Monday 30 August 2021

தடுப்பூசிகளைத் தயாரிப்போம்!

 மலேசியா கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் என்னும் செய்தி வரவேற்கக் கூடிய செய்தியாகவே நான் பார்க்கிறேன்.

நாம் நினைத்தது போல கோவிட்-19 தொற்று சும்மா ஒரு ஊசி இரண்டு ஊசி போட்டுவிட்டால் போதும் அத்தோடு அது நம்மை விட்டு ஓடிவிடும் என்பது தவறான கருத்து என்பது இப்போது தான் நமக்குத் தெரிகிறது.

ஆனானப்பட்ட அமெரிக்காவே இந்தத் தொற்றால் திணருகிறது என்றால் நாம் எம்மாத்திரம்?  அமெரிக்கா முற்றிலும் ஒழித்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் அடுத்த அலை ஆரம்பித்துவிட்டதாக இப்போது செய்திகள் வருகின்றன!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வெற்றிகரமாக தொற்றை ஒழித்துவிட்டார்கள் என்று கூறி வந்த நிலையில் தீடீரென ஓணம் பண்டிகையின் போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது கோவிட்-19!

ஆக போகிற போக்கைப் பார்க்கிற போது இது இப்போதைக்கு ஒழிக்க முடியாத ஒரு நோயாகவே நாமும் ஒரு முடிவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும் என்னும் கேள்விக்கு இப்போதைக்குப் பதில் இல்லை!

அதனால் இந்த நோயின்  தடுப்பூசிக்காக எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பதைவிட உள்ளுரிலேயே தயாரிப்பது என்பது நல்லதொரு செய்தியாகவே நான் பார்க்கிறேன். அதற்கான வாய்ப்பும் வசதிகளும் இருந்தால், அதற்கான நிபுணத்துவமும் நம்மிடம் இருந்தால் அதனைத் தயாரிப்பதற்கு என்ன ஆட்சேபனை இருக்கப் போகிறது?

எப்படி இருந்தாலும் இந்த தடுப்பூசிக்காக உலக நாடுகளையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நேரம் வரும் போது நமது தயாரிப்பே நமக்குக் கை கொடுக்கும்.

கோவிட்-19 தொற்று என்பது ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் உலகத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது! அது  தொடர்ச்சியாக மனித குலத்திற்கு எதிராக இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும்  என்று சொல்லப்படுகிறது.

அதனால் நாமும் நமது நாடும் சும்மா அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதற்கான அடுத்தக்கட்ட வேலையை இப்போதே நாம் துவங்க வேண்டும்.

இப்போது தான் தடுப்பூசி பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம். ஒரு நிரந்தரமான அரசாங்கம் இல்லாததால் நடப்பு அரசாங்கத்தால்  இது சாத்தியமா என்கிற ஐயமும் எழத்தான் செய்கிறது.

ஆனாலும் நடப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருக்கும் கைரி ஜமாலுடின் திறமையான  அமைச்சர் என்று பெயர் எடுத்தவர். அவர் மீது மக்களுக்கும்  நம்பிக்கை உள்ளது. அதற்கான வேலைகளை அவர் முன்னெடுப்பார் என நம்பலாம்.

தடுப்பூசிகளைத் தயாரிப்போம்!கோவிட்-19 க்கு தடுப்பணை கட்டுவோம்!

No comments:

Post a Comment