Tuesday, 31 August 2021
ஒளி மங்கிய சுதந்திர தினம்
தனியார் பரிசோதனை வேண்டாமே!
கோவிட்-19 பரிசோதனை என்கிற பெயரில் தனியார் நிலையங்கள் அரசாங்க அனுமதியில்லாமல் செய்து வருவதாக செய்திகள் வருகின்றன.
சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் ஓர் அழகு நிலையம் கோவிட்-19 பரிசோதனை என்கிற பெயரில், குறைவான கட்டணத்தில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
டாக்டர் இல்லை. தாதியர் இல்லை. ஆனால் அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்களை வைத்து தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றது! அதுவும் மலிவான ரிம 50.00 கட்டணத்தில்!
நாம், மலேசியர்கள், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் பழக்கம் உடையவர்கள். அதனால் தான், யார் யாரோ, இந்தத் தொற்று நோய்க்குக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்களெல்லாம், தடுப்பூசி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்!
இன்றைய நிலையில் அரசாங்கம் தான் அதிகாரபூர்வமாக கோவிட்-19 க்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் என்றாலும் அல்லது தனியார் கிளினிக்குகள் என்றாலும் அவைகள் அரசாங்கத்தின் அனுமதியோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு போலி மருந்துகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை.
உண்மையைச் சொன்னால் தடுப்பூசி போடுவதற்கு அங்கும் இங்கும் அலைவதைவிட அரசாங்கம் கொடுக்கும் தேதியையும், மையத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அந்த தேதியில் அல்லது மையத்திற்குச் சென்று உங்களது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். அதுவே சிறந்த வழி. எனது குடும்பத்தையே எடுத்துக் கொண்டால் நான் தனியார் மருத்துவமனை, எனது பிள்ளைகள் அரசாங்க மருத்துவமனை, தனியார் கிளினிக் - இப்படி வெவ்வேறு இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த ஏற்பாட்டையும் நாங்கள் செய்யவில்லை. அனைத்தும் அரசாங்கத்தின் ஏற்பாடுகள்.
இப்படி அழகு மையங்களுக்கெல்லாம் போய் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள். அவை நம்பத்தகுந்தவை அல்ல. மேலும் அவர்கள் போடும் தடுப்பூசி என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துமோ, யாருக்கும் தெரியாது!
அதனால் உங்கள் தடுப்பூசிக்கு அரசாங்கத்தை நம்புங்கள். அதுவே சிறந்த வழி. தடுப்பூசியில் போலி இருக்காது.
தனியார் மையங்களில் கோவிட்-19 தடுப்பூசி வேண்டாம்!
Monday, 30 August 2021
முதியவர் மரணம்
நமது மருத்துவமனைகளில் என்ன தான் வேலை பளு என்றிருந்தாலும் ஒரு சில விஷயங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
சுங்கை பட்டாணி மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் அலட்சியமாக சாகடிக்கப்பட்ட விதம் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.
வயதான நடக்க முடியாத அந்த பெரியவர் தனது படுக்கைக்குக் கூட செல்ல முடியாத நிலையில், ஊர்ந்து சென்றும் அவரால் தனது படுக்கையை அடைய முடியவில்லை. தனது அருகில் இருந்த நோயாளி ஒருவரின் படுக்கையைப் பிடித்துக் கொண்டு எழ முயற்சி செய்தும் அவரால் எழ முடியவில்லை. எழ முடியாமல் கடைசியில் கீழே விழுந்தவர் அதற்கு மேல் அவரால் எழவே முடியவில்லை என்பது தான் சோகம்.
சுமார் 40 நிமிடங்கள் கீழே விழுந்து கிடந்தவர் அப்படியே கிடந்தவர் தான். யாரும் உதவிக்கு வரவில்லை. கோவிட்-19 நோயாளிகளே அந்த வார்டில் இருந்தவர்கள் என்பதால் அவர்கள் உதவிக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அந்த நோயாளிகளிடையே ஒருவர் செவிலியரின் உதவிக்காக குரல் கொடுத்திருக்கிறார். அதற்கு அந்த செவிலியரின் பதில்: "உயிர் இருக்கிறதா இல்லையா பார்!" என்பது தான்.
செவிலியர்களின் பணியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் வேலை பளுவை நாம் அறிந்திருக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது அவர்களின் கடமை. அது மலாய்க்காரர் உயிரா, சீனர் உயிரா, இந்தியர் உயிரா என்று அவர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால் இந்தியர் உயிருக்குக் குரல் கொடுக்க ஆளில்லை. அதுவே இந்த அலட்சியத்திற்குக் காரணம் என நாம் நினைப்பதில் என்ன தவறு?
இனி இது பற்றிப் பேச, இறந்ததைப் பற்றி மேலும் விசாரணை செய்ய எதுவும் ஆகப்போவதில்லை! போன உயிர் போனது தான்! மீண்டும் வரப்போவதில்லை!
ஏகப்பட்ட உயிர்கள் இந்தக் கோவிட்-19 காலக்கட்டத்தில் பலியாகி இருக்கின்றனர். அதில் அரைகுறையாக இறந்தவர்களும் இருக்கிறார்கள். இறக்கடிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக "கோவிந்தா!" போட்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்த நேரம் வயதானவர்களுக்குச் சாதகமாக இல்லை. அதனால் உங்கள் உயிரை நீங்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறைவன் மீது பழிபோட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்!
தடுப்பூசிகளைத் தயாரிப்போம்!
மலேசியா கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் என்னும் செய்தி வரவேற்கக் கூடிய செய்தியாகவே நான் பார்க்கிறேன்.
நாம் நினைத்தது போல கோவிட்-19 தொற்று சும்மா ஒரு ஊசி இரண்டு ஊசி போட்டுவிட்டால் போதும் அத்தோடு அது நம்மை விட்டு ஓடிவிடும் என்பது தவறான கருத்து என்பது இப்போது தான் நமக்குத் தெரிகிறது.
ஆனானப்பட்ட அமெரிக்காவே இந்தத் தொற்றால் திணருகிறது என்றால் நாம் எம்மாத்திரம்? அமெரிக்கா முற்றிலும் ஒழித்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் அடுத்த அலை ஆரம்பித்துவிட்டதாக இப்போது செய்திகள் வருகின்றன!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வெற்றிகரமாக தொற்றை ஒழித்துவிட்டார்கள் என்று கூறி வந்த நிலையில் தீடீரென ஓணம் பண்டிகையின் போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது கோவிட்-19!
ஆக போகிற போக்கைப் பார்க்கிற போது இது இப்போதைக்கு ஒழிக்க முடியாத ஒரு நோயாகவே நாமும் ஒரு முடிவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும் என்னும் கேள்விக்கு இப்போதைக்குப் பதில் இல்லை!
அதனால் இந்த நோயின் தடுப்பூசிக்காக எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பதைவிட உள்ளுரிலேயே தயாரிப்பது என்பது நல்லதொரு செய்தியாகவே நான் பார்க்கிறேன். அதற்கான வாய்ப்பும் வசதிகளும் இருந்தால், அதற்கான நிபுணத்துவமும் நம்மிடம் இருந்தால் அதனைத் தயாரிப்பதற்கு என்ன ஆட்சேபனை இருக்கப் போகிறது?
எப்படி இருந்தாலும் இந்த தடுப்பூசிக்காக உலக நாடுகளையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நேரம் வரும் போது நமது தயாரிப்பே நமக்குக் கை கொடுக்கும்.
கோவிட்-19 தொற்று என்பது ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் உலகத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது! அது தொடர்ச்சியாக மனித குலத்திற்கு எதிராக இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் நாமும் நமது நாடும் சும்மா அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதற்கான அடுத்தக்கட்ட வேலையை இப்போதே நாம் துவங்க வேண்டும்.
இப்போது தான் தடுப்பூசி பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம். ஒரு நிரந்தரமான அரசாங்கம் இல்லாததால் நடப்பு அரசாங்கத்தால் இது சாத்தியமா என்கிற ஐயமும் எழத்தான் செய்கிறது.
ஆனாலும் நடப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருக்கும் கைரி ஜமாலுடின் திறமையான அமைச்சர் என்று பெயர் எடுத்தவர். அவர் மீது மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அதற்கான வேலைகளை அவர் முன்னெடுப்பார் என நம்பலாம்.
தடுப்பூசிகளைத் தயாரிப்போம்!கோவிட்-19 க்கு தடுப்பணை கட்டுவோம்!
Sunday, 29 August 2021
குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர்
பொதுவாகவே குறிஞ்சி மலர் என்றாலே அந்த மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று பலர் அறிந்திருப்பார்கள்.
ஆனால் எனக்கென்னவோ குறிஞ்சி மலர் என்றாலே நாவலாசிரியர் தீபம் நா.பார்த்தசாரதியின் ஞாபகம் தான் வரும்! நான் அவருடைய தீவிர வாசகன். குறிஞ்சி மலர் நாவலையும் வாசித்திருக்கிறேன். வாசித்தது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள்! தீபம் பத்திரிக்கையில் வெளியாகிய பல கதைகளையும், கட்டுரைகளையும் 'பைண்டிங்' செய்து வைத்திருக்கிறேன். இன்னும் உள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அந்த மலரை அவரே ஊட்டிக்குச் சென்று பல ஆபத்தான மேடு பள்ளங்களைக் கடந்து அந்த மலரை தான் கண்டுபிடித்தாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்கு முன்னர் அப்படி ஒரு மலர் இருப்பதே யாருக்கும் தெரியாது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக தொல்காப்பியம், குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை, பரிபாடல் போன்ற இன்னும் பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்த அந்த மலர் இப்போது ஊட்டி எங்கும் நிறைந்து காணப்படுகிறது. அதற்கான காரணம் அவரே.
குறிஞ்சி மலர் புதர்வகையைச் சேர்ந்த பூ என்றும் பெரும்பாலும் மலைச்சரிவுகளில் காணப்படும் இந்தப் பூக்கள் நீல நிறத்தில் இருப்பதால் ஊட்டி என்னும் பெயரே மறைந்து இப்போது நீலகிரி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
குறிஞ்சி மலரை நான் பார்த்ததில்லை. நான் அங்கு சென்றிருந்த காலத்தில் அந்தப் பூக்கள் பூத்திருக்கவில்லை.
ஆனால் நா.பார்த்தசாரதி மலேசியா வந்த போது அவரை நான் பார்த்திருக்கிறேன். அது எனது பாக்கியமாக கருதுகிறேன்.
நான் 'குறிஞ்சி மலர்' நா.பார்த்தசாரதியைப் பார்த்திருக்கிறேன்! அது போதும்!
தமிழுக்கு அமுதென்று பேர்!
"தாயகம்" என்னும் தமிழ் வானொலி ஒலிபரப்பு ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து ஒலிபரப்பப்படுவதை பலர் அறிந்திருப்பர். நானும் காலை நேரத்தில் இடையிடையே கேட்பதுண்டு.
அதனை நடத்துபவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் பேசுகின்ற யாழ்ப்பாணத் தமிழ் எனக்குப் பிடிக்கும். சில சமயங்களில் அவர்கள் பயன்படுத்துகிற சில வார்த்தைகள் என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை! அதனால் என்ன பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு வேளை ஒரு சில வார்த்தைகள் சிங்கள வார்த்தைகளாகக் கூட இருக்கலாம். நாம் பேசுகின்ற போது மலாய் மொழி எப்படிச் சரளமாக வந்து விழுகிறதோ அதே போல சிங்களமும் கூடவே அவர்களுக்கும் வரலாம். அதுவும் சாத்தியம்.
அதே போல சென்னை தமிழ் என்கிறார்களே அது கூட பேசும் போது ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது! அதனை நாம் சும்மா ஒதுக்கிவிட முடியாது. வட சென்னை மக்கள் பயன்படுத்தும் மொழி அது. அதுவும் ஒரு கலப்புமொழி என்று சொல்லப்படுகிறது. தமிழோடு ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, உருது என்று அனைத்தும் கலந்த தமிழ் மொழி அது. இருந்து விட்டுப் போகட்டும். எப்படியோ நம்மால் புரிந்து கொள்ள முடிகிற வரை சரிதான்!
வட சென்னை மக்கள் பயன்படுத்தும் ஒரு வார்த்தையைச் சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இயக்குநர் ரஞ்சித் படமான சார்ப்பட்டா பரம்பரையில் "கெலிச்சே ஆகணும்!" என்னும் வார்த்தை புதிதாக இருந்தது. கெலிச்சே என்பது வெற்றியைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அது எந்த மொழியில் இருந்து வந்த சொல் என்பது தெரியவில்லை. ஒரு வேளை அது தமிழ்ச் சொல்லாகக் கூட இருக்கலாம். தமிழில் உள்ல பல சொற்களை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் எங்கோ எந்த மூலையிலோ, நாம் எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தமிழ்ச் சொற்களைக் கேட்க முடியும்!
நாம், மலேசியர்கள், பேசுகின்ற மொழி கூட தமிழக பட்டிமன்ற பேச்சாளர்களின் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது! நாம் பயன்படுத்தும், என்ன'லா, இல்லை'லா, அது ரொம்ப சின்னாங்கு - இப்படிப்பட்ட சொற்கள் எல்லாம் மலாய் மொழியின் தாக்கம் தான்! அதே போல சீன மொழி சொற்களும் நமது பேச்சுனூடே வருவதும் உண்டு.
ஆனாலும் இந்த மாற்றங்கள் எல்லாம் தவிர்க்க முடியாதவை. தமிழ் எந்த நாட்டிலெல்லாம் பேசப்படுகின்றதோ அந்த நாட்டு மொழியோடு தமிழ் கலந்து விடுவது இயல்பு தான்.
இப்படி எல்லாம் பேச்சு வழக்கில் மாற்றங்கள் வந்தாலும் தமிழ் என்னவோ இன்னும் சீர் இளமையோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!
Saturday, 28 August 2021
அம்னோவினர் திருப்தி அடையமாட்டார்கள்!
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலைமைச்சர், பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி புதிய அமைச்சரவையைப் பற்றி தனது கருத்தைக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
குறிப்பாக " அமைச்சரவையில் கணிசமான இடங்கள் அம்னோவுக்கு வழங்கப்பட்டாலும் அவர்கள் நிச்சயம் திருப்தியடையமாட்டார்கள்!" என்று அவர் கூறியிருப்பதை அலட்சியமாக ஒதுக்கிவிட முடியாது.
முகைதீன் எப்போது பிரதமராகப் பதவியேற்றாரோ அப்போதிருந்தே அவர்கள் தங்களது ஆட்டத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்! இஸ்மாயில் சப்ரி அர்சாங்கத்திலும் அவர்களது ஆட்டம் தொடரும் என்று நம்பலாம்.
அதற்கான நெருக்குதலை இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது தெரிகிறது. அம்னோ கட்சியினருக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும். ஆளும் அரசாங்கம் தங்களுடையதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தங்களது தயவால் நடைபெறும் அரசாங்கம் தாங்கள் சொல்லுகின்றபடி கேட்க வேண்டும்! தாங்கள் சொல்லுகின்றபடி கேட்கவில்லை என்றால் அவர்களை எந்நேரத்திலும் 'கவிழ்ப்போம்! கவிழ்ப்போம்!" என்கிற பயமுறுத்தல் தொடர்ந்தே கொண்டே இருக்கும்!
அம்னோ கட்சியினருக்கு நிலையான அரசாங்கம் வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவர்களுக்கில்லை. "இருந்தால் எங்களது ஆட்சி மட்டுமே! மாற்றுக் கட்சியினரின் ஆட்சி எங்களுக்குத் தேவை இல்லை!"
ஏன் இந்த அளவுக்கு அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்? ஒரே காரணம் தான். அம்னோவில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்கள் அதிலிருந்து தப்பிக்க பலவேறு வழிகளைப் பயன்படுத்தி தங்களை நிரபராதிகள் என்று காட்ட முற்படுகின்றனர். அதற்காக முகைதீன் அரசாங்கத்தைக் கவிழ்த்தார்கள்! இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்திற்கும் எதுவும் நேரலாம்! அவர்களுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எதனையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்!
அதனால் தான் பேராசிரியர் ராமசாமி அம்னோவைப் பற்றி குறிப்பிடும் போது அமைச்சரவையில் அவர்களுக்குக் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் அவர்கள் நிச்சயம் திருப்தியடைய மாட்டார்கள் என்கிறார்!
அம்னோ சொல்லுகின்ற படியெல்லாம் ஆளும் அரசாங்கம் ஆடினால் அரசாங்கம் மக்களின் கோபத்திற்கு ஆளாகும்! முகைதீன் அரசாங்கத்திற்கு அது தான் நடந்தது. இன்றைய நிலையில் கூட மக்கள் அப்படி ஒன்றும் இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தின் மீது எந்த ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. மக்களுக்கு எந்த கெடுதலும் நடக்காதவரை நல்ல அரசாங்கம் தான்! என்ன செய்வது? இது தான் நாட்டின் தலைவிதி என்று ஏற்றுக்கொள்ல வேண்டியது தான்!
இஸ்மாயில் சப்ரி எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
புதிதாக ஒன்றுமில்லை!
புதிய அமைச்சரவையைப் பிரதமர் அறிவித்துவிட்டார்.
அவர் என்ன தான் செய்வார்? பல கட்சிகளின் கூட்டணி. அனைவருக்கும் பதவிகள் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம். இல்லாவிட்டால் கவிழ்த்து விடுவார்கள் என்கிற பயமும் உண்டு!
இந்த சூழலில் அவரால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. மேலும் அவர் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு பிரதமர் பதவிக்கு வரவில்லை! ஏதோ இடைக்காலத்தில் இருக்கிற உடைசலை எதையாவது போட்டு அடைக்க வந்தவர்! பெரியதாக எதையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!
இந்த நேரத்தில் சுகாதார அமைச்சராக கைரி ஜமாலுடினின் நியமனம் வரவேற்புக்குரியது. எங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதில் எங்களுக்குப் பெருமை தான். அதே சமயத்தில் மற்றவர்களை விட அவர் தனித்து நிற்கிறார். திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர் அல்ல! அவர் தலைமையில் சுகாதார அமைச்சு சிறப்பாக இயங்கும் என நம்பலாம்!
அடுத்து மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தொடர்ந்து இந்த அமைச்சரைவையிலும் அதே பதவியில் நீடிக்கிறார். குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர் சிறப்பாகவே இயங்குபவர். உணவகத்துறை சார்ந்தவர்களுக்கு அவர் பக்கபலமாக இருப்பவர். உணவகத்துறைச் சார்ந்தவர்கள் நிம்மதியோடு இருக்கலாம். மாற்றம் ஏற்பட்டிருந்தால் ஐயகோ! மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்! தப்பித்தார்கள்!
மற்றபடி போற்றும்படியாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. மீண்டும் அதே தோல்வியாளர்கள். தோல்வியாளர்கள் மூஞ்சியில் தான் நாம் தினசரி விழிக்க வேண்டும்! எல்லாம் அரைகுறைகள்!
இந்த மூஞ்சி முகரைகளுக்குப் பதவி கொடுக்காவிட்டால் அடுத்த நிமிடமே இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம் கவிழ்ப்பு நாடகத்தை எதிர்நோக்க வேண்டி வரும்! எல்லாமே, எல்லாரையுமே சரிசெய்து கொண்டு போக வேண்டிய நிலை!
பொதுவாக எடுத்துக் கொண்டால் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. அப்படி எதையும் பிரமாதமாக செய்துவிட முடியாது என்பது நமக்கும் தெரியும்.
அடுத்த பொதுத் தேர்தல் வரை ஓரு இடைக்கால அரசாங்கம் தேவை. அந்த அரசாங்கத்தை நடத்தியதன் மூலம் முகைதீன் யாசின் பிரதமராக வந்தார். இப்போது இஸ்மாயில் சப்ரி பிரதமராக வந்திருக்கிறார். மற்றபடி இவர்கள் எந்தக் காலத்திலும் பிரதமராக வருவோம் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்! அவர்களுடைய பிரதமர் வாய்ப்பு இத்தோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
பிறகு இவர்கள் பிரதமர் ஆகவே முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை!
பதவிக்குப் பிரதமர் புதியவர். மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை!
Friday, 27 August 2021
ஏன் இந்த ஐயம்?
ஜொகூர் மாநிலத்தில் சுமார் 779 ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி தான்.
இதில் ஒரு சாராரை மன்னிக்கலாம். அவர்களில் சுமார் 383 ஆசிரியர்கள் கர்ப்பம் தரித்தவர்கள். அவர்களை நாம் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களைப் பற்றி வருகின்ற செய்திகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. உலக அளவில் வருகின்ற செய்திகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றன.
அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று யாராலும் உறுதியளிக்க இயலவில்லை. ஒரு சிலருக்கு நல்ல நேரம். அவ்வளவு தான் சொல்ல முடியும். அதனால் அவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம். அது சரியானதே!
அதே சமயத்தில் ஆண் ஆசிரியர்கள் சுமார் 396 பேர் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். உண்மையில் அது நம்மை பயப்பட வைக்கிறது. அவர்களுக்குத் தடுப்பூசி மேல் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். அதாவது அதன் மூலம் எதுவும் நல்லது நடக்கப் போவதில்லை என நம்புகிறார்கள்.
உலகமே தடுப்பூசியைத்தான் நம்புகிறது. வேறு வழி தெரியவில்லை. டாக்டர்களும் தடுப்பூசியைத்தான் சிபாரிசு செய்கிறார்கள். புதிதாக ஏதேனும் மாற்று வரும்வரை தடுப்பூசி ஒன்றே வழி. புதிதாக எதுவும் வரலாம். வரும்வரை இப்போதைய முறையே சிறந்தது. மாற்றுக் கருத்து இல்லை.
பெண் ஆசிரியர்களுக்கு ஒரு வேளை அவர்கள் பிரசவ விடுமுறை எடுக்க முடியும். அதற்கு வழி இருக்கிறது. தடுப்பூசி போட மறுக்கும் ஆண் ஆசிரியர்கள் நிலை என்ன? வீட்டிலேயே தங்கி இருக்கப் போகிறார்களா! அதாவது கொவிட்-19 ஒழிக்கப்படும் வரை இவர்கள் ஒளிந்திருக்கப் போகிறார்களா!
ஒன்றும் புரியவில்லை! தனிப்பட்ட முறையில் அவர்கள் இருந்து, வேலை இல்லாமல் வீட்டில் இருந்தால், அவர்கள் மீது நமக்கு அக்கறை இல்லை. ஆனால் அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இவர்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் மாணவர்களை எப்படிப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியும் என்கிற கேள்வி எழுகிறது. பெற்றோர்களின் நிலை என்ன?
பிரச்சனை எல்லாம் மாணவர்களை எப்படி பள்ளிக்கு அனுப்பவது மட்டும் தான். அது தான் சிக்கல். ஆசிரியர்கள் மக்கள் மனதில் உயர்ந்து நிற்பவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள் என்கிற பெயரும் உண்டு. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால் யார் என்ன செய்ய முடியும்?
மற்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் எழவில்லை. செய்திகள் எதுவும் வரவில்லை. அப்படியென்றால் மற்ற மாநிலங்களில் இல்லாத பிரச்சனை ஏன் ஜொகூர் மாநிலத்தில் மட்டும் வருகிறது என்றும் நினைக்க வேண்டியுள்ளது. பக்கத்து நாடான சிங்கப்பூர் அருகிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் இப்படி ஒரு பிரச்சனை எழவில்லையே! ஏன் இவர்களுக்கு மட்டும்!
நம்மைக் கேட்டால் ஆசிரியர்களுக்கு இது போன்ற ஐயங்கள் வரவே கூடாது. தடுப்பூசி ஒன்றே வழி என்பதாக உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. உலகமே ஏற்றுக் கொண்ட ஒன்றை - அதன் மேல் ஐயம் ஏற்படுகிறது ஏன்றால் - வேறு என்ன வழி! மாணவர்களின் நிலை என்ன?
ஆசிரியர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் தான் நாம் சொல்ல முடியும்.
ஐயம் தவிர்! ஒதுவது ஒழியேல்!
Thursday, 26 August 2021
இந்த ஆதரவு தேவையா?
பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங், ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அரசாங்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்!
இதற்கு முன்னதாக அவரது மகன் முகமது காலில் அப்துல் ஹாடியும் புதிய அரசாங்கம் அமைந்ததும் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார்!
இவர்களது இருவரின் ஆதரவு என்பது பாஸ் கட்சியின் ஆதரவு என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இதனை ஏன் நாம் பயங்கரவாத அரசாங்கம் என்கிறோம்? ஏன் ஆப்கானிஸ்தானிய மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனத் துடியாய் துடிக்கிறார்கள்?அவதிப்படும் அந்த மக்களைப் பார்த்தும் பாஸ் தலைவருக்குக் கொஞ்ச கூட இரக்கம் வரவில்லையே!
நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் அப்பனும் மகனும், பயங்கரவாதத்தைப் பார்த்துக் கதறி அழும் அந்த மக்களைப் பார்த்தும் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் பேசுகிறார்கள்!
அந்த மக்களின் அழுகுரல் இவர்களுக்கு என்ன அமுதகானமாக ஒலிக்கிறதா! அந்த மக்கள் வெளிநாடுகளுக்கு எப்படியாவது தப்ப வேண்டும் என்கிற அவசரத்தில் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே! அதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா! அவர்கள் ஒன்றும் அமெரிக்கர்கள் அல்லவே! அந்த மண்ணின் மைந்தர்களான ஆப்கானிஸ்தான் மக்கள் அல்லவா!
விமானத்தில் ஏற இடம் இல்லாமல் கூரைப் பகுதியில் ஏறித் தொற்றிக் கொண்டு தங்களது உயிரை இழந்தார்களே! உடம்பெல்லாம் நொறுங்கி அரைத்து வீசப்பட்டார்களே அதெல்லாம் யார் அமெரிக்கர்களா! இல்லை அனைவரும் ஆப்கானிய மக்கள்!
ஏன் அவர்கள் நாட்டை வீட்டு ஓட வேண்டும்? அவர்கள் தலிபான் அரசாங்கத்தில் துன்பத்தை அனுபவித்தவர்கள். அவர்களுக்குத்தான் தெரியும் தலிபான் யார் என்பது. பாஸ் கட்சியினர் அந்த மக்களின் துன்பத்தை அறிந்திருக்கிறார்களா?
ஒன்றும் வேண்டாம். அந்த நாட்டு மக்கள் ஒரு நூறு பேருக்கு உங்களால் அடைக்கலம் கொடுத்து இந்த நாட்டில் வாழ வைக்க முடியுமா?
தாலிபான் அரசாங்கம் என்பது பயங்கரவாத அரசாங்கம் என்று அந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். தப்பிக்க நினைப்பவர்கள் - முடிந்தவர்கள் தப்பிக்கிறார்கள். முடியாதவர்கள் தங்களது நிலையை நினைத்து அழுது புலம்புகிறார்கள்.
பாஸ் கட்சியினருக்கு ஓர் ஆலோசனை. உங்களைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டது! இனி நீங்கள் சென்று அந்த நாட்டுக்கு பல வழிகளில் உதவலாம். அங்கு சென்று தொழில் செய்யலாம். கல்வித்துறையில் அவர்களுக்கு உதவலாம். இன்னும் பல வழிகள் உண்டு.
உங்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும் என்றால் அதனைச் செய்யுங்கள். உங்களின் ஆதரவு அவர்களுக்கு இந்த ஒரு இக்கட்டான நேரத்தில் மிகவும் தேவை.
அந்த நாடு மேம்பாடு அடைய வேண்டும். பயங்கரவாதம் அங்கு வேண்டாம்! உங்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை! இதுவே சரியான தருணம்.
ஆதரவு கரம் நீட்டுவீர்களா?
துணை சபாநாயகர் யார்?
துணை சபாநாயகர் யார் என்கிற கேள்வி இப்போது பிரதமர் முன் வைக்கப்பட்டிருக்கிறது!
பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஒற்றுமை அரசாங்கத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவர் அவர் தான். எதிர்கட்சியினர் தன்னோடு ஒத்துழைக்க வேண்டும் என வெளிப்படையாகவே அவர் பேசினார். ஒற்றுமை வேண்டும், ஒத்துழைப்பு வேண்டும் என்றெல்லாம் பேசியதன் மூலம், தான் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது!
அது நல்லது தான். ஒற்றுமைப்பற்றி பேசுவதும், ஒத்துழைப்புப்பற்றி பேசுவதும் வாயளவில் இருந்தால் மட்டும் போதாது. அதனை வெளிப்படையாகக் காட்டுவதற்கு இதுவே சரியான தருணம்.
அந்த நல்ல தருணம் பிரதமருக்கு இப்போது வாய்த்திருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை.
துணை சபாநாயகர் பதவி ஓர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கொடுக்க வேண்டும் என்கிற பேச்சு இப்போது தான் முன்னெடுக்கப்படுகிறது. இத்துணை நாள் அப்படி ஒரு பேச்சு எழ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்போதைய பாரிசான் அரசாங்கம் தனது முழு பலத்துடன் செயல்பட்டது. அப்போதெல்லாம் இப்படி ஒரு கேள்வி கேட்பதையே தேசத் துரோகம் என்பார்கள்! இன்றைய நிலைமை வேறு. முழு பலம் இல்லாததால் தான் முகைதீன் யாசின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது!
இப்போது இஸ்மாயில் சப்ரிக்கும் அதே நிலை தான். அதனால் தான் ஒற்றுமை அரசாங்கத்தைப் பற்றி இஸ்மாயில் சப்ரி வாய் திறந்தார்! இல்லாவிட்டால் அப்படியெல்லாம் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்காது!
எதிர்கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என விரும்பும் இஸ்மாயில் அந்தக் கட்சிகளுக்கும் ஏதேனும் பொறுப்புகள் கொடுப்பது தான் சிறப்பான வழியாக இருக்கும்.
எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும், ஒற்றுமையாக அரசாங்கத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரே அர்த்தம் தான்: "என்னைக் கவிழ்த்து விடாதீர்கள்!"
அதனால் நாம் கூற விரும்புவது, துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியினருக்குக் கொடுங்கள் என்பது தான். கொடுத்துத்தான் பாருங்களேன், என்ன கெட்டுப் போய்விட்டது? இருப்பதோ இன்னுமொரு 21 மாதங்கள். பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அப்போதைய நிலவரத்தின்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்!
துணை சபாநாயகர் யார் என்பதை நானும் எதிர்பார்க்கிறேன்!
Wednesday, 25 August 2021
நாய்களும் உயிர்கள் தானே!
நாய்கள் மேல் பிரியமுள்ளவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்!
நாய்கள் மேல் பிரியப்படுவதற்கு அந்த நாய்கள் உயர்ரக நாய்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவை தெரு நாய்களாகக் கூட இருக்கலாம். சாதாரண வீட்டு நாய்களாகவும் இருக்கலாம். இங்கு ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை. அன்பு காட்டுவதில் நாய்களுக்கு நிகராக எதுவுமில்லை.
ஆனால் ஒரு சிலர் இந்த நாய்கள் மீது காட்டும் ஆர்வம் நம்மை வியக்க வைக்கிறது.அதே சமயத்தில் இந்த நாய்கள் இந்த மனிதர்கள் மீது காட்டும் அன்பும் நம்மை அதிசயப்பட வைக்கிறது!
தமிழ் நாட்டில் ஒரு பெண்மணி ஒரு நாளைக்கு சுமார் 90 நாய்களுக்குச் சோறு போடுகிறார் என்றால் என்னவென்று சொல்லுவது! சொல்ல வார்த்தைகள் இல்லை!
அவர் வீட்டில் உள்ள நாய்கள், அவர் தெருவில் உள்ள நாய்கள், அடுத்த அடுத்த தெருவில் உள்ள நாய்கள் - இப்படி சுமார் 90 நாய்களுக்கு அவர் தினம் சோறு போடுகிறார்! அதாவது அவரே சமைத்து அந்த நாய்களுக்குச் சோறு போடுகிறார்!
சமையல் என்றால் சும்மா அலட்சியமாக நாய் சமையல் என்று நினைத்து விடாதீர்கள். ஒரு நாளைக்குப் பத்துக் கோழிகளைச் சமையலுக்குப் பயன் படுத்துகிறார். அதில் பால், தயிறு என்று செர்த்துக் கொள்கிறார். அதன் சுவை நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கவன செலுத்துகிறார். அவர் திருப்தி அடைந்த பின்னர் தான் நாய்களுக்குத் தெரு தெருவாகப் போய் விருந்து பரிமாறுகிறார்!
ஆமாம், ஒரு சிலர் இந்தக் கோவிட்-19 காலக்கட்டத்தில் மனிதனுக்கே சாப்பாடு இல்லை நாய்களுக்கு இப்படியும் சாப்பாடா! என்று அங்கலாய்ப்பது நமது காதுக்கும் எட்டுகிறது! என்ன செய்வது? நாய்களைத்தானே நன்றியுள்ள பிராணி என்கிறோம்! மனிதனுக்கே சாப்பாடு இல்லையென்கிற போது இந்த நன்றியுள்ள பிராணிகளை மறந்துவிட முடியுமா? அவைகளுக்கும் சாப்பாடு போட ஆளில்லையே! போடுகிறவர்கள் போடட்டும்! அவைகள் ஏன் சாக வேண்டும்?
இப்படி தெரு நாய்களுக்குச் சாப்பாடு போடுபவர்கள் அவைகளை நாய்களாக நினைப்பதில்லை. தங்களின் குழைந்தகளாகவே நினைக்கின்றனர். ஏன்? நாய் என்கிற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை! அந்தளவு அந்த நாய்களின் மீது பாசம் வைத்திருக்கின்றனர்!
நாய் மனிதர்களின் தோழன். சமீபத்திய செய்தி ஒன்று. மூன்று இலட்சம் ரூபாய் பணம் சேமிப்பில் வைத்திருக்கும் தாயிடம், அந்தப் பணத்தைத் தனக்குத் தர வேண்டும் என்று மகன் நடுரோட்டில் வைத்து தாயை அடிக்கிறான். அந்த நேரத்தில் அவர்களின் வீட்டு நாய் அந்த மகனைக் கடிக்கப் பாய்கிறது! மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர்! நாய் எதிர்க்கிறது! அதுக்கும் தாய்ப்பாசம் உண்டு!
நாய்களும் உயிர் வாழட்டும்! விருப்பமுள்ளவர்கள் அவைகளுக்குச் சாப்பாடு போட்டு மகிழட்டும்! வாயில்லா ஜீவன்! வாயுள்ள ஜீவன்! இருவருக்கும் உள்ள உறவு அன்பு தான்!
வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா!
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதா?
புதிய பிரதமர், இஸ்மாயில் சப்ரியின் நடவடிக்கைகளைப் பார்க்கிற போது அவர் அம்னோ கட்சியின் ஆலோசனையின் பேரில் தான் இயங்குவார் என்றே தோன்றுகிறது!
அவரது ஆரம்பமே அம்னோ தரப்பிடன் கூடிக் குலாவுவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முந்தைய அரசாஙத்தைக் கவிழ்த்தவர்கள் அம்னோ கட்சியினர் தாம்.
ஆனால் அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டி உள்ளது. கொள்ளை அடித்தவர்களை வெள்ளை அடித்தவர்களாக மாற்ற வேண்டிய நிலையில் அம்னோ உள்ளது! அதற்காக அவர்கள் அல்லும் பகலும் வேலை செய்து வருகின்றனர். முந்தைய அரசாங்கத்தில் அது நடப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனைச் சாக்காக வைத்தே அவர்களைக் கவிழ்த்தனர்.
இப்போது இஸ்மாயில் சப்ரி காலத்தில், காலம் கனிந்திருக்கிறது. அதனை நீண்ட காலத்திற்கு இழுத்துக் கொண்டு போக முடியாது. இழுத்துக் கொண்டு போனால் மீண்டும் வழுக்கிக் கொண்டு போய்விடும்! அதனால் உடனடியாகக் களத்தில் இறங்கிவிட்டனர்.
ஆனால் அம்னோ தரப்பு ஒன்றை மறந்துவிட்டது. நீங்கள் எதனை வேண்டுமானாலும் தவறான வழியில் சாதிக்க நினைக்கலாம். ஆனால் மறந்து விடாதீர்கள். நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதை கவனிக்க மறந்து விடாதீர்கள்.
உங்களுடைய ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படுகின்றது. மக்களால் கவனிக்கப்படுகின்றது. எதிர்கட்சியினரால் கவனிக்கப்படுகின்றது. அவ்வளது எளிதாய் நீங்கள் யாரையும் ஏமாற்றிவிட முடியாது! ஏன் மாமன்னரால் கூட உங்களைக் கண்காணிக்க முடியும்! சென்றமுறை போல கவிழ்த்து விடுவோம் என்கிற பயமுறுத்தலை இந்த முறை செய்ய முடியாது!
மக்கள் உஷாராக இருக்கிறார்கள். போனமுறை உங்கள் காரியம் நிறைவேறவில்லை. இந்த முறையும் அதே தான் நடக்கும்! அந்த கவிழ்க்கின்ற வேலை இனி நடக்காது. அப்படியே நடந்தால் நீங்கள் மக்கள் மனதிலிருந்து முற்றிலுமாக நீக்கப் பெறுவீர்கள்! அதனை மறக்க வேண்டாம்!
மக்களை ஏமாளிகளாகவே எடை போடாதீர்கள். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. முந்தைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால் மக்கள் தான் பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இப்போது மீண்டும் அதே கதை, அதே வேதாளம் முருங்கை மரம் ஏறினால் என்ன ஆகும்?
அரசியல்வாதிகள் தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அரசாங்கத்தைச் சோதிக்கவில்லை. மக்களைச் சோதிக்கிறீர்கள்! அதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இனி மேலும் மக்களைப் பொறுமை இழக்க வைக்காதீர்கள். எங்களுக்கு நல்லதொரு அரசாங்க வேண்டும். அதுவும் அடுத்த தேர்தல் வரை மட்டும் தான்! அப்போது, தேர்தல் வரும்போது, உங்களுடைய வீர தீரச் செயலைக் காட்டுங்கள்!
Tuesday, 24 August 2021
உண்மையைச் சொல்ல இத்தனை ஆண்டுகளா?
தமிழ்ப்பட இயக்குனர், செல்வராகவன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தி:
"நான் எடுத்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் 18 கோடியில் எடுக்கப்பட்டது. அதனை ஒரு பிரமாண்டமான படம் என்பதாகக் காட்ட எண்ணி 32 கோடியிலான படம் என அறிவித்தோம்! போட்ட பணம் கிடைத்தது! இரசிகரிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை!"
பிரமாண்டம் என்றால் அது இயக்குனர் ஷங்கர் தான்! அதில் மாற்றுக் கருத்து இல்லை. பொய் சொல்லலாம். ஆனால் அந்த பிரமாண்டத்தை காட்சியில் கொண்டு வர வேண்டுமே!
இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போது சொன்ன பொய்யை, இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரே காரணம் தான். "முரண்பாடுகள் இருந்தாலும் பொய் சொல்லாதே!" என்பதை இப்போது தான் கற்றுக் கொண்டதாக அவர் மனம் திறந்து கூறியிருக்கிறார். இப்படிச் சொல்லுவதற்கே ஒரு பெருந்தன்மை வேண்டும். அது அவரிடம் இருக்கிறது.
இங்கு நம்மிடையே உள்ள சில அரசியல்வாதிகளைப் பார்ப்போம். பொய் சொல்லியே வளர்ந்தவர்கள், சமுதாயத்தை ஏமாற்றியே கோடிகளைச் சேர்த்தவர்கள், தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய நிலங்களைத் தங்களது குடும்பச் சொத்தாக்கியவர்கள் - இவர்கள் உண்மையைச் சொல்லுவார்களா? சொல்லமாட்டார்கள்! இயக்குனர் செல்வராகவனுக்கு அந்தப் பொய்யை மறுத்துப் பேச பத்து ஆண்டுகள் ஆகின. ஆனால் இவர்களுக்கு? ஊகூம்! உண்மை வரவே வராது! அப்படியே உண்மை வரும் என்றாலும் அவர்களுடைய வாரிசுகள் அவர்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவார்கள்
ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் உண்மைக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள்! அவர்கள் தங்களுடைய பொய்களை என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அது அவர்களுடைய பிறப்பிலேயே தவிர்க்கப்பட்டு விட்டது! அதனால் தான் அரசியல்வாதிகள் தொடர்ந்து சாகும் வரையில் அயோக்கியர்களாகவே இருக்கிறார்கள்! தங்களை மாற்றிக் கொள்வதே இல்லை!
இந்திய நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்தி அவர்கள் உண்மையைத் தான் பேசினார். தனது தவறுகளை அவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். அவரை உலகமே போற்றுகிறது.
கவிஞர் கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம். அவர் பொய் சொன்னார் என்பதாகச் சரித்திரம் இல்லை. தனது மனதில் பட்டதைப் பேசினார். எழுதினார். அவருக்குச் சாவு என்பதில்லை. அவரது எழுத்துகள் என்றென்றும் போற்றப்படும்.
உண்மையை எப்போது வேண்டுமானாலும் ஒப்புக்கொள்ளலாம். உண்மையே நிரந்தரம்!
கோயில்கள் தாக்குதலா?
பொதுவாக கோயில்கள் மீதான தாக்குதல் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவதெல்லாம் மூன்று நாடுகள் தான்: பாக்கிஸ்தான், வங்காளதேசம், மலேசியா.
மற்ற நாடுகளில் இது போன்ற உடைப்பு சம்பவங்கள் அல்லது எரிப்பு சம்பவங்கள் அல்லது தாக்குதல் சம்பவங்கள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.
மத வழிபாட்டுத் தலங்கள் உடைபடுவதை நான் விரும்பாதவன். உடைப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதனைச் செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் இருக்கும் இடத்தில் ஒரு கோயிலை உடைக்க வேண்டும் என்றார்கள். காரணம் அது புதிய பாதை போடுவதற்கு இடையுறாக இருக்கிறது என்றார்கள். பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அந்தக் கோயிலை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. பாதையை மாற்றிக் கொண்டார்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழி உண்டு. ஆனால் ஒரு சிலர் உடைத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கோயிலை உடைத்து விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் நமது நாட்டில் அதிகம். "முதலில் உடைப்போம் அப்புறம் பேசுவோம்" இது தான் நமது நாட்டில் உள்ள நடைமுறை! சிறுபான்மையினருக்கு இது ஒரு பின்னடைவு தான். எந்த ஒரு ஜனநாயக வழிகளும் ஏற்கப்படுவதில்லை!
பெரும்பாலான கோயில் உடைப்பு சம்பவங்களில் ஜனநாயக ரீதியில் உட்கார்ந்து பேச யாரும் தயாராக இல்லை. "நான் வச்சதுதான் சட்டம்!" என்கிற நோக்கத்தோடு வருபவர்களை நம்மால் சபிக்கத்தான் முடியும்.
ஆனால் பாக்கிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் உள்ள நிலைமை வேறு. அங்கு அரசாங்கம் எதனையும் கையிலெடுப்பதில்லை. அந்த வேலையை மக்களே பார்த்துக் கொள்கிறார்கள்! மக்கள் என்பதைவிட ஒரு சிறு குண்டர் கும்பல்கள் செய்கிற விஷமத்தனங்கள் தான் அவை. ஏதோ ஒரு காரணம் அவர்களுக்குத் தேவை. ஏதோ பிடிக்காத ஒன்றுக்காக சும்மா கோயில்களை எரிப்பது, தாக்குவது - இவைகள் அவர்களின் பொழுது போக்கு!
ஆனால் அரசாங்கத்தால் அவர்களை எதுவும் செய்ய முடிவதில்லை. தவறு செய்பவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன! இந்த நிலையிலும் கூட பாதிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் அந்த இடத்திலேயே அரசாங்கம் கட்டிக் கொடுக்கின்றது.
பெரும்பாலான அரசாங்கங்கள் எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றன. ஒற்றுமை தேவையில்லை என்று சொல்லுபவர்கள் பயங்கரவாதிகள்!
கோயில்கள் தாக்குவது, எரிப்பது விரும்பத்தகாதவை. கோயில்கள் மட்டும் அல்ல எந்த வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் வன்முறையை ஏவுவது பயங்கரவாதம் தான்.
ஒருவரது மத நம்பிக்கையை அவர்களிடமே விட்டுவிடுங்கள். அவர்களின் நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை.
ஏல்லா மத நம்பிக்கைகளும் உயர்ந்தவைகள் தான்!
Monday, 23 August 2021
பொய் சொல்லாதே!
Sunday, 22 August 2021
இது எதனால்?
ஒரு செய்தி நம்மை வியக்க வைக்கிறது.
ஜொகூர் மாநிலத்தில் சுமார் 800 ஆசிரியர்கள் இன்னும் கோவிட்-19 தடுப்பூசியைப் போடவில்லை என்கிற செய்தி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
பள்ளிக்கூடங்கள் வெகு விரைவில் திறக்கப்படும் என்கிற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஏன் ஆசிரியர்கள் இப்படி தடுப்பூசியைப் புறக்கணிக்கின்றார்கள் என்று நமக்குப் புரியவில்லை. இதனைப் புறக்கணிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு சில விடயங்களில் நாம் ஊரோடு ஒத்துப்போக வேண்டும். உலகமே தடுப்பூசியைப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுகாதார அமைச்சும் வலியுறுத்தும் இந்த நேரத்தில், இப்படி ஒரு புறக்கணிப்பா என்று நாம் வியந்து போகிறோம்.
என்ன தான் சொன்னாலும் இதனை - இந்தப் புறக்கணிப்பை - நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் பிள்ளைகளை எப்படி பள்ளிகளுக்கு அனுப்ப முடியும்?
நமக்குத் தெரிந்தவரை ஆசிரியர்கள் தான் பிள்ளைகளுக்கு அல்லது பொது மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர்கள். தடுப்பூசி விவகாரத்தில் அவர்களே மாணவர்களுக்கு முன்னுதாரணம்.
இந்த நேரத்தில், இவர்கள் இப்படிச் செய்வதால், பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குவார்கள். அது இயற்கையே.
இவர்கள் புறக்கணிப்பிற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். தடுப்பூசி போட்டாலும் போடாவிட்டாலும் இவர்களுக்குப் பசி, பட்டினி என்றும் இருக்கப் போவதில்லை. அதுவும் ஒரு காரணம் தான். தனியார் துறைகளில் உள்ளவர்களுக்குத் தான் பசி, பட்டினி என்றால் என்னவென்று தெரியும்.
நமக்குத் தெரிந்ததெல்லாம், பலரைப் போலவே, இலவச ஆலோசனைகள் அரசாங்கத்திற்குக் கொடுக்கலாம். தடுப்பூசி போடாதவர்களுக்குச் சம்பளம் இல்லையென்று ஒரு வார்த்தைச் சொன்னால் போதும். அதன் பின்னர் இவர்களின் எதிரொலி எப்படி இருக்கும் என்பது தெரியும்! இப்போதைக்கு அவர்களும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் வயிறாரச் சாப்பிடுகின்றனர். அதனால் அவர்கள் எதையும் பேசுவார்கள்.
அரசாங்கம் என்ன தான் செய்யும்? பார்க்கலாம்!
தாக்குப் பிடிப்பாரா?
புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வேலை இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல் தோன்றுகிறது. வாழ்த்துகள்!
இனி இவர் எப்படி செயல்படுவார் என்பதைத் பொறுத்துத் தான் இவருடைய ஆட்சியைக் கணிக்க முடியும்.
புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அம்னோ கட்சியைச் சேர்ந்தவர். ஆக, மீண்டும் அம்னோ, தான் ஒரு அசைக்க முடியாத கட்சி என்பதை நிருபித்துவிட்டது!
ஆனால் பெரிகாத்தான் நேஷனல் நடப்பது எங்களது ஆட்சி என்கின்றனர். அதுவும் சரியே. புதிய பிரதமரை ஆதரிப்பவர்களில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் நேஷனலைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாரிசான் நேஷனல் (அம்னோ) கட்சியைச் சேர்ந்தவர்கள் 41 பேர் மட்டுமே.
அதனால் ஆட்சி இப்போது பெரிகாத்தான் நேஷனல் கையில். பாரிசான் நேஷனல் கையில் அல்ல!
எல்லாம் சரிதான். இவர்கள் நல்லதைச் செய்தால் யார் வேண்டாம் என்பார்கள்? இப்போதே புதிய பிரதமருக்கு ஒரு சில சவால்கள் வந்துவிட்டன. நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பெரிய அடியாகப் பார்க்கலாம்!
அம்னோ மீண்டும் தனது புத்தியைக் காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே முகைதீனின் அரசாங்கத்தை இவர்களே கவிழ்த்தவர்கள்!
ஆனாலும் இந்த முறை மாமன்னரின் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகம் நமக்கு உண்டு. காரணம் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பை மாமன்னர் விரும்பமட்டார். முடிந்தவரை நல்லதொரு ஆட்சி தொடர வேண்டும் என்பதையே மாமன்னர் விரும்புவார். ஆட்சி கவிழ்ப்பு என்பதை நாம் கூட விரும்பவில்லை.
ஆனால் பிரதமர் ஊழல் பேர்வவழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதன் பலனை அவர் அனுபவிக்கத்தான் வேண்டும். எதிர்கட்சியினர் சும்மா இருக்கப் போவதில்லை! அவர்கள் கைவரிசையை அவர்கள் காட்டத்தான் செய்வார்கள்!
ஆக, பந்து பிரதமர் கையில்! அவர் நாட்டை எப்படி வழிநடுத்துவார் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
துணைப்பிரதமராக யாரை அவர் நியமிக்கப் போகிறார் என்பதெல்லாம் மிக அணுக்கமாக எதிர்கட்சியினரால் கவனிக்கப்படும்.
ஒன்று இப்போது இருக்கும் அமைச்சரவையை அவர் தொடர்வார் என்றே பார்க்கப்படுகிறது. ஒரு சில மாற்றங்கள் வரலாம். ஆனால் ஊழல்வாதிகளை அவர் எங்கே வைக்கப் போகிறார் என்பது மிக மிக முக்கியம்.
அடுத்த 21 மாதங்களுக்குப் பிரதமர் தாக்குப் பிடிப்பாரா அல்லது இன்னொரு கவிழ்ப்பு ஏற்படுமா என்பதை பிரதமர் முடிவு செய்ய வேண்டும்.
நாட்டுக்கு நல்லது செய்தால் நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை!
Friday, 20 August 2021
அடுத்த பிரதமர் யார்?
Thursday, 19 August 2021
இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது!
இப்போது நாட்டில் பல தளர்வுகளைப் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
அது நமக்கு மகிழ்ச்சி அளித்தாலும் ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். கோவிட்-19 நாட்டில் இன்னும் வலுவாகவே இருக்கிறது! குறைந்தபாடில்லை.
இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் தளர்வுகள் பொருளாதாரக் காரணங்களுக்காகத் தான் என்பதை மனதிலே நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும்; விறபனை மையங்கள் திறக்கப்பட வேண்டும்; சிறுசிறு தொழில்கள் திறக்கப்பட வேண்டும். எல்லாமே திறக்கப்பட வேண்டும்.
நாமும் வேலைக்குப் போக வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். பிள்ளைகள் பள்ளி போக வேண்டும். வெளியே உணவகங்களுக்குப் போக வேண்டும். வகைவகையாக சாப்பிட வேண்டும். நாலு இடங்களைச் சுற்றி பார்க்க வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் பிள்ளைகள் வீட்டில் அடைந்து கிடப்பார்கள்? அவர்களை விடுங்கள். பெரியவர்கள் மட்டும் எத்தனை நாளுக்கு இப்படி அடைந்து கிடப்பார்கள்? வேலைக்குப் போனால் தான் பெரியவர்களுக்கு நிம்மதி! அதுவரையில் அவர்களுக்கு அவதி!
நமக்கு நிறைய ஆசைகள் உண்டு. தவறு என்று யாரும் சொல்லப் போவதில்லை. நாம் எப்போதும் செய்தது தான். இப்போதும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆனாலும் நமது ஆசைகளைக் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள். நாடு இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. கோவிட்-19 குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர கொஞ்சமாவது குறையும் என்பதற்கான அறிகுறி இல்லை.
அப்படியென்றால் ஏன் இந்த தளர்வு என்று கேட்கலாம். இதற்கு மேல் மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது ஒரு பக்கம். அவர்கள் கொதித்து எழலாம்!
ஆனால் அதைவிட குறைந்தபட்சம் ஐம்பது விழுக்காடு மலேசியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்பதும் இன்னொரு காரணம். அத்தோடு திறக்கப்படுகின்ற தொழிற்சாலைகளோ அல்லது எதுவாக இருந்தாளும் சரி அங்குப் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் ஆணை.
திறக்கப்படும் அனைத்துப் பணிமனைகளும் வழக்கம் போல நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனோ தானோ என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. காரணம் நாம் இன்னும் கோவிட்-19-ன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறோம்!
கட்டுப்பாடுகளைப் புறக்கணித்தால் சேதாரம் நமக்குத் தான்! காரணம் கோவிட்-19 தராதரம் பார்ப்பதில்லை!
Wednesday, 18 August 2021
வீடு வாங்கலையோ, வீடு!
நிலைமை அந்த அளவுக்கு மோசாமாகிவிட்டது!
தரமில்லாத வீடுகளைக் கட்டி, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலைகளை ஏற்றி, பொது மக்களை ஏமாற்றி வந்த வீட்டு விற்பனை நிறுவனங்கள் இப்போது செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றன!
நாட்டில எல்லா ஏமாற்று வேலைகளை விட இவர்களின் ஏமாற்று வேலைகள் தான் அதிகம். சுமார் ஆறு இலட்சம் வெள்ளி போட்டு வீடு வாங்கினால், தரமற்ற அந்த வீட்டுக்கு, மேலும் ஒரு இலட்சம் போட்டு நாம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது!
இது தான் இவர்கள் வீடு கட்டும் இலட்சணம். பணம் போட்டு வாங்கியவர்களின் வயிற்றெரிச்சலும் சாபமும் இந்தத் துறையினருக்கு மற்ற துறையினரை விட அதிகம்!
என்ன ஆயிற்று? ஆமாம், இப்போது வீடுகள் வாங்க ஆளில்லாத நிலைமை. கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. மக்கள் வேலை இல்லாத நிலையில் வயிற்றைப்பாட்டைப் பார்ப்பார்களா அல்லது வீடு வாங்கப் பார்ப்பார்களா? அப்படியே நினைத்தாலும் வங்கிகள் கடன் கொடுத்து விடுமா?
இந்த நிலையில் வீடு வாங்க ஆளில்லை! கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இல்லை. பெரும்பாலான மலேசியர்கள் வங்கிகள் கொடுக்கும் கடனில் தான் வீடுகளை வாங்குகின்றனர். யாரும் ரோக்கப் பணம் கையில் வைத்துக் கொண்டு வீடுகள் வாங்குவதில்லை.
அதனால்? வீடமைப்பு நிறுவனங்கள் மிகவும் தாழ்நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன! அவர்களும் வங்கிக்கடனில் தான் தங்களது தொழிலை செய்கின்றனர். எல்லா வகையிலும் பாதிப்பு.
இப்போதைய நிலையில் அவர்கள் ஐம்பது விழுக்காடு வீட்டு விலைகளைக் குறைத்திருக்கின்றனர். வாங்க! வாங்க! என்று கூவிக் கூவி வீடுகளைக் விற்கின்றனர்! ஆனாலும் வாங்க ஆளில்லை. ஏன்? வேலை இல்லை. சம்பாத்தியம் இல்லை. யார் வாங்குவார்?
இந்த நிலையில் தான் வீடமைப்புத் துறையினர் இப்போது குறைந்த விலையில் வீடுகள் விற்க தயாராகி வருகின்றனர்! ஆனாலும், குறைத்தாலும், எல்லாரும் கப்சிப் என்று இருக்கின்றனர். யார் என்ன செய்ய முடியும்.
நாடே வீழ்ந்து கிடக்கிறது! தூக்கிவிட ஆளில்லை! மக்களோ இருக்கிற வீட்டை விற்கிற நிலைமை. வாங்க ஆளில்லை!
எப்போது நல்ல செய்தி வருமோ, பார்க்கலாம்!
Tuesday, 17 August 2021
நல்ல காலம் வரப்போகுது!
நல்ல காலம் வரப்போகுது என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன!
ஒரு சில செய்திகளை வைத்தே நாம் இதனைக் கணக்கிடலாம். இந்த முறை அரசாங்கம் பேரரசரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாய்ப்பிருக்கிறது. கட்டுப்பாட்டில் என்பதைவிட ஆலோசனையில் நடக்கும் அரசாங்கமாக இருக்கும்.
சட்டப்படி பேரரசர் நாட்டு நடப்பில் தலையிட முடியாது என்று சொன்னாலும் ஆலோசனை சொல்லலாம் அல்லவா? கடந்த முகைதீன் யாசின் ஆட்சியில், ஆட்சி பீடத்தில் இருந்த அனைவருமே, தலைகால் புரியாமல் ஆடியது மறந்துவிடவா முடியும். கடிவாளம் இல்லாத குதிரையை அடக்க முடியவில்லையே!
மீண்டும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதில் பேரரசருக்கும் அக்கறை இருக்கத்தானே செய்யும். ஜொகூர் சுல்தானுக்கு ஜொகூர் மாநிலத்தின் மீது அக்கறை இருப்பது போல பேரரசருக்கு இந்த நாட்டின் மீது அக்கறை இல்லாமலா போகும்?
சட்டம் என்னவோ சொல்லட்டும். ஆனால் நாட்டு மக்களுக்கு பேரரசரின் மீது மரியாதையும் மதிப்பும் இருப்பது போல நமது நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த மதிப்போ மரியாதையோ இல்லாமலா போகும். பின்னால் முனகலாம் முன்னால் முடியாது அல்லவா? அரசரை அவமதித்தால் நாளை எந்த அரசியல்வாதியையும் மக்கள் மதிக்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்!
எனவே பேரரசருக்கு அவர் நாட்டின் மீது அக்கறை இருப்பதில் ஒன்று வியப்பில்லையே. ஆலோசனைகள் கூறுவதால் என்ன கெட்டுப் போய்விடும். குதிரை தறிகெட்டு ஓடாமல் இருப்பதற்கு கடிவாளம் தேவை தானே. அதனால் ஊழலில் ஊறிப்போன அரசியல்வாதிகளை அவர்கள் விருப்பப்படியெல்லாம் இனி விட்டு விட முடியாது. அதற்குத்தான் பேரரசரின் ஆலோசனைகளும், அரவணைப்பும்!
இனி அடுத்த பொதுத் தேர்தல்வரை ஆளும் அரசியல்வாதிகள் தங்களது விருப்பத்திற்கு இணங்க இயங்க முடியாது என்று நம்பலாம். மக்கள் இப்போதே முகைதீன் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்களால் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் தான் முகைதீன் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது.
மக்கள் நல்லதொரு அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார்கள். கோவிட்-19 ஒழிக்கப்பட வேண்டும். அதோடு மக்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
நல்ல காலம் ஆரம்பம்! வாழ்த்துகள்!
அம்னோவின் "ஒற்றுமை அரசாங்கம்!"
அம்னோ முன்மொழியும் ஒற்றுமை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
இல்லை! ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!
அம்னோ தரப்பிலிருந்து யார் பேசினாலும் ஏதோ உள்குத்து இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது! அவர்களிடம் நேர்மை இல்லை. எதை வைத்து ஒற்றுமை அரசாங்கத்தை அவர்கள் முன்மொழிகிறார்கள்?
கடந்த 17 மாத முகைதீன் யாசினின் அரசாங்கத்திற்கு அதிக நெருக்கடி கொடுத்தவர்கள் அம்னோ கட்சியினர் தான் என்பதை அனைவரும் அறிவர். இத்தனை மாதங்களில் ஏன் இந்த அறிவு முதிர்ச்சி இவர்களுக்கு ஏற்படவில்லை. அப்போதே அவர்கள் ஒற்றுமையாக இருந்து எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் இருந்திருந்தால் முகைதீனின் அரசாங்கம் அடுத்த தேர்தல் வரை நீடித்திருக்குமே! அவர் நாட்டுக்கு ஏற்படுத்திய சேதங்கள் அனைத்தும் யாரால் விளைந்தவை? அம்னோ கொடுத்த நெருக்கடியால் தான் இந்த அளவுக்கு நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது! முகைதீனை அவர்கள் செயல்படவே விடவில்லையே!
இப்போது இவர்கள் முன்மொழியும் ஒற்றுமை அரசாங்கம் ஏற்பட்டால் இவர்களிடம் ஒற்றுமை ஏற்பட்டுவிடுமா?
இவர்கள் ஒற்றுமையாக மற்ற கட்சிகளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றால் ஒரே வழிதான் உண்டு. அம்னோ கட்சியில் உள்ள அத்தனை பேரையும் புனிதர்களாக மாற்றி விடவேண்டும். இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முடிந்தால் நஜிப் மீண்டும் பிரதமராக வரவேண்டும்!
சரி, அவர்கள் சொல்லுகிற ஒற்றுமை அரசாங்கத்திற்கே வருவோம். பிரச்சனையே இல்லை. நீங்கள் எந்த ஒரு பதவிக்கும் போட்டிப் போடாதீர்கள். நீங்கள் அரசாங்கத்தில் ஏற்படுகிற கோளாறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே ஒரு எதிர்க்கட்சி போல செயல்படுங்கள். ஆனால் அரசாங்கத்தை ஆதரியுங்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இது பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். நமக்குத் தேவை எல்லாம் ஒரு நிரந்தரமான அரசாங்கம். அதுவும் அடுத்த பொதுத் தேர்தல் வரை.
ஒன்றை நான் நம்புகிறேன். இந்த முறை பேரரசரின் சரியான வழிகாட்டுதல் இருக்கும் என்பது நிச்சயம். நாட்டை நாறடித்து விட்டார்கள்! பேரரசரும் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கொஞ்சம் அதிகமாகவே புரிந்து கொண்டிருப்பார். கொஞ்சம் கண்டிப்பு, எச்சரிக்கை இவைகள் எல்லாம் பேரரசரிடம் எதிர்பார்க்கிறோம்.
அம்னோவின் ஒற்றுமை அரசாங்கம் வீண் வேலை! அம்னோ தரப்பினர் ஒற்றுமையை விரும்பாதவர்கள்! ஒற்றுமைக்கும் அவர்களுக்கும் வெகு தூரம்!
அவர்களுக்குப் பதவி கொடுக்காதவரை அவர்கள் எதிரிகளாகவே இருப்பார்கள்!
Monday, 16 August 2021
இதுவும் சரிதானோ!
கோவிட்-19 உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. நமது நாட்டையும் அது ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறது! எல்லாமே உண்மை தான்.
இந்தத் துயரமான நேரத்திலும் ஒரு சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டும் மக்களுக்குச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டும் இருக்கத்தான் செய்கின்றன!
கோவிட்-19 தொற்றுக்காக "ஊசி போடுங்க! ஊசி போடுங்க!" என்று உலகம் பூராவும் கத்தோ கத்தென்று கத்திக் கொண்டிருக்கின்றனர் டாக்டர்கள்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா நாட்டின் சுகாதார அமைச்சர், பவித்ரா வன்னியாராட்சி, மாந்திரீக முறையிலான மருத்துவத்தை தான் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்! ICU வில் இருந்த போதும் கூட அவர் மாந்திரீகர் மந்தரித்துக் கொடுத்த தண்ணிரைக் குடித்திருக்கிறார்!
அவர் குடித்தது சரியாக இருக்கலாம். அது அவரது நம்பிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற கோவிட்-19 நோயாளிகளையும் அந்த மாந்திரீக மருத்துவத்தைப் பயன்படுத்த வற்புறுத்தியிருக்கிறார்! அது தான் அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது! எப்படியோ அவரின் பதவி பறிக்கப்பட்டு இப்போது வேறு ஒரு துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்!
நம்மிடையே பல நம்பிக்கைகள் இருக்கும். அது நம்மைப் பொறுத்தது. ஆனால் அந்த நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். அதுவும் சுகாதார அமைச்சர் என்பது மிகவும் பொறுப்பான பதவி. மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதவி. இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் போது இப்படியும் ஒரு சுகாதார அமைச்சரா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.
நமது நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி போடுவதை ஒரு சிலர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு சமயம் ஒரு காரணமாக இருக்கின்றது. அது அவர்களது நம்பிக்கை. ஆனால் மற்றவர்களும் தடுப்பூசி போடக் கூடாது என்று பேச அவர்களுக்கு உரிமையில்லை! அதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம்.
ஆனாலும் மேற் கூறியது போன்று மாந்திரீகத்தை தொற்று நோயின் உள்ளே கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படியே செய்வதானாலும் முதலில் டாக்டர் சொல்லுவதைக் கேளுங்கள். தடுப்பூசியைப் போடுங்கள். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள். அதற்கான பொறுப்பையும் நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்! டாக்டரைக் குறைச் சொல்லாதீர்கள்.
என்னவோ இதுவும் சரிதானோ என்று கேட்கத் தோன்றுகிறது! நமக்குத் தெரியாத இன்னும் வினோதமான பல சம்பவங்கள் உலகெங்கும் நடக்கலாம்!
நம்மைக் கேட்டால் இது சரியில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது!
மாமன்னரின் முடிவுதான் இனி!
கடைசியில், எதிர்பார்த்தபடி மாமன்னர் கையில் தான் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வந்தடைந்திருக்கிறது!
ஏற்கனவே அது நழுவிவிட்ட நிலையில் இந்த முறை ஒரு சரியான தீர்வை நோக்கி நகரும் என நம்பலாம்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை காபந்து அரசாங்கத்தின் பிரதமராக தொடர்ந்து முகைதீன் யாசின் தொடர்வார்.
பொதுவாக அன்வார் இப்ராகிம், பிரதமர் ஆவதற்கான ஆதரவு இருக்கிறது என்றால் அதனை முறியடிக்க பலர் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள்! அவர்களில் டாக்டர் மகாதிரும் ஒருவர்! அதனை அன்வார் எப்படி எதிர்நோக்குவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துவதெற்கென்றே ஒரு சிலரின் பெயரை முன்மொழியலாம். ஆனால் என்ன தான் ஆட்டம் போட்டாலும் மாமன்னர் முன்னிலையில் பேசாமல் கட்டுசெட்டாகவே இருப்பார்கள் என நம்பலாம்.
பிரதமர் ஆவதற்கான தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைக்கத்தான் வேண்டும். மாமன்னரும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவரும் ஒவ்வொருவரையும் அல்லது குழுவாகவோ நேரடியாகவே அவர்களிடம் பேசுவார். சென்றமுறையும் அது தான் நடந்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவார் என நம்பலாம்.
மேலும் இந்த முறை அவரது போக்கு கொஞ்சம் அழுத்தமாகவே இருக்கும். காரணம் ஜொகூர் சுல்தான், சில தினங்களுக்கு முன், தனது சட்டசபைப் பற்றியான பிரச்சனையை எப்படிக் கையில் எடுத்தாரோ அதே போன்ற கடுமையான போக்கை இந்த முறை மாமன்னர் கடைப்பிடிப்பார். நம்பலாம்.
கடந்த ஒன்றரை வருடங்களாக பிரதமர் முகைதீன் யாசின் நாட்டை வழி நடத்தவில்லை. ஏதோ மீன் சந்தையை நடத்துவது போல நடத்தி வந்தார்! நாடு சீரழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். நாடு எந்த ஒரு காலத்திலும் இப்படி ஒரு நிலையைச் சந்தித்ததில்லை.
இந்த முறை மாமன்னர் கடுமையாக நடந்து கொள்ளத்தான் வேண்டும். இனி கட்சித் தாவுதல்,அது இது என்கிற சலசலப்பு வந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்னர் இப்போதே கடுமையான் எச்சரிக்கை விடவேண்டும். இனி அடுத்த தேர்தல் வரை எந்த சலசலப்புமின்றி நாட்டை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இனி தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். அதுவே மாமன்னர் முன் நாம் வைக்கும் வேண்டுகோள்.
இனி மாமன்னரின் முடிவு தான்! நல்லது நடக்கும் என நம்புவோம்!
Sunday, 15 August 2021
அன்வாரே நமது தேர்வு!
நமக்குப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருந்தால் அது அன்வார் இப்ராகிமாகத்தான் இருக்க முடியும்!
பிரச்சனை, அது நம் கையில் இல்லையே! எங்கே போய் முட்டிக் கொள்வது? ஆனால் ஒரு சில விஷயங்கள் மன்னரால் மட்டுமே முடியும். அதையும் சொல்லி வைக்கிறோம்.
அன்வார் தான் வரவேண்டும் என்று சொல்லுவதில் ஒரு நியாயம் உண்டு. சமீப காலங்களாக, முகைதீன் பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், என்ன என்ன நடந்தன என்பது நம் கண்முன்னே நிற்கிறது.
கட்சி மாற, பதவிகள் பேரம் பேச, பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டது! கோடிகள் கை மாறின! முகைதீன் கடைசி நிமிடம் வரை தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்தாலும் தனது கோடிகைகளை அவர் விட்டுக் கொடுக்கவில்லை! ஆனாலும் சில பல கோடிகள் பேரம் பேசப்பட்டாலும் கடைசியில் வாங்க ஆளில்லாத சூழல் ஏற்பட்டுவிட்டதால் தான் முகைதீன் பின் வாங்கினார்! கோடிகள் அவருக்கு உதவவில்லை! அதனால் தான் இந்த கடைசி நேர மாற்றம்! கோடியேறவில்லை!
ஆனாலும், எந்த நிலையிலும், அனவார் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. கோடிகளை உதறித்தள்ளியவர் அவர். பதவிகளைக் கண்டு தடுமாறவில்லை அவர்!
தான் கொண்ட கொள்கை ஒன்று தான். நீதி, நேர்மை - அதைத் தவிர வேறு கொள்கை அவருக்கில்லை. அரசியல்வாதிகளுக்கு அது தீண்ட தகாத வார்த்தைகள் டாக்டர் மகாதிர் உள்பட! அதனாலேயே அவர் ஓரங்கட்டப்பட்டார்! இன்னும் ஒரங்கட்டப்படுகிறார்!
கடைசி நேர மாற்றங்கள் என்ன என்ன நடக்கும் என்று சொல்வதறகில்லை! அது தான் அரசியல். நேற்றைய வில்லன் இன்றைய ஹீரோ ஆகிவிடுவான்! இன்றைய ஹீரோ, நாளைய வில்லானாகி விடுவான்! எதிரி நண்பனாகி விடுவான். நண்பன் எதிரியாகி விடுவான்! அது தான் அரசியல். அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை! ஆமாம், அயோக்கியனுக்கு எது நிரந்தரமாக இருக்க முடியும்?
நாட்டுக்கு நல்லது நடக்க அன்வார் தான் நமது தேர்வு!
என்ன தான் முடிவு?
பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகுவது பற்றி நாளை, திங்கள்கிழமை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது பொதுத் தேர்தலா அல்லது அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு உண்டா அல்லது வேறு யாரும் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவார்களா என்பதில் தெளிவில்லை.
அம்னோ சார்பில் துங்கு ரசாலி ஒரு பக்கம், பி.கே.ஆர். சார்பில் அன்வார் இப்ராகிம் ஒரு பக்கம் வாரிசான் சாரபில் ஷாபி அப்துல்லா ஒரு பக்கம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அம்னோ வேறு யாரையும் கொண்டு வருமா என்பதும் தெரியவில்லை. ஆனால் தற்காலிகமாக அவர்கள் துங்கு ரசாலியை ஆதரிக்கலாம். துங்கு ரசாலியின் நேர்மையை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர் அம்னோவைச் சார்ந்தவர் என்பதால் அம்னோவின் நேர்மையில் அனைவருக்கும் சந்தேகம் உண்டு. ஷாபி அப்துல்லா மேற்கு மலேசியா சேர்ந்தவர் அல்ல என்பது அவரது பலவீனம்!
அடுத்து பொதுத் தேர்தல் என்கிற ஒரே சாத்தியம் தான் உண்டு. அதற்குப் பெரும் தடையாக இருப்பது கோவிட்-19. ஏற்கனவே ஒரு மாநிலத் தேர்தல் மூலம், திட்டமிட்டு நாடெங்கும் பரப்பபட்டு இன்றவரை அந்தத் தொற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம். அதுவும் சாத்தியமில்லை என்கிற நிலைமை தான்!
ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனத்தையும், செய்த துரோகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, குறைந்தபட்சம் இன்னும் ஓர் ஆண்டுக்கு அடுத்த தேர்தல் வரை பல்லைக்கடித்துக் கொண்டு யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்! ஆதரவு கொடுக்க வேண்டும்!
அரசியல்வாதிகளை அப்படி ஒன்று படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான். அவர்கள் என்ன நாட்டு மக்கள் நலனுக்கா போரடப் போகிறார்கள். எல்லாம் சுயநலம் தான்! அரசியல்வாதிகளிடம் பொது நலன் என்பது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை!
டாக்டர் மகாதிரின் பெயர் ஒரு பக்கம் அடிபடும் என்றாலும் அவர் மேல் உள்ள நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்! இன்று இந்த நாடு இந்த அளவுக்குக் கேவலமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவர் தான் காரணம் என்பதை அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் அறிவார்கள்! அவர் மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை! இனி அவரில்லை என்பது தான் உண்மை!
இனி ஒரு சில தினங்களுக்கு இழுபறி இருந்து கொண்டு தான் இருக்கும்! யாருக்கு ஆதரவு என்பது அவ்வளவு சீக்கிரத்தில் முடியக் கூடிய பிரச்சனை அல்ல.
ஆனால் அனைத்தும் மாமன்னரின் கையில் தான் உள்ளது. யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை அவரிடம் தான் உள்ளது.
கடைசியாக, நடப்பது அனைத்தும் நன்மைக்கே!
Saturday, 14 August 2021
பயப்பட வேண்டாம்!
மலேசியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். அனைத்து தடுப்பூசிகளுக்கும் நல்ல எதிர்ப்பு சக்திகள் உள்ளன.
இதனைக் கூறியிருப்பவர் எந்த அரசியல்வாதியும் அல்ல. நமது சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா.
நமது நாட்டில் ஒரே விதமான தடுப்பூசிகள் பயன்படுத்துவதில்லை. ஃபசார், சைனொவேக்ஸ் இப்படி சில வகையான தடுப்பூசிகளை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக தடுப்பூசிகளில் ஃபசார் ஊசியையே மக்கள் விரும்புகின்றனர். காரணம் ஏதோ ஒரு வகையில் அந்த ஊசியையே அதிகம் முன்னிலைப் படுத்துவதால் அதுவே மக்களின் தேர்வாக அமைந்துவிட்டது. ஒரு சிலர் ஃபசர் ஊசியைத் தவிர வேறு ஊசிகள் வேண்டாம் என்று மறுத்துவிட்ட நிகழ்வுகளும் உண்டு.
ஆனால் நமது சுகாதார இயக்குனர் அப்படி ஒரு அச்சம் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். சரவாக் மாநிலத்திலும் லாபுவான் மாநகரிலும் போட்ட தடுப்பூசிகள் மூலம் தொற்றின் பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்கிறார் அவர்.
"மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படுபவர்கள், சுவாசக் கருவிகளின் பயன்பாடும் பெரும் அளவில் குறைந்திருக்கிறது" என்கிறார் டாக்டர் நோர்.
அதனால் மலேசியாவில் பயன்படுத்தும் தடுப்பூசிகள் நல்ல தடுப்பாற்றலைக் கொண்டவை. குறிப்பாக டெல்டா வைரஸ் ஸையும் எதிர்க்கும் ஆற்றலையும் கொண்டவை. அதனால் டெல்டா வைரஸ் பற்றி கவலை வேண்டாம்.
முதலில் தடுப்பூசி போடுவது தான் நமது வேலை. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு தடுப்பூசி போடாமல் இருப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகம். துரோகமா? ஆமாம்! ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போடவில்லையென்றால் உங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து! ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்தாக முடியலாம்.
இதனை நாம் இங்கே வலியுறுத்தக் காரணம் நம் அனைவருக்குமே பொறுப்புணர்ச்சி வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர்.
இன்னும் நாம் நமது நாட்டில் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளி போக முடியவில்லை. குடும்பத் தலைவர்கள் வேலைகளுக்குப் போக முடியவில்லை. அனைவரும் வீடுகளில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றனர்.
வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது. எப்போதும் போல நாம் நமது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல வேண்டும்.
இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும். தடுப்பூசியைப் போடுங்கள். காரணம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
கடைசியாக, தடுப்பூசி போடப் பயப்படாதீர்கள்
வேறு வழியே இல்லையா?
இத்தனை மாதங்களாக ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் "நானே வழி!" என்று இறுமாப்புடன் தனக்கு ஏற்றவாறு நாட்டை மாறியமைத்து, கால்போன போக்கிலே மக்களைக் கால்நடைகளைப் போல, மாக்களைப் போல நாட்டை "வலிநடத்தி!" வந்த பிரதமர் இப்போது தான் சமாதானத்திற்கு வந்திருக்கிறார்!
ஆடிய ஆட்டம் அடங்கிப் போனது! இதற்குள் எத்தனை ஆட்டம்! அடவாடித்தனம்! ஆர்ப்போட்டம்! ஆதரவு கொடுத்தால் உடனே பதவி! உடனே அமைச்சர்! கோவிட்-19 தொற்றை என்னால் அதிகரிக்கவும் முடியும், அபகரிக்கவும் முடியும்!
ஆனால் அனைத்துக்கும் ஒரு காலம் உண்டு! ஓர் எல்லை உண்டு! ஒரு முடிவும் உண்டு! "முதலும் முடிவும் நானே!" அது ஆண்டவன் மட்டும் தான். மனிதனால் முடியாது என்பது இப்போது புரிந்திருக்கும்!
பிரதமர் இப்போது எதிர்க்கட்சிகளை "வாங்க பேசலாம்!" என்று தாம்பாளத்தட்டில் அழைப்பை விடுத்திருக்கிறார்! இப்போது தான் நாட்டின் நிலைத்தன்மை அவருக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கிறது! கொஞ்சம் இனிப்பையெல்லாம் வாரி வழங்கியிருக்கிறார்! "பிரதமர் இனி இரண்டு தவணைகள் மட்டுமே. கட்சித் தாவுதலை தடுக்கும் சட்டம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரிசமமான ஒதுக்கீடு, சலுகைகள், 18 வயது வாக்களர்கள் இயல்பாகவே பதிவது, எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரம்" இப்படி பல இனிப்புக்கள்!
ஆனால் அப்படியெல்லாம் எதிர்க்கட்சிகள் மயங்கிவிடும் என்பதாகத் தெரியவில்லை.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைமை என்ன? இங்கும் சரியான தெளிவில்லை. அம்னோ கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராவதை மற்ற கட்சிகள் ஏற்காது. காரணம் முன்னால் பிரதமர் நஜிப்பை அவர்கள் புனிதராக மாற்றிவிடுவார்கள்! அன்வார் பிரதமராவதை அம்னோ ஏற்காது! அவரால் அவர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் நினைக்கிறார்கள்!
எப்படிப் பார்த்தாலும் இங்கும் சிக்கல் தான்! இது அரசியல்! எதுவும் எந்நேரத்திலும் மாறலாம்! அப்படியே ஒருவர் வந்தாலும் முகைதீனுக்கு உள்ள பிரச்சனையை அவரும் சந்திக்க நேரலாம்!
அடுத்த தேர்தல் வரை பொறுத்திருப்போம்! வேறு வழி தெரியவில்லை!
Friday, 13 August 2021
ஜொகூர் சுல்தானுக்கு நன்றி!
ஜொகூர் சுல்தானுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
ஜொகூர் மாநில பதினான்காம் சட்டசபை தொடக்க விழாவின் போது சுல்தான் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
"நடப்பிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலையில் யாரேனும் ஈடுபட்டால் சட்டசபையைக் கலைத்துவிடத் தயங்கமாட்டேன்!" என்கிற அவரின் எச்சரிக்கை, கவிழ்க்க முயற்சி செய்யும் எவருக்கும் ஒரு அபாய மணி என்பதைப் புரிந்து கொள்வார்கள்!
சுல்தான் சொன்னது சரியா, தவறா என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. நாட்டில் நடக்கும் அநியாயங்களை அவர் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் அல்ல "என்னால் அந்த அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்கிற - அவரது மாநிலத்தின் மீதான அந்த அக்கறை - வரவேற்கத்தக்கது! போற்றத்தக்கது!
இதோ ஒரு கேள்வி. சுல்தான் சட்டசபையைக் கலைப்பேன் என்று சொன்னாரே அவரை எதிர்த்து யாராவது கேள்வி கேட்க முடியுமா? எந்தக் கொம்பனாவது "சட்டம் இப்படிச் சொல்கிறது! சட்டம் அப்படிச் சொல்கிறது!" என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்க முடியுமா? யாருக்காவது அந்தத் தைரியம் உண்டா?
இங்கு நாம் சட்டத்தைப் பற்றி பேசவில்லை. நாம் பேசுவதெல்லாம் நாடு நம் கண்முன்னே சீரழிகிறது. கொள்ளையடிக்கப்படுகிறது. தொற்று நோய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல்வாதிகள் ஜாலியாக நாட்டை வலம் வருகின்றனர். அரசியல் பேசுகின்றனர். அரசியல்வாதிகள் விலை பேசப்படுகின்றனர். பல கோடிகள் கைமாறுகின்றன. ஓர் அற்புதமான வாழ்க்கை.
இங்கே மக்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். கையில் காசு இல்லை. இனி எத்தனை நாளைக்கு இந்த நிலை. எதாவது மாற்றம் வருமா அல்லது வராமலே போகுமா? இது எப்போது மாறும? அல்லது மாறவே மாறாதா?
இப்படி ஒரு சூழலில் நாடு இருந்ததில்லை. இன்றைய நிலை நமக்குப் புதிது. நாம் அனுபவிக்காதது. எந்த ஒரு முடிவும் தெரியாமல் இப்படி இழுத்துக் கொண்டே போனால் நாம் என்ன வாழ்வதா, சாவதா?
நமக்குத் தெரிந்ததெல்லாம் யாருக்கும் - நாடு இன்று இருக்கும் நிலை பார்த்து - அக்கறையில்லை. அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்குத் தான் நாட்டு நிலைமை சாதகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது!
ஜொகூர் சுல்தான் அவர்களுக்கு நமது கோடான கோடி நன்றிகள்!
சரியான பாதையில் சபா மாநிலம்
கோவிட்-19 தொற்று மிகப் பெரிய அளவில் பரவ காரணமான சபா மாநிலம் இப்போது சரியான பாதையில் செல்கின்றதாகவே நமக்குத் தோன்றுகிறது.
உணவகங்கள் திறக்கப்பட்டு விட்டன. அது நல்ல செய்தி. ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு. அமர்ந்து சாப்பிட நினைக்கும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றும், தொற்று குறைவானப் பகுதிகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அனுமதிக்கப்படுவர். அவர்களும் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும்.
இது ஒரு நல்ல முயற்சி. சுகாதார அமைச்சு சொல்லுகிறதோ, சொல்லவில்லையோ உணவகங்கள் தங்களுக்கு எது நல்லதோ, எது தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமோ அதைத்தான் செய்ய வேண்டும். சுகதார அமைச்சு ஆயிரம் சொல்லலாம் ஆனால் களத்தில் உள்ளவர்கள் தான் அது சரியா என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.
இன்று நாட்டில் தொற்று அதிகம் பரப்பப்படும் இடம் என்றால் அது தொழிற்சாலைகளும், உணவகங்களும் தான். தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்பது முதலாளிகளின் எதிர்ப்பார்ப்பு. ஆனால் அதற்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்களா என்பது தான் பிரச்சனை. வேலை செய்யும் அனைவரும், முதலாளிகள் உட்பட, தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். போட்டிருந்தால் இந்த அளவுக்கு நோய் அதிகரிக்க அவசியமில்லை. தொழிற்சாலைகள் தான் அதிகளவில் தொற்று பரப்பும் இடங்களாக மாறிவிட்டன!
அப்படித்தான் சுகாதார அமைச்சின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன? அது தெரிந்தும் ஏன் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் சரியான கேளவி தானே?
தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் என்ன கூறுகின்றன? தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பெண்களும், வயதானவர்களுமே அதிகமாக இருப்பதாக அவர்களின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அப்படியென்றால் ஆண்களின் பங்கு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் தான் தொழிற்சாலைகளில் அதிகம் பணி புரிகின்றனர். இது யாருடைய குற்றம் என்ற பார்த்தால் முதலாளிகள் தான் குற்றவாளியாகின்றனர்! அவர்களின் பணி முதலாளிகளுக்குத் தேவையாக இருக்கின்றது. அதனால் அவர்கள் தடுப்பூசி போட அனுமதி கொடுப்பதில்லை!
என்ன செய்யலாம்? தடுப்பூசியைத் தொழிற்சாலைகளுக்கே கொண்டு வரவேண்டும்! அதற்கும் முதலாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்! காரணம் எல்லாரும் ஒரே சமயத்தில் நோய் விடுப்பு எடுக்க நேரிடும்! நூறு விழுக்காடு இல்லையென்றாலும் அது சாத்தியமே!
இன்று சிலாங்கூர் மாநிலத்தில் தான் அதிகம் கொரோனா தொற்று தொற்சாலைகளிலிருந்து வருகின்றன.
சபா போன்ற மாநிலங்கள் எப்படி தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றனவோ அதே போன்று மற்ற மாநிலங்களும் எடுக்க வேண்டும்.
நாம் எல்லாக் காலங்களிலும் தொற்றோடு வாழ முடியாது! அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!
Thursday, 12 August 2021
ஏன் இந்த தடுமாற்றம்?
காவல்துறை தடுமாறுகிறதா அல்லது சுகாதாரத்துறை தடுமாறுகிறதா?
கோவிட்-19 தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் பொது மக்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
காவல்துறையின் அறிவிப்பு நிச்சயமாக குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பொது மக்கள் உணவகங்களுக்குப் போவது இப்போது பெயரளவில் குறைந்திருக்கிறது. போகிற அளவுக்கு யாருக்கும் இப்போது துணிச்சலில்லை! கோவிட்-19 எங்கிருந்து தாக்கும் என்கிற பயம் எல்லாருக்கும் உண்டு.
பொதுவாக உணவகங்களுக்குச் செல்வபவர்கள் அங்கு பணியாற்றுபவர்கள் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். காரணம் உணவகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி முக்கியம் என்றே பொது மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் காவல்துறை உணவகப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி தேவை இல்லை என்று கூறியிருப்பது நமக்குச் சந்தேகத்தை எழுப்புகிறது. தேசிய பாதுகாப்பு மன்றமும் இதனை உறுதிப்படுத்துகிறது.
நமக்குள்ள சந்தேகம் எல்லாம் ஒன்று தான். கோவிட்-19 மீண்டும் திட்டம் போட்டு பரப்பப்படுகிறதா? காரணம் இப்போது நாமிருக்கும் சூழலில் சந்தேகம் என்பது தானாக வருகிறது.
இன்னொரு பக்கமும் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. உணவகத்தைத் திறக்கச் சொல்லி அனுமதி கொடுத்தாயிற்று. அதனை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் உணவகப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமில்லை என்று சொல்வதன் மூலம் மக்களைப் போக வேண்டாம் என்கிறார்களா?
அப்படி அரசாங்கம் நினைத்தால் உணவகங்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம்!
அரசாங்கம் சரியான முடிவை எடுக்க வேண்டும். மக்களைக் குழப்ப வேண்டாம்.
உணவகங்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் அனைத்துப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுங்கள். அதுவே உங்களுக்குப் பாதுகாப்பு. வாடிக்கையாளர்களும் அதைத்தான் விரும்பவர்.
அரசாங்கம் இன்று "இல்லை!" என்றால் நாளை "இல்லை அது பொய்!" என்பார்கள்! உங்கள் தொழிலுக்கு எது பாதுகாப்போ அதனைச் செய்யுங்கள்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பதே நமது அறிவுரை!
நாடாளுமன்றம் கலைப்பா?
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்னும் செய்தி பொதுவெளியில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது!
இது நடக்கக் கூடாது என்பது தான் மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்க முடியும். நாம் அடிபட்டவர்கள். ஏற்கனவே சபா தேர்தலின் விளைவுகள் என்ன என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுமட்டும் அல்ல. நாம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள். அதன் பலனை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதார ரீதியில் நாடு திணறிக் கொண்டிருக்கிறது என்பது புது செய்தியல்ல. படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது நாட்டின் பொருளாதாரம். அது பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விடுகிறது! நாட்டின் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்குப் பாதிப்பில்லை!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. பொதுத் தேர்தல் பொது மக்களுக்கு எமனாக அமையும் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
மேலும் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு மாமன்னரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை. நாட்டின் நிலை அறிந்தவர் மாமன்னர். அடுத்த தேர்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இப்போது இருக்கின்ற நிலைமையில் அரசாங்கத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய பிரதமர் தேவை என்றால் அதனையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அல்லது வேறு மாற்றங்கள் கொண்டு வரவேண்டுமென்றால் அதையும் செய்யட்டும். எதைச் செய்தாலும் அடுத்த பொதுத் தெர்தல் வரை ஏதோ ஒன்றை செய்து தான் ஆக வேண்டும்.
ஆனால், எக்காரணத்தைக் கொண்டும், பொதுத்தேர்தல் நடத்த எந்த ஆலோசனையும் தேவையில்லை. பொருளாதாரம் சீர்குலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில் தேர்தல் என்று சொல்லி பல கோடிகளைச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை!
அடுத்த தேர்தல்வரை ஒரு தற்காலிகத் தீர்வு தேவைப்படுகிறது. அது புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதாக இருக்கலாம். இருப்பவரை நீட்டிக்க வைக்கலாம். அதனை மாமன்னர் தான் தீர்மானிக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கலைப்பு என்பது தேவையற்ற ஒன்று!
Wednesday, 11 August 2021
இவர்களையும் கவனியுங்கள்!
அரசாங்கத்தாருக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! இவர்களையும் கவனியுங்கள். அவர்களும் பிழைக்க வேண்டும். பிள்ளைக்குட்டிகளைப் பார்க்க வேண்டும்.
சிகை அலங்காரக் கடைகளைத்தான் சொல்லுகிறேன். கடைகளைத் திறக்கா விட்டாலும் வாடகைக் கட்டித்தான் ஆக வேண்டும். வருமானம் இல்லாமல் எப்படி வாடகைக் கட்டுவது?
பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் திறக்கப்பட்டு அங்கிருந்து தான் கோவிட்-19 அதிகமாகப் பரவுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவைகள் மூடப்படவில்லை.
கடைகள் பத்து வாரங்களாகத் திறக்கப்படவில்லை. திறக்கப்படாமல் இருப்பதைவிட சில நிபந்தனைகளுடன் கடைகள் திறக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.
முதலில் தொழில் செய்பவர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அது கட்டாயம். அடுத்து ஒரே நேரத்தில் இருவருக்கு மேல் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. அந்த வாடிக்கையாளர்களும் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு முடி வெட்டத் தடை விதிக்க வேண்டும். என்ன செய்வது? பாதுகாப்பு என்பது இரு பக்கமும் தேவை. இப்படி செய்வதன் மூலம் ஒன்று தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். இன்னொன்று வெளி நாட்டவர்கள் தடுப்பூசி போடும் வரை பரட்டத்தலையர்களாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள்!
அரசாங்கம் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டும். சிறிய தொழில் செய்பவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்களைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
ஊரடங்கைப் போட்டுவிட்டு குழந்தைகள், பெற்றோர்கள் - இப்படி எவருமே வீட்டைவிட்டு நகரக் கூடாது என்று சொன்னால் அதுவே பெரும் தண்டனை. அப்படி நகராமல் இருந்தும் கூட தொற்றின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. அப்படி என்றால் ஊரடங்கு தோல்வியில் முடிந்ததாகத் தான் பொருள்.
இப்படி தோல்வி அடைந்த ஊரடங்கிற்காக நாட்டு மக்கள் அனைவரும் சிரமத்திற்குள்ளாக வேண்டிய அவசியமில்லை. அனவரும் தங்கள் பிழைப்பைக் கவனிக்க வேண்டிய அவசியமுண்டு.
இனியும் காலம் கடத்துவதில் பயனில்லை. நல்லதொரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் எப்படி நல்ல கவர்ச்சியோடு நாட்டை வலம்வருகிறார்களோ அதே போல மக்களும், குறைந்தபட்சம், பரட்டத்தலையாக இல்லாமல், முடிவெட்டி முகத்தில் விழிப்பது போல வெளிய வரவேண்டும்!
அதற்கு சிகை அலங்காரக் கடைகள் தங்களது தொழிலைத் தொடங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!
ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா
Tuesday, 10 August 2021
பேசலாம் வாங்க!
தங்கத்தை அள்ளும் சீனர்கள்!
இப்போது தோக்கியோவில் நடைப்பெற்று வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் சீனர்கள் தங்க பதக்கங்களை வாரிக் குவிக்கின்றனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
கடைசியில் ஒரு தங்கப்பதக்க வித்தியாசத்தில் சீனா அமெரிக்காவிடம் தோல்வி கண்டது! ஆம்! அமெரிக்காவிற்கு 39 தங்கப்பதக்கங்களும் சீனாவிற்கு 38 தங்கப்பதக்கங்களும் கடைசி நாள் மாற்றமாக அமைந்தது விட்டது. அதுவரை தங்கப்பதக்கங்களை வாரிக் குவித்தவர்கள் சீனர்கள் தான்.
ஆனால் சீனர்கள் இந்தத் தோல்வியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என நம்பலாம். அடுத்த 2024 ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளை இந்நேரம் துவங்கியிருப்பார்கள். அது அவர்களுக்குத் தன்மான பிரச்சனை.
உலகையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்கள் சீனர்கள். பல நாடுகள் இன்று அவர்களது கட்டுப்பாட்டில். பணத்தைக் கடனாகக் கொடுத்தே நாடுகளைப் பிடிப்பவர்கள்! தமிழ்ச் சினிமா படங்களில் நாம் பார்ப்போமே அதாவது பணம் உள்ளவன் ஏழைகளுக்கு உதவி செய்வது போல பணத்தைக் கொடுத்து கடைசியில் அவனது நிலங்களை அப்படியே கபளீகரம் செய்துவிடுவானே அதே பாணி ஆனால் இது உலக அளவில்! இப்படியே அவர்கள் பல நாடுகளைத் தங்களுக்கு அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்!
அப்படிப்பட்டவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அமெரிக்காவிற்கு அடிபணிந்து விடுவார்களா? அடுத்த ஒலிம்பிக் விளையாட்டை இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள்.
சீனாவிற்குப் பல விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. அவர்கள் ஒரே இனம். ஒரே மொழி. அவர்களிடம் மத பாகுபாடு இல்லை. கறுப்பன் வெள்ளையன் பிரச்சனைகள் இல்லை. கிறிஸ்துவன், இஸ்லாமியன், புத்தன், இந்து போன்ற பிரச்சனைகள் இல்லை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி பிரச்சனைகள் இல்லை, தங்கப்பதக்கம் வேண்டும் ஆனால் அதனைப் பெறுபவன் இந்துவாக இருக்க வேண்டும், இஸ்லாமியனாக இருக்க வேண்டும் என்கிற மதம் இல்லை! இதுபோன்ற பிரச்சனைகள் தில்லாத நாடு சீனா. இது போன்ற பிரச்சனைகள் வந்தால் அப்போதே அந்தப் பிரச்சனைக்குச் சமாதி கட்டிவிடுவார்கள்!
இன்றைய அளவில் அமெரிக்கா முன்னணியில் இருக்கக் காரணம் அங்கே கருப்பன், வெள்ளையன், கிறிஸ்துவன், இஸ்லாமியன் என்று பதரப்பட்டவர்கள் விளையாட்டுக்கு என்றே தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கின்றனர். விளையாட்டாளர்களிடையே அர்ப்பணிப்பு உணர்வு இருக்கிறது. பல நாடுகளுக்கு அது இல்லை. அக்கறையும் இல்லை!
அடுத்து அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சீனா முதலாவதாகவர கடும் போட்டியை அமெரிக்காவிற்குக் கொடுக்கும் என நம்பலாம். சீனர்களைப் பொறுத்தவரை எல்லாத் துறைகளிலும் முதலாவதக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவர்கள் போட்டிப் போடுகின்றனர்.
மீண்டும் தங்கத்தை அள்ளுவார்களா? அடுத்த ஒலிம்பிக் தான் பதில் சொல்ல வேண்டும்!
Monday, 9 August 2021
நாடாளுமன்றம் கூடாது!
நாடாளுமன்றம் இந்த மாதமே கூட வேண்டும் என்று சொன்னாலும் அது நடப்பதற்கான வாய்ப்பும் குறைந்து வருகிறது!
நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 88 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் சுகாதார தலைமை இயக்குனர்!
மக்களே! தடுப்பூசி போடுங்கள் என்று நமக்கெல்லாம் புத்தி சொல்லும் நிலையில் இருப்பவர்கள் பாவம்! அவர்களுக்கே நேரம் இல்லாமல் இப்போது, நாடாளுமன்றம் முடங்கிக் கிடப்பது போல, அவர்களும் முடங்கிக் கிடக்கிறார்கள்!
ஏன் இவர்கள் முன்னமையே தடுப்பூசி போடவில்லை? போட்டால் நாடாளுமன்றத்தை முடக்க முடியாமல் போய்விடும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்! அவர்கள் எதிர்பார்த்தபடி நாடாளுமன்றத்தை முடக்கியாகிவிட்டது! நாடாளுமன்றம் இந்த மாதத்தில் கூட வாய்ப்பில்லை!
ஆமாம்! எந்த அளவில், இவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எப்படி நம்புவது? மிகவும் சிக்கலான கேள்வி! சுகாதார அமைச்சு சொல்வதை நாம் நம்பத்தான் வேண்டும்! இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து சுகாதார தலைமை இயக்குனர் சொல்லுவதைத் தானே நாம் நம்பிக் கொண்டு வருகிறோம்! அது போலவே இந்த செய்தியையும் நாம் நம்பத்தான் வேண்டும்!
ஆனால் பெரும்பான்மையோர், அப்படி என்றால் பொது மக்கள், இப்படி ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை நம்பத் தயாராக இல்லை! காரணம், அதென்ன தீடீரென்று இப்படி ஒரு அறிவிப்பு! இதெல்லாம் நாம் நம்பித்தான் ஆக வேண்டுமா? என்கின்றனர்.
நம்பித்தான் ஆக வேண்டும் என்று உங்களை யாரும் வற்புறுத்தவில்லை. அரசாங்கம் அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தான் நல்ல குடிமகன்களுக்கு அழகு! கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை! உரிமை கேட்டால் அப்புறம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எல்லைக்குப் போய்விடும்! காவல்துறையும் களத்தில் இறங்கிவிடும்!
அந்த அளவுக்கு நாம் போக வேண்டாம்! சுகாதார அமைச்சோ, பிரதமரோ, அமைச்சர்களோ யார் சொன்னாலும் தட்டாமல் கேட்டுக் கொள்வோம். அவர்களிடம் தானே தேவையான தகவல்கள் உள்ளன. வேறு யாரிடமும் இல்லையே! அதனால் சொன்னால் புரிந்து கொள்ளூங்கள் . இந்த செய்தியையும் நாம் நம்புவோம்.
நாடாளுமன்றம் நடக்கக் கூடாது என்று ஒரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது! அந்தப் போராட்டம் நடக்கட்டும்! அது நாட்டுப் பற்று!நாம் எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது. அது நாட்டுக்குக் எதிரானது. தேசத் துரோகம்!
அதனால் நாடாளுமன்றம் எப்போது கூடும், கூடாது என்பதெல்லாம் பொது மக்களுக்குத் தேவையில்லாத விஷயம். நடக்கும் போது நடக்கட்டும்! அரசியலை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்! பொது மக்கள் வீட்டில் முடங்கிக்கிடப்போம்!
தமிழகக் கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை!
தமிழகக் கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பது நல்ல செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல எந்த சமூகத்தினரும் அர்ச்சராகலாம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
தமிழ் நாட்டில் "தமிழில்" என்று சொல்லும் போது "அட! இத்தனை நாளா தமிழில் இல்லையா!" என்று ஆச்சரியப்படுவோரும் உண்டு. ஆமாம்! அது தான் உண்மையான நிலை! மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து கடைசியில் அவன் மொழி கூட அவனுக்கு இல்லாமல் போயிற்று!
கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்பது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். ஆனால் அது நீடிக்கவில்லை. ஜெயலலிதா வந்ததும் தானாக தமிழ் மறைந்து போனது!
ஆனால் இப்போது ஸ்டாலின் பதவிக்கு வந்திருக்கிறார். இது தொடரும் என நம்பலாம். இனி பாப்பாத்தி யாரும் வருவதாக இல்லை! ஆனாலும் எடப்பாடி பதவிக்கு வந்தால் ஒரு வேளை அவர் அம்மாவைப் பின்பற்றினால் மீண்டும் ஆப்பு! எடப்பாடிக்குத் தமிழோ, தமிழனோ சோறு போடவில்லை அம்மா தான் சோறு போட்டார்! அவருக்கு அது செஞ்சோற்றுக்கடன்!
தமிழில் அர்ச்சனை நீடீக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனால் தமிழர்களிலேயே, சிவாச்சாரியார்களில் ஒரு பிரிவினர், தமிழில் வேண்டாம் என்பவர்களும் உண்டாம். எங்கே முட்டிக் கொள்வது!
மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து: கடவுளுக்குத் தமிழ் மொழி விளங்கும் என்பது தான். தமிழ் மட்டும் அல்ல கடவுளுக்கு உலகில் உள்ள அத்தனை மொழிகளும் விளங்கும். சமஸ்கிருதம் மட்டும் தான் விளங்கும் என்றால் அவர் கடவுள் அல்ல பசுத்தோல் போர்த்திய புலி!
இந்த நேரத்தில் மேலும் ஒன்று. தமிழ் மொழியில் அர்ச்சனை என்றதும் அதனைக் காலங்காலமாக எதிர்த்து வரும் கும்பல் உடனே அதனைத் தடுக்க தனது வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடும்! அவர்கள் செய்கின்ற வேலைகள் நேரடியாக இருக்காது. எல்லாம் மறைமுக வேலைகள்! ஜாதி பிரச்சனையை உருவாக்குவார்கள். தமிழர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கின்ற வேலையைச் செய்வார்கள். அதற்கான காரணமும் தமிழில் அர்ச்சனை செய்வது தான் என்பார்கள்!
இப்படிப் பல தடைகளைக் கடக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அரசாங்கம் மக்களோடு இருக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்வதை மக்கள் ஏற்றுக் கொண்டால் அதன் பின்னர் எந்த மொழியும் எதுவும் செய்ய முடியாது!
தமிழ் சினிமா கூட தமிழனுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. சமஸ்கிருதத்தில் வழிபாடு, சமஸ்கிருதத்தில் திருமணம், பிராமணன் உயர்ந்தவன் - இப்படியே காட்டிக் காட்டி சமஸ்கிருதத்தையும் பிராமணனையும் உயர்த்திப்பிடிக்கிறது!
இப்படி எல்லாக் காலங்களிலும் தமிழர்களுக்கு எதிராக தமிழ் நாட்டிலேயே தமிழ் மொழி மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்பது இது தானோ?
தமிழில் அர்ச்சனை என்பது நல்ல செய்தி! அது காலங்காலத்திற்கும் தொடர வேண்டும் என்பது நமது செய்தி!
Sunday, 8 August 2021
கொள்கலன் தயார்!
கெடா மந்திரி பெசார் கொள்கலன்கள் தயார் என்கிற அதிர்ச்சி செய்தியை வெளியிட்டிருக்கிறார்! நான் தயார்! நீங்கள் தயாரா! என்பது தான் அவர் எழுப்பியிருக்கும் எதிர் கேள்வி!
பொதுவாகவே கெடா மந்திரி பெசார், சனூசி முகமது நூர், கொஞ்சம் அதிகமாகவே துடுக்குத்தனமாக பேசி பின்னர் வாங்கிக்கட்டுபவர் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை! இதுவரை அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!
உண்மையில் அவரைப்பற்றி நாம் பேசும் போது ஒன்று நமது ஞாபத்திற்கு வரும். "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்கிற மாதிரி!" என்கிற மொழி நமது ஞாபத்திற்கு வரும்!
அவர் சார்ந்த கட்சி எந்தக் காலத்திலும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு ஏற்பட்ட சில குளறுபடிகளால் இவர் மாநிலத்தில் மந்திரி பெசார் என்கிற கெட்ட காலம் ஏற்பட்டது! இப்போதும் மிட்டாய் கடை ஞாபகத்தில் இருப்பது தான் அவருடைய பொறாத காலம்!
நாட்டில் கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பத்தாயிரத்திற்கு மேல் தாண்டிவிட்டது. அவர் மாநிலத்திலும் கணிசமான அளவு இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனாலும் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடித்திருக்கிறார்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட்-19 மரண எண்ணிக்கையைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியது போது அவர் இப்படி பதிலளித்திருக்கிறார்: "இறந்தவர்களின் உடலை வைத்திருக்க போதுமான கொள்கலன்கள் உள்ளன. உள்ளே போக விரும்புவோர் பெயரைக் கொடுக்கலாம்" அவர் சொன்னதிலிருந்து ஒன்று நமக்கு விளங்குகிறது. "நான் பெயரைக் கொடுத்துவிட்டேன்! நீங்களும் பெயரைக் கொடுங்கள்!" என்பதாக நாம் எடுத்துக் கொள்கிறோம்!
இவரைப் போன்ற மனிதர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. வழிபாட்டுத்தலங்களை உடைத்து நொறுக்கிய மனிதர்கள் பொதுவாக கொடூர மன படைத்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களில் இவரும் ஒருவர். இவர்கள் மற்றவர்களின் துயரத்தில் இன்பம் காண்பவர்கள்!
இவருக்கு என்ன சொன்னாலும் உறைக்கப்போவதில்லை. பதவியில் இருந்தாலும் புத்தி என்னவோ புழுதியில் தான் இருக்கும்!
கொள்கலன் தயார்! அவருக்கும் சேர்த்துத் தான்!
தொற்று என்பது புதிதல்ல!
இப்போது உலகத்தை ஆட்டிப்படைக்கின்ற வியாதி எது என்று கேட்க வேண்டிய அவசியமில்லை!
அனைவரும் அறிந்தது தான். இதற்கு முன்னர் புற்று நோய் என்றார்கள். இரத்த அழுத்த நோய் என்றார்கள். இந்த நோய்கள் தான் மலேசியர்களை அதிகம் பாதிக்கும் நோய் - நாட்டில் முதலாவது இடத்தில் உள்ள நோய்கள் என்றார்கள். ஆனால் இந்த இரண்டையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது கோவிட்-19! நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது!
இந்த நேரத்தில் புற்று நோய்க்கோ, இரத்த அழுத்த நோய்க்கோ சிகிச்சைப் பெறப் போனால் கோவிட்-19 யும் சேர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்! அந்த அளவுக்கு டாக்டர்கள் வெறி பிடித்து, நிம்மதியின்றி அலைகிறார்கள்! அவர்கள் பிரச்சனைகளை யார் அறிவார்? வெளியே சொல்ல முடியவில்லை!
கோவிட்-19 தொற்றினால் உலகளவில் இது வரை கிட்டத்தட்ட 43 இலட்சம் பேர் இறந்திருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்னர், 1918-ல் ஏற்பட்ட Spanish Flu என்கிற பெருந்தொற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட ஐந்து கோடியிலிருந்து பத்து கோடி வரை உலகளவில் மக்கள் இறந்திருக்கக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தத் தொற்று இரண்டு ஆண்டுகள் நீடித்தன.
ஆக பெருந்தொற்று என்பது, வருவதும் போவதும், சாவதும் மனித குலத்திற்குப் புதிதல்ல. அது எல்லாக் காலங்களிலும் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற பெருந்தொற்றுகள் மனித இனத்தைத் தேடிவந்து கொஞ்சம் தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு "ரொம்ப ஆடாதே!" தென்று சொல்லிவிட்டுப் போவதுண்டு! இப்போது நமது முறை! நமக்கு இரண்டல்ல மூன்று தட்டுத் தட்டிவிட்டுப் போகத்தான் கோவிட்-19 வந்து மனிதர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது! எதிர் கொள்ளத்தான் வேண்டும்! நம் ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா!
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த Spanish Flu காலக்கட்டத்தில் இப்போது இருக்கின்ற மருத்துவ வசதிகள், விஞ்ஞான வளர்ச்சி என்பதெல்லாம் குறைவு. அதனால் மரண எண்ணிக்கை கோடிகளாக இருந்தன. ஆனால் இப்போது உள்ள நவீன வசதிகள் கோவிட்-19 வை வெகுவாகக் குறைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். சும்மா ஓர் எதிர்ப்பார்ப்பு தான்! ஆனால் எமதர்மனின் லீலைகளை யார் அறிவார்!
ஆக, இந்தத் தொற்றினால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். நமது அறிவுக்கு எட்டாததெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? ஒரே ஒரு வழி தான் உண்டு. நமது சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அதைச் செய்யுங்கள். இது மட்டும் தான் நமக்குள்ள ஒரே வழி. ஊசி போடச் சொன்னால் ஊசி போடுங்கள். தேவையற்ற கேள்விகளைக் கேட்டு நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள். என்ன மருந்து என்பதை சுகாதார அமைச்சு முடிவு செய்யும். அவர்களும் உலக சுகாதார நிறுவனம் சொல்லுவதைத்தான் நமக்குத் தெரிவிக்கிறார்கள்.
எதிர்காலத்தில் மனித குலம் தொற்று நோயோடு தான் வாழ வேண்டும்!
Saturday, 7 August 2021
இனி மாமன்னரின் பொறுப்பு!
இனி வேறு வழியில்லை என்கிற நிலை வந்துவிட்ட பிறகு டாக்டர் மகாதீர் இப்போது தான் வாய் திறந்திருக்கிறார்!
ஆம், இனி நாட்டின் எதிர்காலம் மாமன்னரின் கையில் தான் என்கிற நிலைமைக்கு அவர் வந்துவிட்டார்.
மாமன்னர் கையில் என்பது அவர் கருத்து மட்டும் அல்ல. பொதுவாக அது தான் மலேசியர்களின் கருத்து. மலேசிய மக்களும் இவர்களின் அரசியல் சண்டைகளைப் பார்த்து "போதும்! போதும்!" என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள்!
இவர்களின் அரசியல் சண்டையினால் நாட்டுக்கு என்ன நஷ்டம்? கொஞ்சம் அல்ல, நிறையவே நஷ்டம்! இன்று நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 என்பதே இவர்களின் கைங்கரியம் தான். தங்களின் பதவிக்காக அதனை வளர்த்து விட்டவர்கள் இவர்கள். மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இல்லாத ஒன்றை இழுத்துக் கொண்டு வந்தவர்கள் இவர்கள்!
இன்று நாட்டில் எத்தனை பிரச்சனைகள்? அதனை இவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்களே, இவர்கள் தானே காரணம்? மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. பலவிதக் கட்டுப்பாடுகள். மக்கள் தங்களுடைய வேலைகளை இழந்து இன்று பட்டினி கிடக்கிறார்களே அதற்கு இவர்கள் தானே காரணம்.
மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல். குழந்தைகள் ஆடி அடி விளையாட முடியாத சூழல். பெற்றவர்கள் வேலைக்குப் போக முடியாத சூழல். சம்பளம் இல்லை. கையில் காசு இல்லை. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் வரும் மனவியாதி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் B40 நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
நாம் இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்கப் போவதில்லை. அதெல்லாம் பயனில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம்.
நமக்குத் தேவையெல்லாம் நல்லதொரு ஆட்சி/ அது மாமன்னரால் மட்டுமே முடியும் என்பதே மக்களின் கருத்து. அரசியல் சட்டம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படத் தயாராயில்லை. சட்டம் எதையோ சொல்லட்டும். மாமன்னரைக் கூடவா சட்டம் எதிர்க்கும்? அவர் தானே நாட்டின் முதல் குடிமகன். அவர் ஏன் ஆட்சியைக் கையில் எடுக்கக் கூடாது என்பது தான் நமது கேள்வி.
அடுத்த பொதுத் தேர்தல் வரும்வரை நாடு மாமன்னரின் பொறுப்பில் இருக்க வேண்டும்!
ஏன் தமிழக மீனவர்கள்?
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கப் போகும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் வலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. அவர்களின் படகுகள் அபகரிக்கப்படுகின்றன. மீனவர்கள் சுடப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர்.
இப்படித்தான் தமிழக மீனவர்கள் பலகாலமாக இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுகின்றனர்.
ஒரு கேள்வி நமக்குண்டு. இந்திய மீனவர்கள் என்கின்ற போது அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஒரு வேளை அவர்கள் சிறைப் பிடிக்கபடலாம். அத்து மீறினார்கள் என்றால் சிறைப்பிடிப்பது மட்டும் தான் பெரும்பாலும் அவர்களுக்கான தண்டனை. சுடப்பட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ இந்திய அரசாங்கம் அந்த நாட்டின் மீது கடுமையாகக் குரல் கொடுக்கும்.
ஆனால் தமிழக மீனவர்கள் என்றால் இந்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் குறிப்பாக அவர்கள் தமிழக மீனவர்கள் என்கிற பட்டியலில் வருகிறார்கள். அப்படியென்றால் அவர்களை இந்திய அரசாங்கம் இந்திய மினவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக அரசாங்கம் அவர்களைத் தமிழக மீனவர்களாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவதில்லை!
இதற்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது? எல்லா மாநில மீனவர்களின் எல்லை மீறல் பிரச்சனைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. அவர்கள் இந்திய மீனவர்கள். தமிழ் நாட்டில் மட்டும் அவர்கள் தமிழக மீனவர்கள். ஏன் இந்த தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மாற்றிக்கொள்ளக் கூடாது? இந்திய மீனவர்கள் என்றால், தாக்குதல்கள் நடக்கும் போது, அதனை இந்திய அரசாங்கம் கண்டிக்கிறது. அது தானே தமிழக மீனவர்களுக்கு வேண்டும். இன்றைய நிலையில் பாவப்பட்ட தமிழக மீனவர்கள் மீது யாரும் எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்ளவில்லை.
இதில் வெறும் பெயர் மாற்றம் தானா என்பது நமக்குத் தெரியவில்லை. மாநில அரசாங்கத்திற்கு, மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என்று எப்படி பெயர் மாற்றம் செய்ய முடிந்ததோ அதே போல தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாதா? அப்படி செய்வதால் தமிழக மீனவர்கள் இந்திய அரசாங்கத்தின் கீழ் தானே வருகின்றனர், நல்லது தானே!
உண்மை நிலவரம் நமக்குத் தெரியவில்லை. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என்பதால் தமிழ் நாட்டுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் இந்திய மீனவர்களாகவே இருக்கட்டும்! அப்படியாவது கொலைகளைத் தவிர்க்கலாம் அல்லவா!