Tuesday 3 August 2021

பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

 நாடு மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது  என்பது தான் உண்மை!

அது தான் அரசியல். அரசியலில் நல்லவர்கள் இருந்தால் ஒரு தீர்வைக் காணலாம். நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பேசக் கூடிய சூழலில் இப்போதைய நிலைமை இல்லை! அத்து மீறிப் போய்விட்டது என்று தாராளமாகச் சொல்லலாம்!

மாமன்னர் மீது இருந்த நல்லெண்ணத்தையும்,  மதிப்பும், மரியாதையையும் சும்மா "பூ" என்று ஊதித் தள்ளிவிட்டார் பிரதமர் முகைதீன்! மன்னருக்கு இப்படி ஒரு நிலமையா என்பது வருத்தத்திற்குக்குரியது தான் என்றாலும் "அதிகாரம் எத்துணை வலிமையானது" என்பதைப் பிரதமர் உணர்த்தியிருக்கிறார்.  அதிகாரப் துஷ்பிரயோகம் தான் என்றாலும் அதிகாரத்தைத் தவறாகவும் பயன்படுத்தலாம் என்பதை முகைதீன் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்!

 இந்த நேரத்தில் ம.இ.கா. வின் தேசியத் தலைவர், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், பிரதமர் முகைதீன் எடுத்த முடிவு  சரியானது  தான் என்று கூறியிருக்கிறார்! நாட்டின் மிகவும் பலவீனமான கட்சியின் தலைவரால் கூட இப்படிப் பேச முடியும் என்கிற நிலமையை எண்ணி வருந்த வேண்டியிருக்கிறது.

 நமக்கும் ஒரு கேள்வி உண்டு.  இன்று நாடு இருக்கும் நிலையைச் சரிசெய்ய மாமன்னருக்கு எந்த அதிகாரமும் இல்லையா? நமக்கு, மாமன்னரின் அதிகாரம் எத்தகையது, அரசியல் சட்டம் என்ன சொல்லுகிறது என்பது போன்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. ஆனால் மாமன்னருக்கும் நாட்டை வழி நடத்தும் அதிகாரம் உண்டு என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். 

இந்த நிலையில் பொது மக்களின் கருத்து என்னவாக இருக்கும்? மக்களுக்கு பிரதமர் முகைதீன் மீது கோபம் தான்.  மாமன்னரை இப்படி இழிவு படுத்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இழிவு படுத்துகிறாரே! என்ன செய்ய முடியும்? ஆட்டம், ஆட்சி, அதிகாரம் அனைத்தும் பிரதமர் கையில்! அவர் என்று ஆட்டத்திற்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்றுவரை தவறான ஆட்டத்தைத் தான் விளையாண்டுக் கொண்டிருக்கிறார்! அதற்கு மாமன்னரும் உடந்தை என்பதாகப் பொதுவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. சராசரி அரசியல்வாதிகளைப் போல மாமன்னர் செயல்பட முடியாது! "எடுத்தேன்! கவிழ்த்தேன்!" என்று மாமன்னரால் செயல்பட முடியாது. நல்லது கெட்டது அறிந்தது தான் அவர் செயல்பட முடியும்.

இந்த இக்கட்டான நிலையில் நாடு எதனை நோக்கி பயணிக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரு பக்கம் கோவிட்-19 நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. குடும்பங்கள் சீரழிகின்றன. தொழில்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. வேலை வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றன.

பொதுவாக சோலைவனம் இப்போது பாழடைந்து பாலைவனத்தை நோக்கி பயணிக்கிறது! இது தான் மக்களின் மனநிலை!

No comments:

Post a Comment