Saturday 14 August 2021

வேறு வழியே இல்லையா?

 இத்தனை மாதங்களாக ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் "நானே வழி!"  என்று இறுமாப்புடன் தனக்கு ஏற்றவாறு நாட்டை மாறியமைத்து, கால்போன போக்கிலே மக்களைக் கால்நடைகளைப் போல, மாக்களைப் போல நாட்டை "வலிநடத்தி!" வந்த பிரதமர் இப்போது தான் சமாதானத்திற்கு வந்திருக்கிறார்!

ஆடிய ஆட்டம் அடங்கிப் போனது!  இதற்குள் எத்தனை ஆட்டம்! அடவாடித்தனம்! ஆர்ப்போட்டம்! ஆதரவு கொடுத்தால் உடனே பதவி! உடனே அமைச்சர்! கோவிட்-19 தொற்றை என்னால் அதிகரிக்கவும் முடியும், அபகரிக்கவும் முடியும்!

ஆனால் அனைத்துக்கும் ஒரு காலம் உண்டு! ஓர் எல்லை உண்டு! ஒரு முடிவும் உண்டு! "முதலும் முடிவும் நானே!" அது ஆண்டவன் மட்டும் தான். மனிதனால் முடியாது  என்பது இப்போது புரிந்திருக்கும்!

பிரதமர் இப்போது எதிர்க்கட்சிகளை "வாங்க பேசலாம்!" என்று தாம்பாளத்தட்டில்  அழைப்பை  விடுத்திருக்கிறார்! இப்போது தான் நாட்டின் நிலைத்தன்மை அவருக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கிறது! கொஞ்சம் இனிப்பையெல்லாம் வாரி வழங்கியிருக்கிறார்! "பிரதமர் இனி இரண்டு தவணைகள் மட்டுமே. கட்சித் தாவுதலை தடுக்கும் சட்டம்.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரிசமமான ஒதுக்கீடு, சலுகைகள், 18 வயது வாக்களர்கள் இயல்பாகவே பதிவது, எதிர்க்கட்சித்  தலைவருக்கான அதிகாரம்"  இப்படி பல இனிப்புக்கள்!

ஆனால் அப்படியெல்லாம் எதிர்க்கட்சிகள் மயங்கிவிடும் என்பதாகத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைமை என்ன? இங்கும் சரியான தெளிவில்லை. அம்னோ கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராவதை மற்ற கட்சிகள் ஏற்காது. காரணம் முன்னால் பிரதமர் நஜிப்பை அவர்கள் புனிதராக மாற்றிவிடுவார்கள்! அன்வார் பிரதமராவதை அம்னோ ஏற்காது! அவரால் அவர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

எப்படிப் பார்த்தாலும் இங்கும் சிக்கல் தான்! இது அரசியல்! எதுவும்  எந்நேரத்திலும் மாறலாம்! அப்படியே ஒருவர் வந்தாலும் முகைதீனுக்கு உள்ள பிரச்சனையை அவரும் சந்திக்க நேரலாம்!

அடுத்த தேர்தல் வரை பொறுத்திருப்போம்! வேறு வழி தெரியவில்லை!

No comments:

Post a Comment