Monday 30 August 2021

முதியவர் மரணம்

நமது மருத்துவமனைகளில் என்ன தான் வேலை பளு என்றிருந்தாலும் ஒரு சில விஷயங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.


சுங்கை பட்டாணி மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்  ஒருவர்  அலட்சியமாக சாகடிக்கப்பட்ட விதம் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

வயதான நடக்க முடியாத அந்த பெரியவர் தனது படுக்கைக்குக் கூட செல்ல முடியாத நிலையில், ஊர்ந்து சென்றும் அவரால் தனது படுக்கையை அடைய முடியவில்லை. தனது அருகில் இருந்த நோயாளி ஒருவரின் படுக்கையைப் பிடித்துக் கொண்டு எழ முயற்சி செய்தும் அவரால் எழ முடியவில்லை. எழ முடியாமல் கடைசியில் கீழே விழுந்தவர் அதற்கு மேல் அவரால் எழவே முடியவில்லை என்பது தான் சோகம்.

சுமார் 40 நிமிடங்கள் கீழே விழுந்து கிடந்தவர் அப்படியே கிடந்தவர் தான். யாரும் உதவிக்கு வரவில்லை.  கோவிட்-19 நோயாளிகளே அந்த வார்டில்  இருந்தவர்கள் என்பதால் அவர்கள் உதவிக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

அந்த நோயாளிகளிடையே ஒருவர் செவிலியரின் உதவிக்காக குரல் கொடுத்திருக்கிறார். அதற்கு அந்த செவிலியரின் பதில்: "உயிர் இருக்கிறதா இல்லையா பார்!" என்பது தான்.

செவிலியர்களின் பணியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் வேலை பளுவை நாம் அறிந்திருக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது அவர்களின் கடமை. அது மலாய்க்காரர் உயிரா, சீனர் உயிரா, இந்தியர் உயிரா என்று அவர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால் இந்தியர் உயிருக்குக்  குரல் கொடுக்க ஆளில்லை.  அதுவே இந்த அலட்சியத்திற்குக் காரணம் என நாம் நினைப்பதில் என்ன தவறு?

இனி இது பற்றிப் பேச, இறந்ததைப் பற்றி  மேலும் விசாரணை செய்ய எதுவும் ஆகப்போவதில்லை! போன உயிர் போனது தான்! மீண்டும் வரப்போவதில்லை!

ஏகப்பட்ட உயிர்கள் இந்தக்  கோவிட்-19 காலக்கட்டத்தில் பலியாகி இருக்கின்றனர். அதில் அரைகுறையாக இறந்தவர்களும் இருக்கிறார்கள். இறக்கடிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக "கோவிந்தா!" போட்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நேரம் வயதானவர்களுக்குச் சாதகமாக இல்லை. அதனால் உங்கள் உயிரை  நீங்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் மீது பழிபோட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்!

No comments:

Post a Comment