Saturday 28 August 2021

அம்னோவினர் திருப்தி அடையமாட்டார்கள்!

 பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலைமைச்சர், பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி புதிய அமைச்சரவையைப் பற்றி தனது கருத்தைக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக " அமைச்சரவையில்  கணிசமான இடங்கள் அம்னோவுக்கு வழங்கப்பட்டாலும் அவர்கள் நிச்சயம் திருப்தியடையமாட்டார்கள்!" என்று அவர் கூறியிருப்பதை அலட்சியமாக ஒதுக்கிவிட முடியாது.

முகைதீன் எப்போது பிரதமராகப் பதவியேற்றாரோ அப்போதிருந்தே  அவர்கள் தங்களது ஆட்டத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்! இஸ்மாயில் சப்ரி அர்சாங்கத்திலும் அவர்களது ஆட்டம் தொடரும் என்று நம்பலாம்.

அதற்கான நெருக்குதலை இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது தெரிகிறது. அம்னோ கட்சியினருக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும். ஆளும் அரசாங்கம் தங்களுடையதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தங்களது தயவால் நடைபெறும் அரசாங்கம் தாங்கள் சொல்லுகின்றபடி கேட்க வேண்டும்! தாங்கள் சொல்லுகின்றபடி கேட்கவில்லை என்றால் அவர்களை எந்நேரத்திலும் 'கவிழ்ப்போம்! கவிழ்ப்போம்!" என்கிற பயமுறுத்தல் தொடர்ந்தே கொண்டே இருக்கும்!

அம்னோ கட்சியினருக்கு நிலையான அரசாங்கம்  வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவர்களுக்கில்லை. "இருந்தால் எங்களது ஆட்சி மட்டுமே! மாற்றுக் கட்சியினரின் ஆட்சி எங்களுக்குத் தேவை இல்லை!" 

ஏன் இந்த அளவுக்கு அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்? ஒரே காரணம்  தான். அம்னோவில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்கள் அதிலிருந்து தப்பிக்க பலவேறு வழிகளைப் பயன்படுத்தி தங்களை நிரபராதிகள் என்று காட்ட முற்படுகின்றனர். அதற்காக முகைதீன் அரசாங்கத்தைக் கவிழ்த்தார்கள்! இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்திற்கும் எதுவும் நேரலாம்! அவர்களுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எதனையும் செய்யத்  தயாராக இருக்கிறார்கள்!

அதனால் தான் பேராசிரியர் ராமசாமி அம்னோவைப் பற்றி குறிப்பிடும் போது  அமைச்சரவையில் அவர்களுக்குக் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டாலும்  அவர்கள்  நிச்சயம் திருப்தியடைய மாட்டார்கள் என்கிறார்!

அம்னோ சொல்லுகின்ற படியெல்லாம் ஆளும் அரசாங்கம் ஆடினால் அரசாங்கம் மக்களின் கோபத்திற்கு ஆளாகும்! முகைதீன் அரசாங்கத்திற்கு அது தான் நடந்தது. இன்றைய நிலையில் கூட மக்கள் அப்படி ஒன்றும் இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தின் மீது எந்த ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. மக்களுக்கு எந்த கெடுதலும் நடக்காதவரை நல்ல அரசாங்கம் தான்! என்ன செய்வது? இது தான் நாட்டின் தலைவிதி என்று ஏற்றுக்கொள்ல வேண்டியது தான்!

இஸ்மாயில் சப்ரி எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment