Monday 9 August 2021

நாடாளுமன்றம் கூடாது!

 நாடாளுமன்றம் இந்த மாதமே கூட வேண்டும் என்று சொன்னாலும் அது நடப்பதற்கான வாய்ப்பும் குறைந்து வருகிறது!

நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 88 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் சுகாதார தலைமை இயக்குனர்!

மக்களே! தடுப்பூசி போடுங்கள் என்று நமக்கெல்லாம் புத்தி சொல்லும் நிலையில் இருப்பவர்கள் பாவம்! அவர்களுக்கே நேரம் இல்லாமல் இப்போது, நாடாளுமன்றம் முடங்கிக் கிடப்பது போல, அவர்களும் முடங்கிக் கிடக்கிறார்கள்!

ஏன் இவர்கள் முன்னமையே தடுப்பூசி போடவில்லை? போட்டால் நாடாளுமன்றத்தை முடக்க முடியாமல் போய்விடும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்!  அவர்கள் எதிர்பார்த்தபடி நாடாளுமன்றத்தை முடக்கியாகிவிட்டது! நாடாளுமன்றம் இந்த மாதத்தில் கூட வாய்ப்பில்லை!

ஆமாம்! எந்த அளவில், இவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எப்படி நம்புவது? மிகவும் சிக்கலான கேள்வி! சுகாதார அமைச்சு சொல்வதை நாம் நம்பத்தான் வேண்டும்! இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து சுகாதார தலைமை இயக்குனர் சொல்லுவதைத் தானே நாம் நம்பிக் கொண்டு வருகிறோம்! அது போலவே இந்த செய்தியையும் நாம் நம்பத்தான் வேண்டும்!

ஆனால் பெரும்பான்மையோர், அப்படி என்றால் பொது மக்கள், இப்படி ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை நம்பத் தயாராக இல்லை! காரணம்,  அதென்ன தீடீரென்று இப்படி ஒரு அறிவிப்பு! இதெல்லாம் நாம் நம்பித்தான் ஆக வேண்டுமா? என்கின்றனர்.

நம்பித்தான் ஆக வேண்டும் என்று உங்களை யாரும் வற்புறுத்தவில்லை. அரசாங்கம் அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தான் நல்ல குடிமகன்களுக்கு அழகு! கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை! உரிமை கேட்டால் அப்புறம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எல்லைக்குப் போய்விடும்! காவல்துறையும் களத்தில் இறங்கிவிடும்!

அந்த அளவுக்கு நாம் போக வேண்டாம்! சுகாதார அமைச்சோ, பிரதமரோ, அமைச்சர்களோ யார் சொன்னாலும் தட்டாமல் கேட்டுக் கொள்வோம். அவர்களிடம் தானே தேவையான தகவல்கள் உள்ளன. வேறு யாரிடமும் இல்லையே!  அதனால் சொன்னால் புரிந்து கொள்ளூங்கள் . இந்த  செய்தியையும் நாம் நம்புவோம்.

நாடாளுமன்றம் நடக்கக் கூடாது என்று ஒரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது! அந்தப் போராட்டம் நடக்கட்டும்!  அது நாட்டுப் பற்று!நாம் எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது. அது நாட்டுக்குக் எதிரானது. தேசத் துரோகம்!

அதனால் நாடாளுமன்றம் எப்போது கூடும், கூடாது என்பதெல்லாம் பொது மக்களுக்குத் தேவையில்லாத விஷயம். நடக்கும் போது நடக்கட்டும்! அரசியலை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்! பொது மக்கள் வீட்டில் முடங்கிக்கிடப்போம்!

No comments:

Post a Comment