Sunday 1 August 2021

கோவிட்-19 அலை எப்போது ஓயும்?

 ஒவ்வொரு நாளும் கோவிட்-19 அலை அதிகரிக்கிறதே தவிர குறைந்து வருகிறது என்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை!

இப்போதுள்ள அரசியல் சூழலில்,  எந்நேரத்திலும் அரசாங்கம் கவிழலாம் என்று சொல்லி சொல்லியே அதுவும் இல்லை, இதுவும் இல்லை, எதுவும் இல்லை என்று தான் போய்க் கொண்டிருக்கிறதே  தவிர, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

பொதுவாக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை  என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பொது மக்களைப் பொறுத்தவரை அவர்களின் அன்றாடப் பிரச்சனைகள் கூடிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இப்போது வருமானம் இல்லாமல் அவதிப்படும் குடும்பங்கள் ஏராளம். கட்ட வேண்டிய மாதத் தவணைகள் பல.  காருக்கான தவணை, வீட்டுக்கான வங்கிக்கடன் அல்லது வீட்டு வாடகை - இவைகள் எல்லாம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் பலர் இருக்கின்றனர். குடும்பங்களின் பசியைப் போக்க ஒரளவு தொண்டு நிறுவனங்கள் உதவியாய் இருக்கின்றன. அவ்வளவு தான் அவர்களால் செய்ய முடியும். மற்றபடி மாதாமாதம் கட்ட வேண்டிய - அவர்களின் நிதிச் சுமையைப் போக்க - அவர்களால் மட்டும் தான் முடியும். அதற்கு அவர்கள் செய்கின்ற வேலை தான் உதவ முடியும். அங்கு தான் பிரச்சனை எழுகிறது!

சுகாதார அமைச்சு வெளியிடுகிற செய்திகளைப் பார்க்கும் போது  வேலை செய்கின்ற இடத்திலிருந்தது தான் - அதாவது தொழிற்சாலகளிலிருந்து தான் -  கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

முதலில் வேலை செய்பவர்களுக்குப் போட வேண்டிய தடுப்பூசியைப் போட்டிருந்தால் இந்த அளவுக்குத் தொற்று அதிகளவு பரவுமா என்று தான் நாம் கேட்க வேண்டியுள்ளது. பொறுப்பில்லாமல் பல காரியங்கள் அதாவது திட்டமிடாமல் பல காரியங்கள் செயல்படுத்தியதால்  தான்  நோயின் பாதிப்பைக் குறைக்க முடியவில்லை.

தொழிற்சாலைகள் திறப்பதற்கு முன்னதாகவே அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். அப்படி போடப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் ஏன் தொழிற்சாலைகளிருந்து தான் தொற்று பரவுகிறது என்று செய்திகள் வர வேண்டும்?

இங்கு தான் அரசாங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை.  தடுப்பூசி போடததால் தான் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.  ஒரு சிலர் போட்டிருப்பார்கள், ஒரு சிலர் போடவில்லை. வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம்,  உள் நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம்!  முதலாளிகளுக்குச் சார்பாகத்தான் நாங்கள் செயல்படுவோம்  என்பது தான் அரசாங்கத்தின் கொள்கை என்றால் பாதிக்கப்படுபவர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் மட்டும் அல்ல அனைத்து மலேசியர்களும் தான்,  அரசியல்வாதிகள் உட்பட!

அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் தான் இன்று மலேசியர்கள் அனைவருமே சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 

அரசியல் சண்டை ஓயும் வரை கோவிட்-19 தொற்றும் ஓயாது!

No comments:

Post a Comment