Tuesday 31 August 2021

தனியார் பரிசோதனை வேண்டாமே!

 கோவிட்-19 பரிசோதனை என்கிற பெயரில் தனியார் நிலையங்கள் அரசாங்க அனுமதியில்லாமல் செய்து வருவதாக  செய்திகள் வருகின்றன.

சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் ஓர் அழகு நிலையம் கோவிட்-19 பரிசோதனை என்கிற பெயரில், குறைவான கட்டணத்தில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் இல்லை. தாதியர் இல்லை. ஆனால் அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்களை வைத்து  தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றது! அதுவும் மலிவான ரிம 50.00 கட்டணத்தில்!

நாம், மலேசியர்கள், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் பழக்கம் உடையவர்கள். அதனால் தான், யார் யாரோ,  இந்தத் தொற்று நோய்க்குக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்களெல்லாம், தடுப்பூசி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்!

இன்றைய நிலையில் அரசாங்கம் தான் அதிகாரபூர்வமாக கோவிட்-19 க்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் என்றாலும்  அல்லது தனியார் கிளினிக்குகள் என்றாலும்  அவைகள் அரசாங்கத்தின் அனுமதியோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு போலி மருந்துகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை.

உண்மையைச் சொன்னால் தடுப்பூசி   போடுவதற்கு  அங்கும் இங்கும் அலைவதைவிட அரசாங்கம் கொடுக்கும் தேதியையும், மையத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அந்த தேதியில் அல்லது மையத்திற்குச் சென்று உங்களது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். அதுவே சிறந்த வழி. எனது குடும்பத்தையே எடுத்துக் கொண்டால் நான் தனியார் மருத்துவமனை, எனது பிள்ளைகள் அரசாங்க மருத்துவமனை, தனியார் கிளினிக் - இப்படி வெவ்வேறு இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த ஏற்பாட்டையும் நாங்கள் செய்யவில்லை. அனைத்தும் அரசாங்கத்தின் ஏற்பாடுகள்.

இப்படி அழகு மையங்களுக்கெல்லாம் போய் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள். அவை நம்பத்தகுந்தவை அல்ல. மேலும் அவர்கள் போடும் தடுப்பூசி என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துமோ, யாருக்கும் தெரியாது!

அதனால் உங்கள் தடுப்பூசிக்கு அரசாங்கத்தை நம்புங்கள். அதுவே சிறந்த வழி. தடுப்பூசியில் போலி இருக்காது.

தனியார் மையங்களில் கோவிட்-19 தடுப்பூசி வேண்டாம்!

No comments:

Post a Comment