன்றுக்காக சும்மா கோயில்களை எரிப்பது, தாக்குவது -  இவைகள் அவர்களின் பொழுது போக்கு!

ஆனால் அரசாங்கத்தால் அவர்களை எதுவும் செய்ய முடிவதில்லை.  தவறு செய்பவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன! இந்த நிலையிலும் கூட பாதிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் அந்த இடத்திலேயே அரசாங்கம் கட்டிக் கொடுக்கின்றது.

பெரும்பாலான அரசாங்கங்கள்  எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றன.  ஒற்றுமை தேவையில்லை என்று சொல்லுபவர்கள் பயங்கரவாதிகள்!

கோயில்கள் தாக்குவது, எரிப்பது விரும்பத்தகாதவை. கோயில்கள் மட்டும் அல்ல எந்த வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் வன்முறையை ஏவுவது பயங்கரவாதம் தான்.

ஒருவரது மத நம்பிக்கையை அவர்களிடமே விட்டுவிடுங்கள். அவர்களின் நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை.

ஏல்லா மத நம்பிக்கைகளும் உயர்ந்தவைகள் தான்!

No comments:

Post a Comment