Thursday 26 August 2021

இந்த ஆதரவு தேவையா?

 பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்,  ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அரசாங்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்!

இதற்கு முன்னதாக அவரது மகன் முகமது காலில் அப்துல் ஹாடியும் புதிய அரசாங்கம் அமைந்ததும் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார்! 

இவர்களது இருவரின் ஆதரவு என்பது பாஸ் கட்சியின் ஆதரவு என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதனை ஏன் நாம் பயங்கரவாத அரசாங்கம் என்கிறோம்? ஏன் ஆப்கானிஸ்தானிய மக்கள் நாட்டைவிட்டு  வெளியேற வேண்டும்  எனத் துடியாய் துடிக்கிறார்கள்?அவதிப்படும் அந்த மக்களைப் பார்த்தும் பாஸ் தலைவருக்குக் கொஞ்ச கூட இரக்கம் வரவில்லையே!

நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் அப்பனும் மகனும், பயங்கரவாதத்தைப் பார்த்துக்  கதறி அழும் அந்த மக்களைப் பார்த்தும் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் பேசுகிறார்கள்!

அந்த மக்களின் அழுகுரல் இவர்களுக்கு என்ன அமுதகானமாக ஒலிக்கிறதா!  அந்த மக்கள் வெளிநாடுகளுக்கு எப்படியாவது தப்ப வேண்டும்  என்கிற அவசரத்தில் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே! அதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா! அவர்கள் ஒன்றும் அமெரிக்கர்கள் அல்லவே! அந்த மண்ணின் மைந்தர்களான ஆப்கானிஸ்தான் மக்கள் அல்லவா!

விமானத்தில் ஏற இடம் இல்லாமல் கூரைப் பகுதியில் ஏறித் தொற்றிக் கொண்டு தங்களது உயிரை இழந்தார்களே! உடம்பெல்லாம் நொறுங்கி அரைத்து வீசப்பட்டார்களே அதெல்லாம் யார் அமெரிக்கர்களா! இல்லை அனைவரும் ஆப்கானிய மக்கள்!

ஏன் அவர்கள் நாட்டை வீட்டு ஓட வேண்டும்? அவர்கள் தலிபான் அரசாங்கத்தில் துன்பத்தை அனுபவித்தவர்கள். அவர்களுக்குத்தான் தெரியும் தலிபான் யார் என்பது. பாஸ் கட்சியினர் அந்த மக்களின் துன்பத்தை அறிந்திருக்கிறார்களா?

ஒன்றும் வேண்டாம். அந்த நாட்டு மக்கள் ஒரு நூறு பேருக்கு உங்களால் அடைக்கலம் கொடுத்து இந்த நாட்டில் வாழ வைக்க முடியுமா?

தாலிபான் அரசாங்கம் என்பது பயங்கரவாத அரசாங்கம் என்று அந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். தப்பிக்க நினைப்பவர்கள் - முடிந்தவர்கள் தப்பிக்கிறார்கள். முடியாதவர்கள் தங்களது நிலையை நினைத்து அழுது புலம்புகிறார்கள்.

பாஸ் கட்சியினருக்கு ஓர் ஆலோசனை.  உங்களைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டது! இனி நீங்கள் சென்று அந்த நாட்டுக்கு பல வழிகளில் உதவலாம். அங்கு சென்று தொழில் செய்யலாம். கல்வித்துறையில் அவர்களுக்கு உதவலாம். இன்னும் பல வழிகள் உண்டு.

உங்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும் என்றால் அதனைச் செய்யுங்கள்.  உங்களின் ஆதரவு அவர்களுக்கு இந்த ஒரு இக்கட்டான நேரத்தில் மிகவும் தேவை.

அந்த நாடு மேம்பாடு அடைய வேண்டும். பயங்கரவாதம் அங்கு வேண்டாம்! உங்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை! இதுவே சரியான தருணம்.

ஆதரவு கரம் நீட்டுவீர்களா? 

No comments:

Post a Comment