Tuesday 17 August 2021

அம்னோவின் "ஒற்றுமை அரசாங்கம்!"

 அம்னோ முன்மொழியும் ஒற்றுமை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

இல்லை! ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!

அம்னோ தரப்பிலிருந்து யார் பேசினாலும் ஏதோ உள்குத்து இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது! அவர்களிடம் நேர்மை இல்லை. எதை வைத்து ஒற்றுமை அரசாங்கத்தை அவர்கள் முன்மொழிகிறார்கள்?

கடந்த 17 மாத முகைதீன் யாசினின் அரசாங்கத்திற்கு அதிக நெருக்கடி கொடுத்தவர்கள் அம்னோ கட்சியினர் தான் என்பதை அனைவரும் அறிவர். இத்தனை மாதங்களில் ஏன் இந்த அறிவு முதிர்ச்சி இவர்களுக்கு ஏற்படவில்லை. அப்போதே அவர்கள் ஒற்றுமையாக இருந்து எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் இருந்திருந்தால் முகைதீனின் அரசாங்கம் அடுத்த தேர்தல் வரை நீடித்திருக்குமே! அவர் நாட்டுக்கு ஏற்படுத்திய சேதங்கள் அனைத்தும் யாரால் விளைந்தவை?  அம்னோ கொடுத்த நெருக்கடியால் தான் இந்த அளவுக்கு நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது! முகைதீனை அவர்கள் செயல்படவே விடவில்லையே!

இப்போது இவர்கள் முன்மொழியும் ஒற்றுமை அரசாங்கம்  ஏற்பட்டால் இவர்களிடம்  ஒற்றுமை ஏற்பட்டுவிடுமா?

இவர்கள் ஒற்றுமையாக மற்ற கட்சிகளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றால் ஒரே வழிதான் உண்டு. அம்னோ கட்சியில் உள்ள அத்தனை பேரையும் புனிதர்களாக மாற்றி  விடவேண்டும். இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முடிந்தால் நஜிப் மீண்டும் பிரதமராக வரவேண்டும்!

சரி, அவர்கள் சொல்லுகிற ஒற்றுமை அரசாங்கத்திற்கே வருவோம். பிரச்சனையே இல்லை. நீங்கள் எந்த ஒரு பதவிக்கும் போட்டிப் போடாதீர்கள். நீங்கள் அரசாங்கத்தில் ஏற்படுகிற கோளாறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்.  ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே ஒரு எதிர்க்கட்சி போல செயல்படுங்கள். ஆனால் அரசாங்கத்தை ஆதரியுங்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இது பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். நமக்குத் தேவை எல்லாம் ஒரு நிரந்தரமான அரசாங்கம். அதுவும் அடுத்த பொதுத் தேர்தல் வரை.

ஒன்றை நான் நம்புகிறேன். இந்த முறை பேரரசரின் சரியான வழிகாட்டுதல் இருக்கும் என்பது நிச்சயம். நாட்டை நாறடித்து விட்டார்கள்! பேரரசரும் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கொஞ்சம் அதிகமாகவே புரிந்து கொண்டிருப்பார். கொஞ்சம் கண்டிப்பு, எச்சரிக்கை இவைகள் எல்லாம் பேரரசரிடம் எதிர்பார்க்கிறோம்.

அம்னோவின் ஒற்றுமை அரசாங்கம் வீண் வேலை! அம்னோ தரப்பினர் ஒற்றுமையை விரும்பாதவர்கள்! ஒற்றுமைக்கும் அவர்களுக்கும் வெகு தூரம்!

அவர்களுக்குப் பதவி கொடுக்காதவரை அவர்கள் எதிரிகளாகவே இருப்பார்கள்!

No comments:

Post a Comment