Sunday 15 August 2021

என்ன தான் முடிவு?

 பிரதமர் முகைதீன் யாசின்  பதவி விலகுவது பற்றி நாளை, திங்கள்கிழமை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்தது பொதுத் தேர்தலா அல்லது அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆவதற்கான  வாய்ப்பு உண்டா அல்லது வேறு யாரும்  அந்தப் பதவிக்குப் போட்டியிடுவார்களா என்பதில் தெளிவில்லை.

அம்னோ சார்பில் துங்கு ரசாலி ஒரு பக்கம், பி.கே.ஆர். சார்பில் அன்வார் இப்ராகிம் ஒரு பக்கம் வாரிசான் சாரபில் ஷாபி அப்துல்லா ஒரு பக்கம். நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அம்னோ வேறு யாரையும் கொண்டு வருமா என்பதும் தெரியவில்லை. ஆனால் தற்காலிகமாக அவர்கள் துங்கு ரசாலியை ஆதரிக்கலாம். துங்கு ரசாலியின் நேர்மையை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர் அம்னோவைச் சார்ந்தவர் என்பதால் அம்னோவின் நேர்மையில்  அனைவருக்கும் சந்தேகம் உண்டு. ஷாபி அப்துல்லா மேற்கு மலேசியா சேர்ந்தவர் அல்ல என்பது அவரது பலவீனம்!

அடுத்து பொதுத் தேர்தல் என்கிற ஒரே சாத்தியம் தான் உண்டு. அதற்குப் பெரும் தடையாக இருப்பது கோவிட்-19. ஏற்கனவே ஒரு மாநிலத் தேர்தல் மூலம், திட்டமிட்டு நாடெங்கும் பரப்பபட்டு இன்றவரை  அந்தத் தொற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம். அதுவும் சாத்தியமில்லை என்கிற நிலைமை தான்!

ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனத்தையும், செய்த துரோகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு,  குறைந்தபட்சம் இன்னும் ஓர் ஆண்டுக்கு அடுத்த தேர்தல் வரை பல்லைக்கடித்துக் கொண்டு யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்! ஆதரவு கொடுக்க வேண்டும்!

அரசியல்வாதிகளை அப்படி ஒன்று படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான். அவர்கள் என்ன நாட்டு மக்கள் நலனுக்கா போரடப் போகிறார்கள். எல்லாம் சுயநலம் தான்!  அரசியல்வாதிகளிடம் பொது நலன் என்பது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை!

டாக்டர் மகாதிரின் பெயர் ஒரு பக்கம் அடிபடும் என்றாலும்  அவர் மேல் உள்ள நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்! இன்று இந்த நாடு இந்த அளவுக்குக் கேவலமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவர் தான் காரணம் என்பதை அரசியல்வாதிகள் மட்டுமல்ல  மக்களும் அறிவார்கள்! அவர் மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை! இனி அவரில்லை என்பது தான் உண்மை!

இனி ஒரு சில தினங்களுக்கு இழுபறி இருந்து கொண்டு தான் இருக்கும்! யாருக்கு ஆதரவு என்பது அவ்வளவு சீக்கிரத்தில் முடியக் கூடிய பிரச்சனை அல்ல.

ஆனால் அனைத்தும்  மாமன்னரின் கையில் தான் உள்ளது.  யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை அவரிடம் தான் உள்ளது.

கடைசியாக, நடப்பது அனைத்தும் நன்மைக்கே!


No comments:

Post a Comment