Thursday 26 August 2021

துணை சபாநாயகர் யார்?

 துணை சபாநாயகர் யார் என்கிற கேள்வி இப்போது பிரதமர் முன்  வைக்கப்பட்டிருக்கிறது!

பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஒற்றுமை அரசாங்கத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவர் அவர் தான். எதிர்கட்சியினர் தன்னோடு ஒத்துழைக்க வேண்டும் என வெளிப்படையாகவே அவர் பேசினார். ஒற்றுமை வேண்டும், ஒத்துழைப்பு வேண்டும்  என்றெல்லாம் பேசியதன் மூலம்,  தான் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது!  

அது நல்லது தான். ஒற்றுமைப்பற்றி பேசுவதும், ஒத்துழைப்புப்பற்றி பேசுவதும்  வாயளவில் இருந்தால் மட்டும் போதாது. அதனை வெளிப்படையாகக் காட்டுவதற்கு இதுவே சரியான தருணம்.

அந்த நல்ல தருணம் பிரதமருக்கு இப்போது வாய்த்திருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என்பதைப்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை.

துணை சபாநாயகர் பதவி ஓர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கொடுக்க வேண்டும் என்கிற பேச்சு இப்போது தான் முன்னெடுக்கப்படுகிறது. இத்துணை நாள் அப்படி ஒரு பேச்சு எழ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.  அப்போதைய பாரிசான் அரசாங்கம்   தனது   முழு பலத்துடன் செயல்பட்டது. அப்போதெல்லாம் இப்படி ஒரு கேள்வி கேட்பதையே தேசத் துரோகம் என்பார்கள்!  இன்றைய நிலைமை வேறு. முழு பலம் இல்லாததால் தான்  முகைதீன் யாசின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது!

இப்போது இஸ்மாயில் சப்ரிக்கும் அதே நிலை தான். அதனால் தான் ஒற்றுமை அரசாங்கத்தைப் பற்றி இஸ்மாயில் சப்ரி  வாய் திறந்தார்! இல்லாவிட்டால் அப்படியெல்லாம் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்காது!

எதிர்கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என விரும்பும் இஸ்மாயில் அந்தக் கட்சிகளுக்கும் ஏதேனும் பொறுப்புகள் கொடுப்பது தான் சிறப்பான வழியாக இருக்கும். 

எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும், ஒற்றுமையாக அரசாங்கத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரே அர்த்தம் தான்: "என்னைக் கவிழ்த்து விடாதீர்கள்!"  

அதனால் நாம் கூற விரும்புவது, துணை சபாநாயகர்  பதவி எதிர்கட்சியினருக்குக் கொடுங்கள் என்பது தான். கொடுத்துத்தான் பாருங்களேன், என்ன கெட்டுப் போய்விட்டது? இருப்பதோ இன்னுமொரு 21 மாதங்கள். பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அப்போதைய நிலவரத்தின்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்!

துணை சபாநாயகர் யார் என்பதை நானும் எதிர்பார்க்கிறேன்!

No comments:

Post a Comment