Friday 27 August 2021

ஏன் இந்த ஐயம்?

 ஜொகூர் மாநிலத்தில் சுமார் 779 ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி தான்.

இதில் ஒரு சாராரை மன்னிக்கலாம். அவர்களில்  சுமார் 383 ஆசிரியர்கள் கர்ப்பம் தரித்தவர்கள்.  அவர்களை நாம் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களைப் பற்றி வருகின்ற  செய்திகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. உலக அளவில் வருகின்ற செய்திகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றன.

அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று யாராலும் உறுதியளிக்க இயலவில்லை. ஒரு சிலருக்கு நல்ல நேரம். அவ்வளவு தான் சொல்ல முடியும். அதனால் அவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம். அது சரியானதே!

அதே சமயத்தில் ஆண் ஆசிரியர்கள் சுமார் 396 பேர் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். உண்மையில் அது நம்மை பயப்பட வைக்கிறது. அவர்களுக்குத் தடுப்பூசி மேல் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். அதாவது அதன் மூலம் எதுவும் நல்லது நடக்கப் போவதில்லை என  நம்புகிறார்கள்.

உலகமே தடுப்பூசியைத்தான் நம்புகிறது. வேறு வழி தெரியவில்லை. டாக்டர்களும் தடுப்பூசியைத்தான் சிபாரிசு செய்கிறார்கள். புதிதாக ஏதேனும் மாற்று வரும்வரை தடுப்பூசி ஒன்றே வழி. புதிதாக எதுவும் வரலாம். வரும்வரை இப்போதைய முறையே சிறந்தது. மாற்றுக் கருத்து இல்லை.

பெண் ஆசிரியர்களுக்கு ஒரு வேளை அவர்கள் பிரசவ விடுமுறை எடுக்க முடியும். அதற்கு வழி இருக்கிறது. தடுப்பூசி போட மறுக்கும் ஆண் ஆசிரியர்கள் நிலை என்ன? வீட்டிலேயே தங்கி இருக்கப் போகிறார்களா! அதாவது கொவிட்-19 ஒழிக்கப்படும் வரை இவர்கள் ஒளிந்திருக்கப் போகிறார்களா! 

ஒன்றும் புரியவில்லை! தனிப்பட்ட முறையில் அவர்கள் இருந்து, வேலை இல்லாமல் வீட்டில் இருந்தால்,  அவர்கள் மீது நமக்கு அக்கறை இல்லை. ஆனால் அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இவர்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் மாணவர்களை எப்படிப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியும் என்கிற கேள்வி எழுகிறது. பெற்றோர்களின் நிலை என்ன? 

பிரச்சனை எல்லாம் மாணவர்களை எப்படி பள்ளிக்கு அனுப்பவது மட்டும் தான். அது தான் சிக்கல். ஆசிரியர்கள் மக்கள் மனதில் உயர்ந்து நிற்பவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள் என்கிற பெயரும் உண்டு. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால் யார் என்ன செய்ய முடியும்?

மற்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் எழவில்லை. செய்திகள் எதுவும் வரவில்லை. அப்படியென்றால் மற்ற மாநிலங்களில் இல்லாத பிரச்சனை ஏன் ஜொகூர் மாநிலத்தில் மட்டும் வருகிறது என்றும் நினைக்க வேண்டியுள்ளது. பக்கத்து நாடான சிங்கப்பூர் அருகிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் இப்படி ஒரு பிரச்சனை எழவில்லையே! ஏன் இவர்களுக்கு மட்டும்!

நம்மைக் கேட்டால் ஆசிரியர்களுக்கு இது போன்ற ஐயங்கள் வரவே கூடாது. தடுப்பூசி ஒன்றே வழி என்பதாக உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. உலகமே ஏற்றுக் கொண்ட ஒன்றை - அதன் மேல் ஐயம் ஏற்படுகிறது ஏன்றால் - வேறு என்ன வழி!  மாணவர்களின் நிலை என்ன?

ஆசிரியர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் தான் நாம் சொல்ல முடியும்.

ஐயம் தவிர்! ஒதுவது ஒழியேல்!

No comments:

Post a Comment