Sunday 22 August 2021

தாக்குப் பிடிப்பாரா?

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வேலை இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல் தோன்றுகிறது. வாழ்த்துகள்!

இனி இவர் எப்படி செயல்படுவார் என்பதைத் பொறுத்துத் தான் இவருடைய ஆட்சியைக் கணிக்க முடியும்.

புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அம்னோ கட்சியைச் சேர்ந்தவர். ஆக, மீண்டும் அம்னோ,  தான் ஒரு அசைக்க முடியாத கட்சி என்பதை நிருபித்துவிட்டது!

ஆனால் பெரிகாத்தான் நேஷனல் நடப்பது எங்களது ஆட்சி என்கின்றனர். அதுவும் சரியே. புதிய பிரதமரை ஆதரிப்பவர்களில்  50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் நேஷனலைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாரிசான் நேஷனல் (அம்னோ) கட்சியைச் சேர்ந்தவர்கள் 41 பேர் மட்டுமே.

அதனால் ஆட்சி இப்போது பெரிகாத்தான் நேஷனல் கையில். பாரிசான் நேஷனல் கையில் அல்ல! 

எல்லாம் சரிதான்.  இவர்கள் நல்லதைச் செய்தால் யார் வேண்டாம் என்பார்கள்?  இப்போதே புதிய பிரதமருக்கு ஒரு சில சவால்கள் வந்துவிட்டன. நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பெரிய அடியாகப் பார்க்கலாம்! 

அம்னோ மீண்டும் தனது புத்தியைக் காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே முகைதீனின் அரசாங்கத்தை இவர்களே கவிழ்த்தவர்கள்!

ஆனாலும் இந்த முறை மாமன்னரின் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகம் நமக்கு உண்டு. காரணம் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பை மாமன்னர் விரும்பமட்டார்.  முடிந்தவரை நல்லதொரு ஆட்சி தொடர வேண்டும் என்பதையே  மாமன்னர்  விரும்புவார். ஆட்சி கவிழ்ப்பு என்பதை நாம் கூட விரும்பவில்லை.

ஆனால் பிரதமர் ஊழல் பேர்வவழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதன் பலனை அவர் அனுபவிக்கத்தான் வேண்டும். எதிர்கட்சியினர்  சும்மா இருக்கப் போவதில்லை!  அவர்கள் கைவரிசையை அவர்கள் காட்டத்தான் செய்வார்கள்!

ஆக, பந்து பிரதமர்  கையில்!  அவர் நாட்டை எப்படி வழிநடுத்துவார்  என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

துணைப்பிரதமராக யாரை அவர் நியமிக்கப் போகிறார் என்பதெல்லாம் மிக அணுக்கமாக எதிர்கட்சியினரால் கவனிக்கப்படும்.

ஒன்று இப்போது இருக்கும் அமைச்சரவையை அவர் தொடர்வார் என்றே பார்க்கப்படுகிறது. ஒரு சில மாற்றங்கள் வரலாம். ஆனால் ஊழல்வாதிகளை அவர் எங்கே வைக்கப் போகிறார் என்பது மிக மிக முக்கியம்.

அடுத்த 21 மாதங்களுக்குப் பிரதமர் தாக்குப் பிடிப்பாரா அல்லது இன்னொரு கவிழ்ப்பு ஏற்படுமா என்பதை பிரதமர் முடிவு செய்ய வேண்டும்.

நாட்டுக்கு நல்லது செய்தால் நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை!

No comments:

Post a Comment