Saturday 28 August 2021

புதிதாக ஒன்றுமில்லை!

 புதிய அமைச்சரவையைப் பிரதமர் அறிவித்துவிட்டார்.

அவர் என்ன தான் செய்வார்? பல கட்சிகளின் கூட்டணி. அனைவருக்கும் பதவிகள் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம். இல்லாவிட்டால் கவிழ்த்து விடுவார்கள் என்கிற பயமும் உண்டு!

இந்த சூழலில் அவரால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. மேலும் அவர் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு பிரதமர் பதவிக்கு வரவில்லை! ஏதோ இடைக்காலத்தில் இருக்கிற உடைசலை எதையாவது போட்டு  அடைக்க  வந்தவர்! பெரியதாக எதையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!

இந்த நேரத்தில் சுகாதார அமைச்சராக கைரி ஜமாலுடினின் நியமனம்  வரவேற்புக்குரியது. எங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதில் எங்களுக்குப் பெருமை தான். அதே சமயத்தில் மற்றவர்களை விட அவர் தனித்து நிற்கிறார். திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர் அல்ல!  அவர் தலைமையில் சுகாதார அமைச்சு சிறப்பாக இயங்கும் என நம்பலாம்!

அடுத்து மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தொடர்ந்து இந்த அமைச்சரைவையிலும் அதே பதவியில் நீடிக்கிறார். குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர் சிறப்பாகவே இயங்குபவர். உணவகத்துறை சார்ந்தவர்களுக்கு அவர் பக்கபலமாக இருப்பவர்.   உணவகத்துறைச் சார்ந்தவர்கள் நிம்மதியோடு  இருக்கலாம். மாற்றம் ஏற்பட்டிருந்தால் ஐயகோ! மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்! தப்பித்தார்கள்!

மற்றபடி போற்றும்படியாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. மீண்டும் அதே தோல்வியாளர்கள். தோல்வியாளர்கள் மூஞ்சியில் தான் நாம் தினசரி விழிக்க வேண்டும்! எல்லாம் அரைகுறைகள்!

இந்த மூஞ்சி முகரைகளுக்குப் பதவி கொடுக்காவிட்டால் அடுத்த நிமிடமே இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம் கவிழ்ப்பு நாடகத்தை எதிர்நோக்க வேண்டி வரும்! எல்லாமே, எல்லாரையுமே சரிசெய்து கொண்டு போக வேண்டிய நிலை!

பொதுவாக எடுத்துக் கொண்டால் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. அப்படி எதையும் பிரமாதமாக செய்துவிட முடியாது என்பது நமக்கும் தெரியும்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை ஓரு இடைக்கால அரசாங்கம் தேவை. அந்த அரசாங்கத்தை நடத்தியதன் மூலம் முகைதீன் யாசின் பிரதமராக வந்தார். இப்போது இஸ்மாயில் சப்ரி பிரதமராக வந்திருக்கிறார். மற்றபடி இவர்கள் எந்தக் காலத்திலும் பிரதமராக வருவோம் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்! அவர்களுடைய பிரதமர் வாய்ப்பு  இத்தோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

பிறகு இவர்கள் பிரதமர் ஆகவே முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை!

பதவிக்குப் பிரதமர் புதியவர். மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment