Sunday 8 August 2021

தொற்று என்பது புதிதல்ல!

 இப்போது உலகத்தை ஆட்டிப்படைக்கின்ற வியாதி எது என்று கேட்க வேண்டிய அவசியமில்லை!

அனைவரும் அறிந்தது தான். இதற்கு முன்னர் புற்று நோய் என்றார்கள். இரத்த அழுத்த நோய் என்றார்கள். இந்த நோய்கள் தான் மலேசியர்களை  அதிகம் பாதிக்கும் நோய் - நாட்டில் முதலாவது இடத்தில் உள்ள நோய்கள் என்றார்கள். ஆனால் இந்த இரண்டையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது கோவிட்-19! நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது!

இந்த நேரத்தில் புற்று நோய்க்கோ, இரத்த அழுத்த நோய்க்கோ சிகிச்சைப் பெறப்  போனால் கோவிட்-19 யும் சேர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்! அந்த அளவுக்கு டாக்டர்கள் வெறி பிடித்து, நிம்மதியின்றி அலைகிறார்கள்! அவர்கள் பிரச்சனைகளை யார் அறிவார்? வெளியே சொல்ல முடியவில்லை!

கோவிட்-19 தொற்றினால் உலகளவில் இது வரை கிட்டத்தட்ட 43 இலட்சம் பேர் இறந்திருக்கின்றனர்.  ஆனால் இதற்கு முன்னர், 1918-ல் ஏற்பட்ட Spanish Flu என்கிற பெருந்தொற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட ஐந்து கோடியிலிருந்து பத்து கோடி வரை உலகளவில்  மக்கள்  இறந்திருக்கக்கூடும்  என்று  மதிப்பிடப்படுகிறது. இந்தத் தொற்று இரண்டு ஆண்டுகள் நீடித்தன.

ஆக பெருந்தொற்று என்பது, வருவதும் போவதும், சாவதும்  மனித குலத்திற்குப் புதிதல்ல. அது எல்லாக் காலங்களிலும் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற பெருந்தொற்றுகள் மனித இனத்தைத் தேடிவந்து கொஞ்சம் தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு "ரொம்ப ஆடாதே!" தென்று சொல்லிவிட்டுப் போவதுண்டு! இப்போது நமது முறை! நமக்கு இரண்டல்ல மூன்று தட்டுத் தட்டிவிட்டுப் போகத்தான் கோவிட்-19 வந்து மனிதர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது! எதிர் கொள்ளத்தான் வேண்டும்! நம் ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா!

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த Spanish Flu  காலக்கட்டத்தில் இப்போது இருக்கின்ற மருத்துவ வசதிகள், விஞ்ஞான வளர்ச்சி என்பதெல்லாம் குறைவு. அதனால் மரண எண்ணிக்கை கோடிகளாக இருந்தன.  ஆனால் இப்போது உள்ள நவீன வசதிகள் கோவிட்-19 வை வெகுவாகக் குறைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். சும்மா ஓர் எதிர்ப்பார்ப்பு தான்! ஆனால் எமதர்மனின் லீலைகளை யார் அறிவார்!

ஆக, இந்தத் தொற்றினால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். நமது அறிவுக்கு எட்டாததெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? ஒரே ஒரு வழி தான் உண்டு. நமது சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அதைச் செய்யுங்கள்.  இது மட்டும் தான் நமக்குள்ள ஒரே வழி. ஊசி போடச் சொன்னால் ஊசி போடுங்கள். தேவையற்ற கேள்விகளைக் கேட்டு நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள். என்ன மருந்து என்பதை சுகாதார அமைச்சு முடிவு செய்யும். அவர்களும் உலக சுகாதார நிறுவனம் சொல்லுவதைத்தான் நமக்குத் தெரிவிக்கிறார்கள்.

எதிர்காலத்தில் மனித குலம் தொற்று நோயோடு தான் வாழ வேண்டும்!

No comments:

Post a Comment