Tuesday 10 August 2021

பேசலாம் வாங்க!

நாடாளுமன்றத்தை  செப்டம்பர் மாதத்தில் தான் கூட்டுவோம் என்கிற செய்தியை அறிவிக்கும் போதே நமக்குச் சில சமிக்ஞைகள் கிடைத்துவிட்டன!

மற்றைய கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போடுவதற்கு ஒரு மாதமாவது தேவை என்கிற நோக்கத்தோடு தான் ஒரு மாத இடைவெளியை அறிவித்திருக்கிறார் பிரதமர். அதற்குத் தோதாக கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டிருப்பதால் நாமும் வேறு வழியில்லை என்பதால் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கட்சி மாற அல்லது ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிறையவே சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்பதை அறியும் போது நமக்கு "ஆ!" என்று வாயைப் பிளப்பது தவிர வேறொன்றும் தோன்றவில்லை!

கட்சி மாறினால் மூன்று கோடி வெள்ளி ரொக்கம், அமைச்சர் பதவி இன்னும் பல பரிசுகள்! ஒரு சிலர், இதற்கு முன்னர், எந்தக் கேள்வியும் கேட்காமல் போய் சேர்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் சொல்லிய காரணங்கள் நம்மைக்  கண் கலங்க வைக்கும்! அந்த அளவுக்குக் கொள்கைப் பிடிப்பு, மக்கள் சேவை, கட்சியில் சர்வாதிகாரம் இப்படி எத்தனையோ புலம்பல்கள்! 

ஆனால் இந்தனை சலசலப்புக்குப் பின்னரும் ஆளும் தரப்பினர்  இந்த பேச்சு வார்த்தைகள் நடந்தன என்பதை ஒப்புக் கொள்வார்களா? மாட்டார்கள்! மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தானே அவர்களின் கொள்கை!

இத்தோடு அவர்களின் முயற்சியைக் கை விடுவார்களா? விடமாட்டார்கள்! கடைசி நாள்வரை அவர்கள் முயன்று கொண்டு தான் இருப்பார்கள்!  மீன் வலையில் சிக்காதா என்று தொடர்ந்து வலை வீசிக் கொண்டு தான் இருப்பார்கள்! கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கலாம்!

இப்போது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்களே அவர்களின் நிலை என்ன? காவல்துறை இவர்களைத்தான் விசாரிக்கும். அதுவும் துருவி துருவி விசாரிக்கும்! முடிந்தால் அவர்களை இரண்டு மூன்று நாள்கள் சிறையில் போடும்! காவல்துறை நடப்பு அரசாங்கத்திற்கு மிகவும் இணக்கமானவர்கள். அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்பதில் எச்சரிக்கை உள்ளவர்கள்.

அதனால் புகார் கொடுப்பதற்கு முன்பே அனைத்தையும் அலசி ஆராய வேண்டும். காவல்துறை யார் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்! என்ன செய்வது! அவர்களுக்கும் மேலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன என்பது இயல்பானது!

பேசலாம் வாங்க! என்கிற அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்! வராவிட்டால் ஏதாவது பயமுறுத்தல் நாடகம்  நடக்கலாம்! தங்களது பதவியைத் தற்காத்துக் கொள்ள அவர்கள் எதையும் செய்யத் தயார்!

அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் எதனையும் கைவிட மாட்டார்கள். யார் மாட்டுவார் என்பது அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னர் தெரிய வரும்.

பொறுத்திருப்போம்! அதனையும் பார்ப்போம்!

No comments:

Post a Comment