நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது அரசியல் நெருக்கடியா?
இல்லை! மண்டைக்கனம் பிடித்தவர்களின் ஆணவம்! வக்கிரப்புத்திப் படைத்தவர்களின் சண்டித்தனம்!
ஏதோ ஒன்றுமே ஆகாதது போல தங்களது அரசியல் விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கின்றனர்! மிகவும் புண்ணியவான்கள் என்று நம்மால் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கூட்டம் இன்று "நாங்களும் உங்களைப் போலத்தான்!" என்று ஆட்டம் போட்டு ஆடிக்கொண்டிருக்கிறது! நீதி, நியாயம் என்பதெல்லாம் சும்மா நடிப்பு என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது!
சில நாட்களாக மறைந்து வாழ்ந்த பிரதமர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார். நாட்டைக் காப்பாற்ற அல்ல தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள. இப்போது சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். அது தான் பதவியின் மகிமை! அவருக்கு வேறு வழியில்லை. குற்றம் சாட்டலாம் என்று குறிப்பிடப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் படுத்துவிட்டார்!
நமது அரசியல்வாதிகள் நீண்ட நாள்களாக "நம்பிக்கை இல்லாத் தீர்மானம்" கொண்டு வருவோம் என்று சொல்லிச் சொல்லி கடைசியில் அது நடக்கவே இல்லை! பிரதமர் முகைதீன் அதனை மிக அலட்சியமாக கடந்து விட்டார்! அது அவரின் சாமர்த்தியம் என்று சொல்லலாம்!
இப்போது அவரே புதிய கோஷம் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது! வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் தனது பெரும்பான்மையை நிருபிக்க "நம்பிக்கை தீர்மானம்" கொண்டு வருவோம் என்று அறிவித்துவிட்டார்! ஒரு வேளை மாமன்னரைச் சந்தித்த பின்னர் இப்படி ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டாரோ!
ஒரு விடயம் நமக்குப் புரிந்து விட்டது. செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் கூடும் நாள் வரும்வரை கோவிட்-19 இன்னும் அதிகரிக்கும் என்பதை நம்பலாம்! நமது சுகாதார இயக்குனர் எவ்வளவோ பாடுபட்டு தொற்று பரவாமலிருக்க ஓடி ஓடி பணி செய்கிறார். இப்போது தினசரி ஐந்து இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போடுப்படுவதாக கூறப்படுகிறது. பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஒரு பக்கம் தடுப்பூசி போட்டு தொற்று நோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் எனப் போராட்டம். இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள் தொற்று இன்னும் அதிகரிக்கப்பட வேறொரு வகையான போராட்டம்! அதனால் தான் அரசியல்வாதிகள் அடிக்கடி சட்டத்தை மீறுபவர்களாக இருக்கிறார்கள்! அதனால் கோவிட்-19 நாடாளுமன்றம் கூடும்வரை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்!
நமது பிரதமர் முகைதீன், கோவிட்-19 நாட்டிற்குள் முன் பக்க வழியாக நுழைந்த போது அவர் அதே சமயத்தில் பின் பக்க வழியாக புகுந்து பிரதமராக பதவியேற்றவர்! அவருக்கும் இந்தத் தொற்றுக்கும் ஏதோ ஒரு முன்ஜென்ம தொடர்பு இருந்திருக்க வேண்டும்! அந்தத் தொடர்பு அவருக்கு நல்லதைச் செய்கிறது! நமக்குக் கெடுதல் செய்கிறது!
இது இப்படியே தான் போய்க் கொண்டிருக்கும்! மக்களுக்கு ஏதும் விடிவு காலம் பிறக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது நெருக்கடி அல்ல! ஆணவத்தின் உச்சம்!
No comments:
Post a Comment