Sunday 22 August 2021

இது எதனால்?

 ஒரு செய்தி நம்மை வியக்க வைக்கிறது.

ஜொகூர் மாநிலத்தில் சுமார் 800 ஆசிரியர்கள் இன்னும் கோவிட்-19 தடுப்பூசியைப் போடவில்லை என்கிற  செய்தி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

பள்ளிக்கூடங்கள் வெகு விரைவில் திறக்கப்படும் என்கிற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஏன் ஆசிரியர்கள் இப்படி தடுப்பூசியைப் புறக்கணிக்கின்றார்கள் என்று நமக்குப் புரியவில்லை. இதனைப் புறக்கணிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சில விடயங்களில் நாம்  ஊரோடு ஒத்துப்போக வேண்டும்.  உலகமே தடுப்பூசியைப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,  சுகாதார அமைச்சும் வலியுறுத்தும் இந்த நேரத்தில், இப்படி ஒரு புறக்கணிப்பா என்று நாம் வியந்து போகிறோம்.

என்ன தான் சொன்னாலும் இதனை - இந்தப் புறக்கணிப்பை -  நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் பிள்ளைகளை எப்படி பள்ளிகளுக்கு அனுப்ப முடியும்?

நமக்குத் தெரிந்தவரை ஆசிரியர்கள் தான் பிள்ளைகளுக்கு அல்லது பொது மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர்கள். தடுப்பூசி விவகாரத்தில் அவர்களே மாணவர்களுக்கு முன்னுதாரணம்.

இந்த நேரத்தில், இவர்கள் இப்படிச் செய்வதால்,  பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பத்   தயங்குவார்கள்.  அது இயற்கையே.

இவர்கள் புறக்கணிப்பிற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். தடுப்பூசி போட்டாலும் போடாவிட்டாலும் இவர்களுக்குப் பசி, பட்டினி என்றும் இருக்கப் போவதில்லை. அதுவும் ஒரு காரணம் தான். தனியார் துறைகளில் உள்ளவர்களுக்குத் தான் பசி, பட்டினி என்றால் என்னவென்று தெரியும்.

நமக்குத் தெரிந்ததெல்லாம், பலரைப் போலவே,  இலவச ஆலோசனைகள் அரசாங்கத்திற்குக் கொடுக்கலாம். தடுப்பூசி போடாதவர்களுக்குச் சம்பளம் இல்லையென்று ஒரு வார்த்தைச் சொன்னால் போதும். அதன் பின்னர் இவர்களின் எதிரொலி எப்படி இருக்கும் என்பது தெரியும்! இப்போதைக்கு அவர்களும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் வயிறாரச் சாப்பிடுகின்றனர். அதனால் அவர்கள் எதையும் பேசுவார்கள்.

அரசாங்கம் என்ன தான் செய்யும்? பார்க்கலாம்!

No comments:

Post a Comment